

பிருந்தா சீனிவாசன்
உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனாவின் பெயரால் பொருளாதார முடக்கம், வேலை பறிப்பு, ஊதியக் குறைப்பு, அதிகரிக்கும் பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறை என்று பல்வேறு சுழல்களுக்குள் மக்கள் சிக்கிக்கொண்டு தவிக்கிற நிலையில் கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வதுதான் இப்போதைய ஒரே வழி என்று அரசும் சொல்லத் தொடங்கிவிட்டது. கரோனா தொற்று ஏற்பட்டால் குணப்படுத்தவோ வராமல் தடுக்கவோ மருந்து, மாத்திரைகள் இல்லாத நிலையில் கரோனா தொற்றை எதிர்கொண்டு வாழ்வது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “துணிவுதான் கரோனாவை வெல்லும் மந்திரம்” என்று சொல்லும் அனிதா, தானும் தன் கணவரும் கரோனாவைக் கடந்துவந்த வெற்றிக்கதையையே அதற்குச் சான்றாக்குகிறார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த அனிதாவுக்கு 60 வயது. இவரும் 65 வயதான இவருடைய கணவரும் மார்ச் 15 அன்று நியூஸிலாந்தில் இருந்து சென்னை திரும்பினர். அப்போது இந்தியாவுக்குள் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருந்தது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி அனிதாவும் அவருடைய கணவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டனர். இரண்டு நாட்கள் கழித்து இருவருக்கும் காய்ச்சல் கண்டது. அப்போது அனிதா செய்த முதல் வேலை தன் வீட்டில் வேலை செய்தவர்களுக்கு விடுப்பு அளித்ததுதான். ஒருவேளை தங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது அவர்களையும் தாக்கக்கூடும் என்று நினைத்தார்.
பயணத்தால் விளைந்த தொற்று
அனிதாவுக்குக் காய்ச்சலுடன் வயிற் றோட்டமும் இருந்தது. மருத்துவரிடம் ஆலோசித்தபோது, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வரும்படி அவர் சொல்லியிருக்கிறார். அதனால் காய்ச்சலை மட்டுப்பட்டுத்துவதற்கான மாத்திரைகளை இருவரும் எடுத்துக்கொண்டனர். அனிதாவுக்கு ஐந்து நாட்களில் காய்ச்சல் குறைந்துவிட, அவரு டைய கணவருக்கோ ரத்த அழுத்தம் குறைந்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள் ளனர். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
“நாங்கள் விமானத்தில் வந்தபோது எங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்தி ருந்தவர் தொடர்ந்து இருமியபடியே இருந்தார். எனக்கு அப்போதே சந்தேகமாக இருந்தது. வீடு திரும்பிய இரண்டே நாட்களில் எங்களுக்குக் காய்ச்சல் வந்ததும் என் சந்தேகம் அதிகமானது. ஆனால், நாங்கள் பயப்படவில்லை. எது வந்தாலும் எதிர்கொள்ளும் துணிவுடன் இருந்தோம். என் கணவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பிறகு பதினோரு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். இரண்டு முறை செய்யப்பட்ட பரிசோதனைகளிலும் கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே அவர் வீடு திரும்பினார்” என்று சொல்லும் அனிதா, மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் சுற்றியிருப்பவர்களின் புறக்கணிப்புக்கும் வெறுப்புக்கும் தாங்கள் ஆளாகவில்லை என்கிறார்.
மாநகராட்சியின் பணி நேர்த்தி
அனிதாவின் கணவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவுடன் அவர்களது வீட்டைச் சுற்றியுள்ள ஆறு தெருக்களை உள்ளடக்கிய பகுதியைத் தனிமைப்பகுதியாக மாநகராட்சி அறிவித்தது. தங்களால் தங்கள் பகுதி மக்களும் சிரமப்படுகின்றனரே என்ற அனிதாவின் கலக்கத்தைத் தங்கள் அன்பால் துடைத்தெறிந்தனர் அப்பகுதி மக்கள். அனிதாவுடைய மகளும் மகனும் வெளிநாட்டில் வசிக்க, தனித்திருக்கும் இவர்களின் நிலையைச் சுற்றியிருக்கிறவர்கள் புரிந்துகொண்டனர். இவர்கள் குடியிருக்கும் பகுதியில் வசிப்போரை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழுவில் பலரும் இவர்களது நலன் குறித்து விசாரித்ததுடன் ஆறுதலும் சொல்லியிருக்கின்றனர். இந்த அக்கறை இவர்களை மனத்தளவில் திடப்படுத்தியிருக்கிறது.
