

அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். ஊரடங்கு நாட்களிலும் மூன்று தமிழ் நாளிதழ்களை வாசிக்கிறோம். புத்தகங்களை வாசிக்கவும் தவறுவதில்லை. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘தடைகள் தாண்டிப் பாயும் நதி’, ‘நம் மக்கள் நம் சொத்து’, ‘இந்தியாவும் உலகமும்’ ஆகியவற்றை வாசித்து முடித்தேன். டாக்டர் காமராஜ் எழுதிய ‘இனிது இனிது வாழ்தல் இனிது’ நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.
எங்கள் வீட்டு நூலக அறையில் 300 நூல்கள்வரை உள்ளன. என் மகன் எங்கள் தொகுப்பில் உள்ள ‘மாயா பஜார் இதழ்கள், புதிர் புத்தகங்கள், நன்னெறிக் கதை நூல்களை வாசித்துவருகிறான். அரிசி உணவைக் குறைத்துவிட்டோம். வயிறு முட்டச் சாப்பிடுவதில்லை.
தினமும் ஒரு மணி நேரம் மட்டும் குட்டித் தூக்கம் உண்டு. சிறுதானிய உணவு, தின்பண்டங்கள், உலர்பழங்கள், பழங்கள், நெல்லி, சுக்குக் காபி, கிரீன் டீ, எலுமிச்சை, நன்னாரி சர்பத் என்று ஆரோக்கிய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்துவருகிறோம்.
மொட்டை மாடியில் நடை, எளிய உடற்பயிற்சி போன்றவற்றுடன் அரை மணி நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக்கொள்கிறோம். வீட்டுத் தோட்டத்தில் கொஞ்ச நேரம் செலவிடுகிறோம். வேதனையை அதிகரிக்கிறது என்பதால், டி.வி.யில் கரோனா குறித்த செய்தியை அதிக நேரம் பார்ப்பதில்லை. தாயம், ஆடு புலி ஆட்டம், செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளுக்கும் இடம் உண்டு. சுழற்சி அடிப்படையில் உறவுகளுடன் பேச தினம் ஒரு மணி நேரம் செலவிடுகிறோம்.
பழைய திரைப்படங்களைப் பார்த்து அக்கால வாழ்க்கை முறை பற்றி மகனுக்கு விளக்க நேரம் கிடைக்கிறது. பல மாதங்களாகச் செய்யாமல் உள்ள வீட்டு வேலைகளை முடிக்க நேரம் கிடைத்துள்ளது. மூன்று ஆண்டுகளாகச் சேகரித்து வைத்திருக்கும் ‘பெண் இன்று’ இதழ்களை எடுத்துப் படிக்கும் வகையில் முறையாக அடுக்கிவைக்க முடிந்தது.
தேவையின்றி வெளியே சுற்றுபவர்களைப் பார்க்கும்போது, போதிய விழிப்புணர்வும் பயமும் இன்றி அவர்கள் இருப்பதை அறிந்து மனம் வேதனையடைகிறது. ஊரடங்கு பல வதந்திகளைப் பரப்புகிறது என்பதால் ஸ்மார்ட் போனில் மிகக் குறைவான நேரத்தையே செலவிடுகிறேன். தகவல்களை அதிகம் பகிர்வதில்லை. இந்த ஊரடங்கு பலருக்கும் பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. நாம் வாழும் இந்தப் பூமியை மதித்து புறச் சுத்தம், தன் சுத்தம், சூழலியல் போன்றவற்றைப் பேணுவது அவற்றில் முக்கியமானது.
| உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
- மா.தங்காகண்மணி, பழநி சாலை, செம்பட்டி.