

சுதா, ஜெயா,
திருநங்கைச் செயற்பாட்டாளர்கள்
சென்னை காவல்துறை, நடிகர் லாரன்ஸ் ஆகியோர் வழங்கிய நன்கொடை மூலம் வாங்கப்பட்ட பொருட்களை ‘சகோதரன்’ தன்னார்வ அமைப்பு மூலம் முறையாக அனுமதிபெற்ற வாகனத்தில் சென்றும், தன்னார்வத் திருநங்கைகள் உதவி யுடனும் பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் அளித்து வருகிறோம். முதல் முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சென்னை, சென்னையை அடுத்துள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அவர் களுடைய இருப்பிடங்களுக்கே சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.
இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது, தனி மனிதர், திரைத் துறையினர், கார்ப்பரேட் நிறுவனத்தினர் போன்றோர் அளித்த பங்களிப்புடன் ‘மிலாப்’ எனும் திரள்நிதிச் செயலி வழியாகவும் நிவாரண நிதியைத் திரட்டி ஏறக்குறைய ஆயிரம் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் போன்றவற்றுடன் அடிப்படைத் தேவைக்கான உதவியையும் செய்துவருகிறோம்.
நண்பர்கள் மூலம் பத்து மாவட்டங்களில் உள்ள திருநங்கைகள் பயன்படுத்தும் வகையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றைக் கொடுத்தோம். இதற்காகத் தமிழகம் முழுவதும் நாங்கள் பயணம் சென்றபோது, திண்டுக்கல்லில் பெற்ற அனுபவம் மறக்க முடியாதது. நண்பர் ஒருவர் மூலமாக திண்டுக்கல் ரெட்டியாபட்டி பகுதியில் வாழும் 13 திருநங்கைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக 15 ஆயிரம் ரூபாயைத் தந்தோம். அவர்கள் 13 ஆயிரத்தில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பகிர்ந்துகொண்டு, மீதிப் பணத்தை அந்தப் பகுதியில் வசிக்கும் பார்வையற்றவர்களுக்குக் கொடுத்து உதவியது எங்களை நெகிழ வைத்தது. எங்கள் செயல்படும் வேகத்தை கரோனா காலம் அதிகரித்திருக்கிறது.
தொகுப்பு: வா. ரவிக்குமார்