

ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்
என் வீட்டின் கீழ்த்தளத்திலேயே என் அலுவலகம் இயங்குவதால் அலுவலகம் சார்ந்த வெளிவேலைகள் மட்டுமே தடைப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கைப் பலரும் விடுமுறை என்றே நினைத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்களில் பெண்களுக்கான வேலைச்சுமை அதிகரித்துள்ளது. பெரும்பாலான ஆண்கள் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையை மட்டும் செய்கிறார்கள். பெண்களோ அலுவலக வேலை, வீட்டு வேலை இரண்டையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுதான், இந்த ஊரடங்கில் எங்களுடைய முக்கியமான வேலை. சிறு குழந்தைகள் வீட்டில் இருப்பதால், கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. இதுவரை குழந்தைகளிடம் செலவழிக்கத் தவறிய நாட்களை இந்த ஊரடங்கில் அவர்களுடன் இருப்பதன் மூலம் நேர்செய்துவிட நினைக்கிறேன். சமையல் வேலையைப் பெரும்பாலும் மருமகள் செய்துவிடுவதால், தேவையான உதவியை மட்டும் செய்கிறேன்.
எங்களுடைய ‘புதிய குரல்’ அமைப்பின் குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மே மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். தற்போது அதை நடத்த முடியாத நிலையில், இணையம்வழியாகக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். ஊரடங்குக்கு முன்புவரை குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாதான் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. அதனால், ‘இந்திய குடியுரிமைச் சட்டம்: எதிர்வரும் ஆபத்து’ என்ற தலைப்பிலான புத்தகத்தை எங்கள் அமைப்பின் சார்பில் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம்.
அதற்கான உள்ளடக்கப் பணிகளை முழு வேகத்துடன் முடித்திருக்கிறோம். ‘கைத்தடி’ பண்பலையில் ‘பெண்கள் வரலாறு’ என்ற தலைப்பில் பொ.ஆ.மு. (கி.மு.) 7-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. (கி.பி.) 20-ம் நூற்றாண்டுவரையிலான பெண் ஆளுமைகள் குறித்த நிகழ்ச்சியில் பேசிவருகிறேன். ஐந்து நிமிட உரை என்றாலும், அதற்கான தேடல் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடியது.
இந்தக் காலகட்டத்தில் அரசின் நடவடிக்கைகளைக் கவனித்துவருவதுடன் கரோனா குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களைக் கண்டறிந்து அவற்றுக்குப் பதில் சரியான தகவல்களை முகநூல் வாயிலாகப் பதிவுசெய்துவருகிறேன். நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘முதல் பெண்கள்’, லட்சுமி அம்மாள் எழுதிய ‘லட்சுமி எனும் பயணி’ புத்தகங்களைப் வாசித்தேன். பெண் வரலாறு குறித்த புத்தகங்களைத் தேடிப் படித்துவருகிறேன்.
தொகுப்பு: ரேணுகா