“என் கணவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதும் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து போன் செய்து எங்கள் உடல், மன நலன் குறித்து விசாரிப்பதும் ஆலோசனை சொல்வதுமாக இருந்தனர். என் கணவர் குணமாகி வீடு திரும்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்தன. கிட்டத்தட்ட ஐம்பது நாட்களாக நலன் விசாரித்தனர். சில நேரம் ஒரே நாளில் நான்கு முறைகூடப் பேசுவார்கள். ஒரு வகையில் மாநகராட்சி ஊழியர்களின் இந்த அக்கறையான அணுகுமுறைகூட எங்களை வலுப்படுத்த காரணமாக இருந்தது. நாங்கள் தனியாக இல்லை என்கிற உணர்வைத் தந்தது” என்று மாநகராட்சி ஊழியர்களின் பணி நேர்த்தியை அனிதா வியக்கிறார்.
ஆரோக்கிய உணவு அவசியம்
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களில் பெண்களைவிட ஆண்களே அதிகம் என்பதற்கு அனிதாவின் வீடும் விதிவிலக்கல்ல. அனிதாவைக் காய்ச்சல் மட்டுமே தாக்கியது. அவருடைய கணவரையோ காய்ச்சல், இருமல், ரத்த அழுத்தக் குறைவு, எடைக் குறைவு போன்றவையும் தாக்கின. சீரான உணவு முறையால் இந்தப் பாதிப்புகளிலிருந்து கணவரை மீட்டார் அனிதா.
“மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவர் நான்கு கிலோ குறைந்துவிட்டார். மிகவும் சோர்ந்துவிட்டார். அதனால், ஆரம்பத்தில் அரிசிக் கஞ்சியை மட்டுமே கொடுத்தேன். பத்து நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பிற உணவு வகைகளைச் சேர்த்தேன். புரதச் சத்து தேவை என்பதற்காக எலும்பு சூப், முட்டை போன்றவற்றைக் கொடுத்தேன். இவற்றுடன் வழக்கமான உணவு முறைக்கு மாறினோம். அவற்றிலும் எண்ணெய், காரம் இரண்டையும் குறைவாகச் சேர்த்தேன்” என்று சொல்லும் அனிதா எந்தச் சூழலிலும் தான் அச்சப்படவில்லை என்கிறார்.
“இள வயதினரே கரோனாவிலிருந்து மீண்டுவர சிரமப்படும்போது மூத்த குடிமக்களான நாங்கள் இதை எப்படித் தனித்து எதிர்கொள்வோம் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், நான் பதற்றப்படவே இல்லை. உலகம் முழுவதும் நடக்கிறவற்றைப் பார்த்தால் நம்மால் கரோனாவிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்தே இருந்தேன். அதை எதிர்கொண்டு வாழப் பழகத்தான் வேண்டும். இதில் அச்சப்பட்டு மட்டும் என்னவாகிவிடப் போகிறது? அதைவிட அதைத் துணிந்து நின்று எதிர்க்கலாமே.
சுத்தமும் சுகாதாரமும் நமக்குத் துணை நிற்கும். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகளின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. ஆஸ்துமா, நீரிழிவு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக கரோனாவை வெல்வோம் என்ற மன உறுதி அவசியம்” என்று அனிதா சொல்லும் வார்த்தை ஒவ்வொன்றும் அனுபவ உண்மை.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் கரோனாவை எதிர்கொள்ளும் சூழலில் இருக்கும் அனைவருக்குமே நம்பிக்கை தரும் உற்சாகத் தம்பதியாக இவர்கள் இருக்கிறார்கள். ஆரோக்கிய உணவும் சுகாதாரமும்தான் கரோனாவை எதிர்கொண்டு மீள்வதற்கான அடிப்படைத் தேவை என்று மருத்துவர்கள் தொடர்ந்து சொல்லிவருவதைத்தான் அனிதா தம்பதியின் அனுபவமும் உணர்த்துகிறது. இந்த அடிப்படைத் தேவை அனைவருக்கும் கிடைப்பதை மத்திய – மாநில அரசுகள் உறுதிப்படுத்திவிட்டால் கரோனாவை வெல்வது அனைவருக்கும் எளிது.
கட்டுரையாளர், தொடர்புக்கு : brindha.s@hindutamil.co.in