கரோனாவை வெல்வோம்: கரோனாவை வெல்லும் போராளிப் பெண்கள்

கரோனாவை வெல்வோம்: கரோனாவை வெல்லும் போராளிப் பெண்கள்
Updated on
2 min read

சசித்ரா தாமோதரன்

பெண் என்றால் கரோனாவும் இரங்கும் போலிருக்கிறது. ஏப்ரல் முதல் வார நிலவரப்படி உலக அளவில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைத் தாக்கி, 83 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா, பெண்களைக் காட்டிலும் ஆண்களைத்தான் அதிகம் பாதித்துள்ளது.

சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களில் 1.7 சதவீதத்தினர் இறந்திருக்கிறார்கள் என்றால், ஆண்களில் அது 2.8 சதவீதமாக இருக்கிறது. மேலும் SARS, MERS போன்று இதற்கு முந்தைய கரோனா வைரஸ்களும் ஆண்களையே அதிகம் பாதித்ததுள்ளன என்பதால், இதற்கான ஆய்வுகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துணை நிற்கும் ஹார்மோன்கள்

மொழித்திறன், நினைவுத்திறன், கணிப்புத் திறன், தொழில் திறன், சிந்தனை, செயலாக்கம் என வாழ்க்கைமுறையில் எதிரெதிர் திசைகளில் பயணம்செய்யும் ஆணும் பெண்ணும் கரோனா வைரஸ் தாக்குதலிலும் மாறுபடுகின்றனரா என்ற கேள்விக்குப் பல அறிவியல் ஆதாரங்களை மருத்துவ அறிவிய லாளர்கள் முன்வைக்கின்றனர்.

பொதுவாக வலிமையான உடலமைப்பைக் கொண்ட ஆண்கள், ஆரோக்கியத்திலும் தங்களை வலுவானவர்களாகக் கருதிக்கொள்வதுதான் இதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எப்போதும் தன்னை வலுவானவனாக நினைத்துக் கொள்ளும் ஆண், ‘என்னை எந்த நோயும் எளிதில் பாதிக்காது’ என்று நம்புவதுதான் முதற்காரணம்.

இந்த எண்ணத்தால், பெரும்பான்மையான ஆண்கள் தங்களது ஆரோக்கியம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படு வதில்லை. தூக்கம், உணவுமுறை போன்ற வற்றிலும் அக்கறை செலுத்துவதில்லை. முறையாகக் கைகளைக் கூடக் கழுவுவதில்லை. அத்துடன் நோய் அறிகுறிகளை உதாசீனப்படுத்தி, நோய் முற்றிய பிறகே மருத்துவமனைக்குச் செல்கி றார்கள். கரோனா விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது என காரணங்களை அடுக்குகின்றன ஆய்வுகள்.

ஆனால், இயல்பிலேயே முன்னெச்சரிக்கை உணர்வுமிக்க பெண்கள், ஆரோக்கியம் சார்ந்த வற்றிலும் நோய் அறிகுறி களிலும் கூடுதல் கவனம் செலுத்து கின்றனர். அத்துடன் பெண்களின் பிரத்யேக ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்டீரோன் ஆகிய இரண்டும் அவர்களுடைய நோய் எதிர்ப்புக்குத் துணைநிற்கின்றன.

பெண்ணாகப் பிறந்ததன் பலன்

பொதுவாக, நம் உடலில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்படும்போது உடனடியாகச் செயல்படும் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் என்னும் பாதுகாப்பு அமைப்பு எதிர்வினையாற்றியும் நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கியும் அக்கிருமிகளை அழிக்கிறது. ஆனால், இந்த முதன்மைப் பாதுகாப்புப் பணியை உடலின் கேஸ்பேஸ் 12 (Caspase 12) போன்ற சில நொதிகள் தடுக்கின்றன. பெண்களின் ஈஸ்ட்ரோஜன்களோ இந்த கேஸ்பேஸ் நொதியை உருவாகவிடாமல் செய்வதால், பெண்களின் நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது.

மேலும், இந்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கள் பெண்களுக்கு ரத்த அழுத்தம், மாரடைப்பு, எலும்புப் புரை போன்ற பல பிரச்சினைகளிலிருந்து ஆண்களைவிட அதிகப் பாதுகாப்பை அளித்து, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச்செய்து, இயற்கையிலேயே பெண்களை நோய் எதிர்ப்புப் போராளிகளாக உருவாக்கியுள்ளன.

