Published : 29 Mar 2020 10:37 AM
Last Updated : 29 Mar 2020 10:37 AM

கரோனா விழிப்புணர்வு: தனித்திருந்து தவிர்ப்போம் பேரழிவை

பிருந்தா சீனிவாசன்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒற்றைச் சொல், கரோனா. இந்த வைரஸின் பரவல், தாக்குதல், தீர்வு என அனைத்துமே ஆய்வு நிலையில் இருப்பதால் பாதிக்கப்பட்ட நாடுகளிடமிருந்து பாடம் கற்பதுதான் இப்போது நம்முன் இருக்கும் ஒரே வழி.

தொடக்கத்தில் நம் உடலுக்கு வெளியே சில மணி நேரம் மட்டுமே இந்த வைரஸ் உயிருடன் இருக்கும், காற்றில் பரவாது என்றெல்லாம் நம்பப்பட்டது. ஆனால், தற்போது அதன் பரவலின் தீவிரம் அதுபோன்ற நம்பிக்கையை உடைத்திருக்கிறது. அதனால், வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பதுதான் நல்லது. இதைக் கருத்தில்கொண்டுதான் ஏப்ரல் 14 வரைக்கும் நாடு தழுவிய ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாயும் சேயும் நலமா?

இந்த ஊரடங்கை விடுமுறை என நினைத்து மகிழ்வதும் தண்டனையாக நினைத்து எரிச்சலடைவதும் தேவையில்லாதவை. நம்மையும் நம் சந்ததியினரையும் காக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் என்ற பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இதுவரை உலகம் முழுவதும் பதிவுசெய்யப்பட்டவற்றில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களின் குழந்தைகளும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அதேநேரம் நான்கு பெண்களின் குழந்தைகளுக்குப் பாதிப்பு இல்லை. தாயிடம் இருந்து குழந்தைக்கு கரோனா பரவக்கூடிய சாத்தியம் இருப்பதால் பாலூட்டும் தாய்மார்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் தாய்மார்கள் குழந்தையிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. பச்சிளங்குழந்தைகளாக இருந்தால் தாய்ப்பால் தர வேண்டியது அவசியம் என்பதால் அதற்கான உபகரணங்களை நன்றாகச் சுத்திகரித்துத் தாயிடமிருந்து பாலைப் பெற்றுக் குழந்தைக்கு ஊட்டலாம். குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு, தாக்குதல் விகிதம், இறப்பு விகிதம் போன்றவை குறைவு என்பதால் கவனக் குறைவுடன் நடந்துகொள்ளக் கூடாது. அனைத்து வயதினரையும் வைரஸ் தாக்கு கிறது என்பதைப் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியவர்களின் விவரமே உணர்த்திவிடும்.

குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு

வீட்டில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் இருக்கிறபோது கூடுதல் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இப்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் யாரும் வெளியே செல்லப்போவதில்லை. மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்வோரும் வீட்டுக்குள் நுழையும் முன் கை, கால், முகத்தை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். ஆடைகளைக் கிருமிநாசினி கலந்த தண்ணீரில் ஊறவைத்துத் துவைத்து வெயிலில் காயவைக்க வேண்டும்.

குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் கேட்பதையெல்லாம் செய்துதரக் கூடாது. குறிப்பாக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்க்க வேண்டும். காரணம் இவற்றால் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் எதனால் தொற்று ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்படலாம். அதனால், குழந்தைகளின் பொதுவான உடல்நலத்தில் அக்கறை தேவை. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் கரோனா அறிகுறிகள் என்பதால் சத்தான சமச்சீர் உணவு அவசியம். குழந்தை களுக்கு அவ்வப்போது சமைத்த, சூடான உணவையே தர வேண்டும். வைட்டமின் சி தேவை என்பதால் ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா போன்றவற்றைத் தரலாம். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எண்ணெய், காரம் குறைவான உணவே அனைவருக்கும் நல்லது.

முதியோர் நலன் முக்கியம்

வயதானவர்கள் எளிதாகத் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான சிக்கல் போன்றவற்றுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறவர்கள் அவற்றை நிறுத்தக் கூடாது.

சில நாட்களுக்கு அவற்றை நிறுத்துகிறபோது மிக எளிதாகத் தொற்றுக்கு ஆளாவார்கள். 2015 சென்னை பெருவெள்ளத்தின்போது பெரும்பாலானோர் மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டதை நாம் உணர்வோம். தற்போது ஊரடங்கு அமலில் இருந்தாலும் மருந்தகங்கள் திறந்திருக்கும். அதனால், ஒரு மாதத்துக்குத் தேவையான மாத்திரைகளை வாங்கிவைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல முடியாது என்பதால் வாய்ப்பு இருக்கிறவர்கள் தொலைபேசி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று செயல்படலாம்.

