

ச.கோபாலகிருஷ்ணன்
இன்றைய திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பெண்களை இழிவுபடுத்தியோ ஒற்றைத்தன்மையாக சித்தரித்தோ இயற்றப்படும் நகைச்சுவைகளும் கருத்துக் குவியல்களும் அதிகம். ஆனால் உண்மை அதுவல்ல. அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி என அனைத்து உறவுகளுமே பல்வேறு குணநலன்களைக் கொண்டவை. இந்த உண்மையை 1980களிலும் 1990களின் தொடக்கப் பகுதியிலும் கோலோச்சிய இயக்குநர் விசுவின் (1945-2020) படங்கள் வெளிப்படுத்தின.
விசுவின் ஒவ்வொரு திரைப் படத்திலும் ஏதேனும் ஒரு பிரிவையோ ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளையோ சேர்ந்த பெண்கள் தங்களின் பிரதிபலிப்பைத் திரையில் காண முடிந்தது. தன்னுடனோ தனது வாழ்க்கையில் நல்ல விதமாகவோ தீய விதமாகவோ தாக்கம் செலுத்திய மற்ற பெண்களுடனோ அந்தக் கதாபாத்திரங்களைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. ஒரு திரைப் படைப்பாளியாக விசுவின் வெற்றிக்கு முக்கியக் காரணமும் இதுதான்.
எல்லோருக்கும் முக்கியத்துவம்
விசுவின் திரைப்படங்களில் நாயகன் - நாயகி, துணைக் கதாபாத்திரங்கள் என்ற வழக்கமான சட்டகம் இருந்தாலும் அவருடைய பெரும்பாலான படங்களில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்கள் அனைத்துக்குமே ஏதேனும் வகையில் முக்கியத்துவம் இருக்கும். அந்தக் கதாபாத்திரத்தை ஏற்ற நடிகை யாராக இருந்தாலும் அவர் முத்திரை பதிக்க வாய்ப்பு கிடைக்கும். ‘மணல் கயிறு’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் தோன்றி மனைவியை ஒதுக்கிவைத்த நாயகனுக்கு அறிவுரைகூறும் பணிப்பெண்ணும் ‘டெளரி கல்யாணம்’ படத்தில் இருமிக்கொண்டே சமையல் செய்யும் பாட்டியும்கூட நம் நினைவுகளில் தங்கிவிட்டார்கள்.
‘தில்லு முல்லு’ படத்தில் ‘pleasure is mine’ என்று அசந்தர்ப்பமாக ஆங்கிலம் பேசி நாக்கைக் கடித்துக்கொள்ளும் செளகார் ஜானகி, ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அதிகார உணர்வுமிக்க கணவனிடம் நடுங்கிக்கொண்டே ரவிக்கைக்குக் ஊக்கு தைத்துத் தரச் சொல்லும் சுஹாசினி என அவர் எழுத்துப் பங்களிப்பு மட்டும் செய்த படங்களிலும் மறக்க முடியாத பெண் கதாபாத்திரங்கள் அமைந்தன.
திறமையிலும் பிரபலத்திலும் தொழில் சார்ந்த அந்தஸ்திலும் பல்வேறு படிநிலைகளில் இருந்த நடிகைகள் அவரது படங்களில் நடித்திருக்கிறார்கள். அம்பிகா, சுமலதா, ஜெய, சீதா, பானுப்ரியா, குஷ்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகைகளும், ரேகா, அருணா, இளவரசி, பல்லவி, மாதுரி, ராசி உள்ளிட்ட இரண்டாம் நிலை நடிகைகளும் கே.ஆர்.விஜயா. எம்.என்.ராஜம் போன்ற புகழ்பெற்ற மூத்த நடிகைகளும் மனோரமா, வடிவக்கரசி, வித்யா, லட்சுமி, கல்பனா, குட்டிபத்மினி போன்ற சிறந்த குணச்சித்திர நடிகைகளாக அறியப்பெற்றவர்களும் இவரது படங்களில் நடித்தனர். விசுவின் பல படங்களில் நடித்த கமலா காமேஷ் அவற்றின் மூலமாகவே புகழடைந்தார் என்று சொல்லலாம். இந்த நடிகைகள் அனைவரையும் மறக்க முடியாத அளவுக்கான காதாபாத்திரங்களை விசு உருவாக்கியிருந்தார். இவர்களது திறமையைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநராக அவர் இருந்தார். இவர்களின் திரைவாழ்வில் முக்கியமான படங்க ளாக விசுவின் படங்கள் அமைந்தன.