இவை அனைத்தையும்விட, தன்னுள் உருவாகும் அடுத்த சந்ததியை ஆரோக்கியத்துடன் வாழவைக்க வேண்டிய தேவையுள்ளதால், பெண்களிடம் காணப்படும் 46XX என்ற கூடுதல் எக்ஸ் குரோமோசோமின் ஜீன்கள் பெண்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச்செய்கின்றன. 46XY குரோமோசோம்கள் அமைப்பைக் கொண்ட ஆணின் எக்ஸ் குரோமோசோமைக் காட்டிலும் நோய்த்தொற்று, தடுப்பூசிகளுக்குப் பிறகு ஏற்படும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகம் கொண்டுள்ளது பெண்ணின் இரட்டை எக்ஸ். இதனால்தான், autoimmune disease எனப்படும் தன்னுடல் தாக்கு நோய்களும் பெண்களிடம் சற்று அதிகம் காணப்படுகிறது என்கிறது மருத்துவ அறிவியல்.

நோயை வரவேற்கும் தீய பழக்கங்கள்

ஆனால் ஆணின் மனப்பாங்கு, மரபியல், நோயியல் மட்டுமல்ல, சில சமூகக் காரணங்களும் ஆண்களிடம் தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படக் காரணமாக இருக்கின்றன என்பதைச் சில முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆண்களின் அதிக வேலைப்பளு, குறைவான தூக்கம், மன அழுத்தம், மேற்கத்திய உணவு முறைகளால் ஏற்படும் வாழ்க்கை முறை நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்றவற்றுடன் புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் ஏற்படும் நுரையீரல், கல்லீரல் பாதிப்புகள் என எல்லாமே ஒன்றுசேர்ந்து அவர்களுடைய உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைச் சீர்குலைத்து விடுகின்றன. Compromised immune system என்ற இந்தக் குறைந்த நோய் எதிர்ப்பு நிலை, பொதுவாகவே கரோனா போன்ற வைரஸ் தாக்குதலுக்கு இவர்களை எளிதாக ஆட்படுத்துவதுடன் பெரும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவருகிறது என்பதுதான் இப்போதைய உண்மை.

‘பரவாயில்லை... பார்த்துக்கொள்ளலாம்’ என்று இதுவரை நாம் நினைத்திருந்த பல முடிவுகளை மறுபடியும் சீர்தூக்கிப் பார்க்க வைத்திருக்கிறது கரோனா. இன்றைய அவசர உலகில் ஏற்பட்டு விட்ட உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, புகை-மதுப் பழக்கங்கள் ஆண்களின் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைந்ததைப் போலவே, இப்போது கரோனாவையும் வரவேற்று உபசரிக்கின்றன. இது ஆண்களுக்கு மட்டுமின்றி, சமீபத்திய திரைப்படங்களின் தாக்கத்தால் புதுமை என நினைத்து புகைப்பிடிக்கவும் மது அருந்தவும் தொடங்கியிருக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.

பாக்டீரியாவும் வைரஸ்களும் மனிதனின் மிகப் பழமையான, அதேநேரம் மிகப் பெரிய எதிரி. மனிதனின் கடைசி எதிரியும் இவையே. மனிதனை இவை எவ்வளவு பயமுறுத்துகின்றனவோ, அவ்வளவு சுலபமாக வாழ்க்கை முறை மாற்றத்தால் இவற்றை வெல்லவும் முடியும். இன்றைய கரோனா, நாளைய மற்ற தொற்றுநோய்களுக்கும் முன்னெச்சரிக்கை என்பதை நினைவில் கொள்வோம். அதே நேரம் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, போதுமான உறக்கம், சீரான வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் இவற்றைச் சுலபமாக வெல்ல முடியும். இந்த ஊரடங்கு நாட்களில் மருத்துவர்கள் சொல்லும் வழிமுறை களைப் பின்பற்றுவதுடன் எளிய, சமச்சீரான உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்திக் கொள்ள முடியும், செய்வோமா?

கட்டுரையாளர்,
மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: sasithra71@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in