

இந்த ஊரடங்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகளைத் தந்தாலும், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பது தனிச் சுகமே. பெரியவன் சுந்தரேசன் எட்டாம் வகுப்புக்குப் போகிறான். ஐந்தாம் வகுப்பில் நுழையும் நவநீதனோ அண்ணனுக்குச் சளைத்தவன் அல்ல. விடுமுறையால் 7:30 மணிக்குத்தான் பொழுது விடிகிறது. சிறிது நேரம் யோகா, பிறகு திருக்குறள் படிப்பது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வாசித்தல், வீட்டில் உள்ள தமிழ், ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தல், புதன்கிழமை என்றால் ‘மாயா பஜார்’ பக்கத்தை முதலில் யார் வாசிப்பது என்பதில் சிறு சண்டை என்று இருவரும் வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர்.
காலை உணவுக்குப்பின் சுந்தரேசன் மிருதங்கம் வாசிக்க, நவநீதன் பாடுவான். இடையிடையே வீட்டையே கால்பந்து மைதானம் ஆக்குவார்கள். ஜன்னலைத் துடைப்பது, வீட்டைப் பெருக்குவது, தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறிப்பது போன்ற வேலைகளையும் பொறுப்புடன் செய்வார்கள். ஓவியம் வரைவதில் இருவருக்குமே ஈடுபாடு என்பதால், தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன்களையோ இயற்கைக் காட்சிகளையோ வரைவார்கள்.
மாலை நேரத்தில் மிதிவண்டி ஓட்டுவது, தோட்ட வேலை பார்ப்பது என்று சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அவ்வப்போது உலக நடப்பைச் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டு கரோனா பாதிப்பை நினைத்துக் கவலைகொள்வதும், அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுவதும், பொதுமக்கள் சிலரது பொறுப்பற்ற போக்குக்கு வருந்துவதுமாக நேரத்தைக் கழிக்கிறார்கள்.
இரவில் சிறிது நேரம் படிப்பு. பின் நானும் என் கணவரும் அவர்களுடன் தாயம், கேரம் விளையாடுவது, உறவினர்கள், நண்பர்களிடம் நலம் விசாரிப்பது என அவர்களைச் சமாளிக்க வேண்டிய தேவையின்றிப் பொழுது கழிகிறது. சவால்களை எதிர்கொள்ளவும் சமுதாயப் பணிகளில் ஈடுபடவும் அவர்களை ஆயத்தப்படுத்துவதே என் வேலை.
| உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். மின்னஞ்சல் முகவரி: penindru@hindutamil.co.in |
- சி. மூகாம்பாள், சாக்கோட்டை, கும்பகோணம்.