உறவுகள் பலவிதம்
விசுவின் திரைப்படங்களில் தோன்றும் பெண்களை ஒரே விதமான சட்டகத்துக் குள் அடைத்துவிட முடியாது. இன்றைய நகைச்சுவை சார்ந்த உரையாடல்களில் திருமணமான பெண்கள் அனைவரும் கணவன் வீட்டாரை வெறுப்பவர்களாகவும் பிறந்த வீட்டார் மீது மட்டும் அளவுக்கு அதிகமான பாசத்தைப் பொழிபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் மாமியார் -மாமனாரைப் பெற்றோராகவும் கொழுந்தன்களையும் நாத்தனார்களையும் தனது மூத்த குழந்தைகளாகவும் கருதும் பெண்கள் நிறையப் பேர் இன்றளவும் சமூகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். விசுவின் ஆகச் சிறந்த படம் என்று சொல்லத்தக்க ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தின் மூத்த மருமகள் உமா (லட்சுமி) கதாபாத்திரம் அத்தகையதுதான்.
மறுபுறம் சுயநலத்தின் வடிவான பெண்களுக்கும் அவரது படங்களில் இடமிருந்தது. மருமகளைக் கொடுமைப்படுத்தும் மாமியார், மாமியாரைக் கொடுமைப்படுத்தும் மருமகள், குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய அவசியத்தால் இணக்கமாக இருக்கும் மாமியாரும் மருமகளும், அன்பால் இணைந்த மாமியாரும் மருமகளும், ஒண்டுக் குடித்தனத்தில் ஒன்றாக வாழ்ந்ததால் பெற்றெடுக்காத தாயாகவும் உடன்பிறவா சகோதரியாகவும் ஒரே குடும்பம் போல் அணுக்கமாக வாழும் பெண்கள் எனப் பெண்களுக்கிடையிலான எல்லா வகை உறவுகளும் அவற்றின் பல்வேறு வண்ணங்களுடன் விசுவின் படங்களில் இடம்பெற்றன.
விசுவின் திரைப்படங்களில் தோன்றிய பெண்கள் அழுதுகொண்டே இருப்பவர்களாக இருக்கவில்லை. தன்னம்பிக்கை, துடுக்குத்தனம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றையும் அவருடைய பெண் கதாபாத்திரங் களிடம் கணிசமாகக் காண முடியும். அடக்க ஒடுக்கமான மனைவியர் நேரம் கிடைக்கும்போது கணவனை நறுக்கென்று நக்கலடிப்பார்கள். அன்பைப் பொழியும் அம்மாக்கள் மகன்களின் அபத்தங்களைக் கிண்டலடிப்பார்கள். மருமகள்கள் நீரிழிவு நோயாளியான மாமனாரிட மிருந்து இனிப்புப் பண்டங்களை ஒளித்து வைப்பார்கள். கூட்டுக் குடும்பத்தின் கசகசப்புக்கிடையே கணவனின் நெருக்கத்துக்காக ஏங்குவார்கள். குடும்பங்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், அவர்களுக்குள் நிலவிய சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அவரது படங்கள் பதிவுசெய்தன.
உள்ளிருந்து ஓர் எதிர்க்குரல்
விசுவின் திரைப்படங்கள் பெண்களின் பிரச்சினைகளையும் மனப் புழுக்கத்தையும் பேசின. குடும்ப அமைப்பை உயர்த்திப் பிடித்தாலும் அவ்வமைப்புக்குள் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பாகுபாடுகளையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பின. உண்மையான அக்கறையுடன் பதிவுசெய்தன. 1980களில் தலைவிரித்தாடிய வரதட்சணைக் கொடுமையும் மாமியார் வீட்டுக் கொடுமையும் விசுவின் பல படங்களில் முக்கியப் பேசுபொருளாக இருந்தன.
திருமணத்தை ஒட்டி பெண் வீட்டார் எதிர்கொள்ளும் இன்னல்களைத் தத்ரூபமாகவும் உணர்வுபூர்வமாகவும் பிரதிபலித்தது அவரது ‘டெளரி கல்யாணம்’. மனைவிக்கு அபத்தமான அநீதியான நிபந்தனைகளை விதிக்கும் ‘மணல் கயிறு’ கிட்டுமணியைப் போல நிறைய ஆண்கள் அப்போது இருந்தார்கள். இப்போது அந்த நிபந்தனைகளையும் அதிகாரத்தையும் வேறு விதத்தில் வேறு மொழியில் திணிக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி விசுவின் திரைப்படங்களில் வெளிப்பட்ட பெண்கள் குறித்த பல கருத்துகள் பிற்போக்கானவையாக இருந்தன என்பதையும் மறுத்துவிட முடியாது. ஆண் மையைச் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்துகொண்டே அவர் பெண்களுக்காகவும் யோசித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ‘புரட்சி’ பாவனைகள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை.
தன் எல்லைக்குள் நின்று பெண் களின் பிரச்சினைகளை அக்கறையுடன் பேசியவர்களில் முக்கியமானவராக விசு என்றும் நினைவுகூரப்படுவார்.