

ஊரடங்கின்போது வெளியூரில் மாட்டிக்கொண்ட மகனை மீட்பதற்காக இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ. தொலைவு சென்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 50 வயது ஆசிரியை ரஸியா பேகம் பெண்களின் மன உறுதிக்குச் சான்று என்றால் பெண்களின் கடமை உணர்வுக்குச் சான்றாக விளங்கு கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீஜனா கும்மல்லா.
விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா, தனது ஆறு மாத பேறுகால விடுப்பை ரத்துசெய்துவிட்டு மூன்று வாரக் குழந்தையுடன் பணிக்குத் திரும்பியிருக்கிறார். “நாடு பேரிடரில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது என் கடமையைச் செய்ய வேண்டியது அவசியம்” என்று சொல்லியிருக்கும் இவர், குழந்தைக்குத் தொற்று ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பான சூழலில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
குழந்தைக்குப் பாலூட்டுவதற்காகக் குறிப்பிட்ட இடைவெளியில் வீட்டுக்குச் சென்று திரும்புகிறார். “கரோனா தொற்று ஏற்படாத வகையில் விசாகப்பட்டினம் முழுவதும் தூய்மைப் பணிகள் முழுவீச்சுடன் நடைபெறு கின்றன. ஏழைகளுக்குத் தேவையான உதவி கிடைக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உறுதிபடுத்திக்கொள்கிறோம்” என்று சொல்கிறார் ஸ்ரீஜனா.
2013 பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜனாவின் கடமை உணர்வுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், கைக்குழந்தையுடன் ஸ்ரீஜனா வேலை செய்யும் படத்தைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்து பாராட்டியிருந்தார். ‘பேறுகால விடுப்பு பெண்களுக்கு அவசியமானது. இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் பணிக்குத் திரும்புவது தேவையில்லாதது’ என்று சிலர் எதிர்மறை விமர்சனங்களைச் சொல்ல ஸ்ரீஜனாவோ, “வீட்டுக்கும் நாட்டுக்கும் எது அவசியம் என்பது எனக்குத் தெரியும். பரபரப்புக்காகவும் பாராட்டுக்காகவும் நான் எதையும் செய்யவில்லை. என் கணவரும் அம்மாவும் குழந்தையைக் கவனித்துக்கொள்ள உதவுகிறார்கள். நான் என் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறேன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.