

வீட்டிலேயே அடைந்திருக்கும் குழந்தைகளுடன் நானும் குழந்தையாகி விளையாடுவேன். இன்று என்ன சமைக்கலாம் என்று அவர்களிடமே கேட்டு அதற்கான காய்களை எடுத்து நறுக்கச் சொல்லித் தருவேன். கவனத்துடன் கத்தியைக் கையாளச் சொல்லித் தருவதுடன் அருகில் இருந்து கவனிப்பேன்.
மகளை ஆசிரியராக்கி நான் மாணவியாகி எனக்குப் பாடம் நடத்தச் சொல்வேன். உடனே, அவளும் உற்சாகமாகி, பாடங்களை நடத்துவாள். அவளுக்குப் பிடித்த விளையாட்டை நானும் சேர்ந்து விளையாடுவேன். இப்படி எல்லா வேலைகளிலும் நம்முடனேயே அவர்களையும் இணைத்துக்கொண்டுவிட்டால் அவர்களை எதற்குச் சமாளிக்க வேண்டும்? அவர்கள்தாமே நம்மைச் சமாளிக்கிறார்கள். நமக்கும் நம் கண் பார்வையில் குழந்தைகள் இருக்கும் மகிழ்ச்சி.
குழந்தைகளுடன் பழகும்போது நாமும் குழந்தைகளாகவே மாறிவிடுவதைத்தான் குழந்தைகளும் விரும்புவார்கள். என் ஓரகத்தியின் மகள் என்னுடன் சாலையில் நடக்கும்போது என் கையைப் பிடித்துக்கொள்வாள். என் ஓரகத்தி, “என்னுடன் வரும்போது கையைப் பிடித்துக்கொள்ள மறுக்கிறாள். உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கிறாளே?" என்று கேட்பாள்.
எனக்குக் கையைப் பிடிக்காமல் நடக்கவே தெரியாது. நீ என் கையைப் பிடித்துக் கூட்டிப்போ என்று குழந்தையிடம் சொல்வேன். அவளும் என்னைக் கையைப் பிடித்து அழைத்துப் போவதாகப் பெருமையாக நடப்பாள். இதுதான் குழந்தைகளின் மனநிலை. வளர்ந்த குழந்தைகளுக்கு இந்த உத்தி பொருந்தாது. குழந்தைகளை இன்னும் நெருங்கிப் புரிந்துகொள்ள இந்த ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- உஷா முத்துராமன், திருநகர்
கற்பனைக்குத் தீனி
தேர்வு இல்லை, வீட்டுப்பாடம் இல்லை, புத்தகச் சுமை இல்லை, ஆறிய சாப்பாடு இல்லை என்று இந்த விடுமுறையைக் குழந்தைகள் கொண்டாடினாலும் வீட்டுக்குள்ளேயே இருப்பது போரடிக்குது என்ற சொல்லத்தான் செய்கின்றனர். அதை மாற்ற சமையலைச் சீக்கிரம் முடித்துவிட்டு அவர்களுடன் நேரத்தைச் செலவிட நினைத்தேன்.
காலையில் எழுந்ததுமே யோகாவுடன் சூரிய நமஸ்காரம். அவனுக்குச் சொல்லித் தருவதுடன் நானும் அரை மணி நேரம் செய்வேன். பிறகு காபி கப்புகளைக் கழுவச் சொல்வேன். காய்களைக் கழுவி நறுக்கச் சொல்வேன். சாப்பிடுவதற்கான தட்டு, டம்ளர்களை எடுத்துவரச் சொல்லி, சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தைச் சுத்தம் செய்யச் சொல்வேன்.
பிறகு கலைக்கான நேரம். காகிதத்தில் வட்டம், கோடு என வரைந்து அவற்றை வைத்தே பலவிதமான ஓவியங்களை வரையச் சொல்லி வண்ணம் தீட்டச் செய்வேன். அழைப்பிதழ்களை வைத்தும் கம்பளி நூலை வைத்தும் கலைப் பொருட்களைச் செய்யக் கற்றுத்தருவேன். ஒரு படத்தைப் பார்த்துக் கற்பனையாகக் கவிதை, கட்டுரை, கதை என ஏதேனும் ஒன்றை எழுதச் சொல்வேன். இது குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கும் எழுத்தார்வத்துக்கும் நல்ல தீனி.
இடையிடையே வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாம் உண்டு. தோட்ட வேலைக்கு இடையே இயற்கை உணவு குறித்த தகவல்களையும் சொல்லிவைப்பேன். பகல் பொழுதை இப்படிப் பயனுள்ன முறையில் கழிப்பதால் இரவில் நன்றாக உறங்குகிறார்கள். போதுமான வேலையும், போதுமான ஓய்வும் அவர்களின் மனத்தைப் புத்துணர்வோடு வைத்திருக்கின்றன.
- செ. கலைவாணி, மேட்டூர் அணை.
| உங்கள் வீட்டில் எப்படி? வாசகிகளே, உங்கள் வீட்டில் நிலைமை எப்படி? நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அது மற்றவர்களுக்கும் உதவும். |