அறிகுறிகள் இருந்தால்

சளி, இருமல் இருக்கிறவர்கள் ஒரே கைக்குட்டையை நாள் முழுவதும் பயன்படுத்தாமல் அவ்வப்போது அதை மாற்ற வேண்டும். பயன்படுத்திய கைக்குட்டைகளையும் துணியையும் கிருமிநாசினி கலந்த தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தினால் அவற்றை மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். முகக் கவசம் அணிவது நல்லது. மற்றவர்களிடம் இருந்து விலகியிருப்பது அவசியம்.

போதுமான பணி விலக்கம் தேவை

நம் நலனைக் காக்க அத்தியாவசியப் பணியில் இருக்கும் ஊழியர்கள் மட்டும் பணிபுரிவார்கள். நாம் வீட்டில் இருப்பது மட்டுமே அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும். அதேநேரம் அரசும் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி. “பேரிடர் காலத்தில் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்.

அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என அரசாங்கம் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பணியாற்றும் காலத்தைக் குறைந்தது 14 நாட்களாக நீட்டித்தால் பணியில் இருக்கிறவர்களுக்கும் அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் ஊழியர்களுக்கும் நல்லது. தவிர, பணியில் இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையிலோ வேறு இடத்திலோ தங்கும் ஏற்பாட்டைச் செய்துகொடுத்தால் அவர்கள் வீடுகளுக்குச் செல்வது தவிர்க்கப்படும்” என்று சொல்லும் சாந்தி, இந்தத் தனிமைப்படுத்துதலை அறிவியல்பூர்வத்துடனும் அர்த்தத்துடனும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்.

பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்

மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றிக் கிடைக்கின்றன என்று அரசு சொல்கிறது. அவை எந்தெந்த இடங்களில் கிடைக்கின்றன என்பதை அரசின் இணையதளத்தில் முகவரி, தொடர்பு எண்ணுடன் குறிப்பிட்டால் மருத்துவர்கள் பயன்பெறுவார்கள் என்கிறார் அவர். “முகக்கவசம், சானிடைஸர், கிருமிநாசினிகள், மருத்துவமனைக்குப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், தெளிப்பான்கள் போன்றவைதாம் இப்போதைய அத்தியாவசியத் தேவை.

அதனால் அவை கிடைக்குமிடத்தை விலையுடன் வெளியிடுவது அனைவருக்கும் பயன்தரும். சுய உதவிக்குழுக்கள் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன. பலர் அவற்றை ஆயிரக்கணக்கில் வாங்கி மக்களுக்குத் தருகின்றனர். ஊரடங்கு இருப்பதால் மக்களைவிட மருத்துவப் பணியாளர்களுக்குத்தான் அவை தேவைப்படும். அதனால் அதுபோன்ற குழுக்களை மருத்துவப் பணியாளர்களுடன் தொடர்புகொள்ளச் செய்வதும் உதவியாக இருக்கும்” என்று சொல்லும் சாந்தி, இந்தப் பேரிடர் காலத் தேவையை மருத்துவர்கள் நேரடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையிலான ஒரு தளத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.

சேவை செய்வோருக்குத் துணைநிற்போம்

“முன்பு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்ட ‘நோட்டீஸ் போர்டு’ என்ற ஆன்லைன் தளத்தைப் போல இப்போது ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவர்களும் இந்தப் பேரிடரைச் சமாளிக்கத் தேவையான தங்கள் கோரிக்கைகளை அதில் சொல்லும்போது அரசாங்கம் நேரடியாக அதில் தலையிட்டு நிலைமையைச் சீராக்கவும் துரிதமாகச் செயல்படவும் முடியும்” என்கிறார் சாந்தி.

இதுவரை உலகை அச்சுறுத்திய கொள்ளை நோய்கள், ஆட்கொல்லி நோய்கள் போன்றவற்றைவிடவும் கரோனா கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதற்குத் தடுப்பு மருந்தோ குணப்படுத்தும் மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்கும்.

கோயில்களில் கடவுள் இல்லை, அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் வெள்ளையாடை தரித்து சேவை செய்துகொண்டிருக்கின்றனர் என்று பலரும் நெகிழ்ந்துபோய் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்த நேரத்தில் மக்களின் கண் முன்னால் இருக்கும் ஒரே நம்பிக்கை துப்புரவுத் தொழிலாளர்கள் தொடங்கி மருத்துவர்கள் வரையிலான அத்தியாவசியப் பணிகளில் இருக்கிறவர்கள்தாம். நாம் வீட்டுக்குள் தனித்திருப்பதும் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும்தான் அவர்களுக்குச் செய்யும் கைமாறு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x