

ஜோதிமணி,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்
நான்காம் கட்டமாகத் தொடரும் ஊரடங்கால் சாப்பாடு கிடைக்கவில்லை, தண்ணீர் வரவில்லை, மருத்துவ உதவி தேவை எனக் காலையிலேயே அழைப்புகள் வரத் தொடங்கிவிடும். அவற்றுக்குப் பதில் சொல்லிவிட்டு காலை எட்டு மணிக்குப் புறப்பட்டுவிடுவேன். மாவட்ட மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் கரோனா மருத்துவப் பணிகள் மேற்கொள்ளப்படும் விதம் குறித்து அறிந்துகொள்வேன்.
உணவு இல்லாமல் தவிக்கும் முதியவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், திருநங்கைகள், குழந்தை களுடன் வாழும் தனிப்பெண்கள் ஆகியோருக்கு நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் பணிகளைக் கட்சியினருடன் சேர்ந்து செய்துவருகிறோம். அடிப்படைத் தேவைகள் ஏதும் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் சூழ்நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்படும் ஊரடங்கை எப்படிச் சமாளிப்பார்கள்? பெரும்பான்மை ஏழை மக்களால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.
அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும். என்னுடைய தொகுதியின் களநிலவரத்தை அடிப்படையாகக்கொண்டு முதல்வருக்கு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. இன்றைக்கு உள்ள விலைவாசியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மட்டும் ரூ.800-க்கும் மேல். இதில் மீதமுள்ள தொகையை வைத்து மக்கள் என்ன செய்வார்கள் என்பதை ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.
சமீபத்தில்தான் எனக்கு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஒரு மாத ஓய்வு வேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்திருந்த போதிலும் அறுவைசிகிச்சை முடிந்த எட்டாம் நாள் என் அன்றாடப் பணிக்குத் திரும்ப வேண்டியதாக இருந்தது. ஓய்வுக்கு எங்கே நேரம் இருக்கிறது? இன்றைக்கு என்னைவிட, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவற்றைச் சரிசெய்ய வேண்டியது என் கடமை. அனைத்து வேலைகளும் முடிந்து வீட்டுக்குச் செல்ல இரவு பதினோரு மணி ஆகிவிடும்.
இதுபோன்ற சூழ்நிலையில் ஒரே அறுதலாக இருப்பது நிவாரணப் பொருட்கள் கொடுக்கச் செல்லுமிடங்களில் உள்ள குழந்தைகளிடம் பேசுவதுதான். அந்தச் சிறு உரையாடல்தான் என் மனவுளைச்சலுக்கு ஆறுதலாக உள்ளது. ஊரடங்கு தொடங்கியதில் இருந்து மக்களுடன் தொடர்ந்து களத்தில் இருப்பதால் அவர்களுடைய பிரச்சினைகள் நேரடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. முடிந்த அளவு உதவ முடிகிறது. ஆட்சியாளர்களும் களத்துக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொண்டு தீர்வைத் தர வேண்டும்.
தொகுப்பு: ரேணுகா