Published : 19 Apr 2020 09:11 AM
Last Updated : 19 Apr 2020 09:11 AM

இப்போது என்ன செய்கிறேன்? - உறுதியுடன் வெல்வோம் கரோனாவை

கே.பாலபாரதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

பொதுவாக, மார்ச் 8 உலக உழைக்கும் மகளிர் நாளையொட்டி பெண்ணுரிமையை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளைப் பல்வேறு அமைப்பினர் ஏற்பாடுசெய்வார்கள். அதனால், நாட்குறிப்பில் அந்த மாதம் முழுவதும் நிகழ்ச்சிகளால் நிரம்பியிருக்கும். ஆகவே, மார்ச் மாதத்தில் மகளிர் நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரிக்கைவிடுத்த போராட்டங்கள் என்று பல மாவட்டங்களுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தேன்.

ஊரடங்கு அறிவிப்புக்கு முதல் நாள் திண்டுக்கல்லில் ‘மக்கள் ஒற்றுமை மேடை’ சார்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரிக்கைவிடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட கருத்தரங்குக்குத் தலைமை வகித்தேன். மக்கள் பங்கேற்பு குறித்த பெருமிதத்துடன் மண்டபத்தைவிட்டு வெளியே வந்தபோதுதான், ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பு வெளியானது.

ஊரடங்கின் முதல் நான்கு நாட்கள் ஓய்வெடுக்க முடிந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களின் காலையும் மாலையும் சிரமப்படுத்தத் தொடங்கின. அதனால், காலையில் நடைப்பயிற்சியுடன் உடற்பயிற்சியையும் இணைத்துக்கொண்டேன். இவற்றை முடிக்க இரண்டு மணி நேரமாகிவிடும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் கேட்டுக்கொண்டே பயிற்சியை மேற்கொள்வேன். உடலுடன் சேர்ந்து மனமும் உற்சாகம் கொள்ளும். அதன்பிறகு செய்திகளை வாசிப்பது, வீட்டு வேலைகளில் உதவி என்று சிறிது நேரத்தைச் செலவிடுவேன். பிறகு வாசிப்பில் நேரம் கழியும். தமிழ்த் திரையுலகில் சாதி குறித்த மாற்றுச் சிந்தனை இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. அப்படிப்பட்ட தமிழ்த் திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன்.

புரட்சியாளர் லெனினைப் பற்றிய வரலாற்று நூல்களை மறுவாசிப்பு செய்தபோது புதிய புரிதல் ஏற்பட்டது. லெனின் தலைமையில் மகத்தான புரட்சி நடைபெற்றபின், ரஷ்யாவில் பரவிய மோசமான நோயான டைபாய்டு, இப்போதைய கரோனாவுக்குச் சமமாகவே இருந்துள்ளது. அப்போது டைபாய்டு காய்ச்சல், ஸ்பெயினிலிருந்து பரவியிருக்கிறது. 1919-ம் ஆண்டில் அதற்கான மருந்துகளுமில்லை.

புரட்சியில் பங்கெடுத்த முக்கியத் தோழர் ஒருவருக்கு அந்தக் காய்ச்சல் தொற்றிவிட்டது. லெனின் அந்தத் தோழரைச் சந்திக்கச் சென்றபோது அதிகாரிகளுடன் தோழர்களும் தடுக்கிறார்கள். ஆனால், அந்தத் தோழரைச் சந்தித்து, அவரது கரங்களைப் பற்றுகிறார் லெனின். மக்களின் பேரன்பைப் பெற்ற தலைவர் தன்னை வந்து பார்க்கிறாரே என்ற வியப்பில், அந்தத் தோழர் லெனினின் கரம் பற்றிக் கண்ணீர் உகுக்கும் நிகழ்ச்சி மனத்தை உருக்குகிறது.

சோவியத்தை அழிப்பதற்காக ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய போரையும், உள்நாட்டு முதலாளிகள் - நிலப்பிரபுக்களின் சதிகளையும், வாட்டிய வறுமையையும் லெனின் தலைமையில் அமைந்த மக்களின் அரசு எப்படி எதிர்கொண்டது, அவர்கள் எப்படி வென்றார்கள் என்பதை மிக அழகாகப் பதிவுசெய்துள்ளார்கள். கம்யூனிசத்தால் சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பதை ஐயம் திரிபற அந்நூல்கள் உணர்த்துகின்றன. கரோனா தொற்றில் கியூபா, சீனா போன்ற சோஷலிச நாடுகளின் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை இப்போது ஏற்படுத்தியுள்ளன.

இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகள் முதலாளித்துவத்தின் தோல்வியையே காட்டுகின்றன. கிராமத்தில் இருப்பதால் மக்களுக்குத் தேவையான உதவிகள் குறித்தும் தொலைபேசி மூலம் வரும் கோரிக்கைகளையும் கேட்கிறேன். மக்களுக்கு அரசின் நலஉதவி கிடைக்கும் வகையில் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசிவருகிறேன். கரோனாவின் ஆபத்திலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கான போராட்டத்தை அரசுடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வுடனும் இப்போராட்டத்தில் நாம் அனைவரும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடனும் வரும் நாட்களை எதிர்கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x