பெண்களைத் தாக்கும் மற்றுமொரு பேரிடர்

பெண்களைத் தாக்கும் மற்றுமொரு பேரிடர்
Updated on
1 min read

வா.ரவிக்குமார்

ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மருந்துக் கடைக்குச் செல்லும் பெண்கள் ‘மாஸ்க்19’ இருக்கிறதா என்று கேட்பார்களாம். இதற்கு என்ன பொருள் தெரியுமா? குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க எங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவுங்கள் என்று கேட்பதற்கான சங்கேத வார்த்தைகள் அவை.

கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கும் பேரிடர், குடும்ப வன்முறையைத் தீவிரமாக்கியிருக் கிறது என்பதற்கு வலுச்சேர்க்கும் பல சம்பவங்கள் சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளன. இந்தியாவிலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதைத் தேசிய மகளிர் ஆணையம் உறுதிசெய்துள்ளது. குடும்ப வன்முறையை ‘உலகளாவிய நிழல் பேரிடர்’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் பேரிடரை எதிர்கொள்ள வீட்டில் இருப்பதுதான் பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வீடு பாதுகாப்பானது அல்ல என்பதே உண்மை. குடும்ப வன்முறையால் பலதரப்பட்ட கொடுமைகளுக்குப் பெண்கள் உள்ளாகின்றனர். ஆபாசமான வார்த்தைகளால் பெண்களைத் திட்டுவது, வீட்டுச் செலவுக்குப் பணத்தைக் கொடுக்காமல் அலைக்கழிப்பது, உளவியல்ரீதியான துன்புறுத்தல்கள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் எனப் பலதரப்பட்ட கொடுமைகள் புகார்களாகப் பதிவாகிவருகின்றன.

இதுவும் பேரிடர் மீட்புதான்

இந்தியாவில் குடும்ப வன்முறை குறித்த புகார்கள் மட்டும் 2020 ஜனவரியில் 270, பிப்ரவரியில் 302 என்ற அளவில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு வந்திருக்கின்றன. ஆனால், மார்ச் 23 முதல் 30வரையிலான ஏழு நாட்களில் மட்டும் 291 புகார்கள் வந்திருக்கின்றன. குடும்ப வன்முறையின் தீவிரத்தை இதுவே உணர்த்துகிறது. இந்த ஊரடங்கு நாட்களில் குடும்ப வன்முறைக்கு எதிராகப் பெண்கள் வெளியே வந்து பேசுவதும் முடியாது. இந்த நிலை உலகம் முழுவதும் இருப்பதைத் தன்னுடைய செய்தித்தாள் கட்டுரை ஒன்றில் பதிவுசெய்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.

போக்குவரத்துக்கு வழியில்லாத சூழலில் தங்கள் பிறந்த வீட்டுக்கும் பெண்களால் செல்ல முடியாது. கரோனா பேரிடர் பணியில் இருப்பதால் குடும்ப வன்முறை குறித்த புகார்களைக் கவனிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ காவல் நிலையங்கள் பெரிதும் தயாராக இல்லை.

பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும்போது அவர்களுக்குத் தேவையான உதவியளித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும்கூட கரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு இணையானதுதான் என்பதை அரசு உணர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in