Published : 16 Aug 2015 12:44 PM
Last Updated : 16 Aug 2015 12:44 PM

தாய் நினைத்தால் எப்படியும் தரலாம் தாய்ப்பால்

தாய்ப்பால் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம் குறித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கியவர் மகப்பேறு மருத்துவர் இந்திரலேகா முத்துசாமி. செட்டிநாடு கே.ஆர்.ஆர்.எம். மருத்துவமனையில் பணியாற்றிவரும் இவர், தன் கணவருடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தாய்ப்பால் தானம், தாய் இல்லாத குழந்தைகளுக்கு உதவும் நல்ல திட்டம் என்று சொல்லும் இந்திரலேகா, தாய்ப்பால் குறித்து இங்கே தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பாலை முதல் உணவாகக் கொடுக்கத் தொடங்கினால் ‘தாய்ப்பால் போதவில்லை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இதைச் செய்ய சில மருத்துவ அலுவலர்களுக்கும் மனமில்லை, தாய்மார்களுக்கும் பொறுமை இல்லை. குழந்தை பிறந்தவுடன் ஒரே ஒரு முறை மாட்டுப்பால் அல்லது பால் பவுடரிலிருந்து பெற்றப்படும் பாலைக் கொடுப்பதே, தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கப் போதுமானதாக இருக்கும் என்கிறது அறிவியல்.

அகில இந்திய மருத்துவச் சங்க செயலாளர் டாக்டர் கே.கே. அகர்வால், ‘குழந்தை பிறந்த 60 நிமிடத்துக்குள் முதல் உணவாகத் தாய்ப்பாலைத் தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் 60 நிமிடத்துக்குள் தாய்ப்பால் தரவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது தரும் ஆவணத்திலும் பதிவுசெய்ய வேண்டும். இது மருத்துவரின் தார்மீக/சட்ட பொறுப்பு’ என்கிறார். குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவுசெய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைப்பிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

வேலைக்குப் போகும் பெண்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறையாக ஆறு மாதங்களை ஊதியத்துடன் பரிந்துரைக்கிறது. ஆனாலும் 46.8% தாய்மார்கள்தான், குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். மருத்துவத் துறை அலுவலர்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்குப் போதிய ஆதரவு தராததும், குழந்தை உணவு/பால் பவுடர் தயாரிக்கிறவர்களின் அதி தீவிர விளம்பர உத்திகளும் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதில் பின்னடவை ஏற்படுத்துகின்றன. தாயின் மார்பை வற்றச்செய்ய ஒரு நாள், ஒருவேளை மாற்றுப்பால் போதும். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை. அதற்கு உதவுவது மருத்துவமனை மற்றும் சமுதாயத்தின் கடமை.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும். வேலையில் சேர மூன்று வாரத்துக்கு முன்பிருந்தே இதை ஆரம்பிக்கலாம். முதல் வாரத்தில் எப்படித் தாய்ப்பாலை பீச்சி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தை ஒரு மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே மறு மார்பில் பாலை எடுப்பது சுலபம். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் ஏழு மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரம்வரை கெடாது. பணியிடத்தில் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை பாலை பீச்சி எடுத்து, வீட்டுக்கு எடுத்துவந்து குழந்தைக்குப் புகட்டலாம். வேலைக்குக் கிளம்பும் முன் அன்றைய தேவைக்கான பாலைத் தனித்தனி கப்களில் எடுத்து, அவற்றில் நேரத்தைக் குறித்துவைத்துச் செல்லலாம். சேகரித்துவைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x