

பாரததேவி
இதற்குள் சீர்வரிசைக்கான பூவரச மரத்தை வெட்டிய சேதி ஊருக்குள் பரவ, ஊர்க்காரர்களில் வேலைக்குப் போனவர்கள் போக மீதிப் பேர் பிஞ்சைக்கே வந்துவிட்டார்கள். மரம் வெட்டியதைப் பற்றி எல்லோரும் துக்கம்போல் விசாரிக்க, பரசுராமு தளர்ந்துபோனார். அவர் கண்ணுக்குள் இருட்டுப் பரவுவது போலிருந்தது. எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தோடு மகளையும் சேர்த்து மரத்தை ஒன்றி உட்கார்ந்துகொண்டார்.
ஊருக்குள்ளிருந்து வந்தவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். கெடைக்காரர்கள் தானியங்களுக்காகக் களத்தில் காவல் இருந்தவர்களிடம் எல்லாம் மரம் வெட்டியவனைப் பற்றி விசாரித்துக் கையும் களவுமாய்ப் பிடிப்பதென்றும், இல்லாவிட்டால் கூட்டம் போட்டு விசாரிப்பதென்றும் முடிவெடுத்தார்கள். பரசுராமுவுக்கு ஆறுதல் சொல்லி வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். பரசுராமு மெல்ல எழுந்தார். மீண்டும் மரம் தோண்டிய குழியைப் பார்த்தார். தன் இரண்டு கண்களில் ஒரு கண்ணைத் தோண்டியதுபோல் அவருக்கு இருந்தது. மகளின் துணையோடு தகிக்கும் காலை வெயிலில்
தள்ளாடித் தள்ளாடி வீடு வந்து சேர்ந்தார். அதற்குள் இந்த விஷயம் காடுகரைகளில் வேலை செய்தவர்களிடம் எல்லாம் பரவிவிட்டது. பெண்களுக்காகப் பூவரச மரம் வளர்த்தவர்கள் போக பூவரச மரம் வளர்க்க வேண்டிய அவசியமில்லாமல் ஆண் பிள்ளைகளை வைத்திருந்தவர்களும் மரம் வெட்டியவனைத் தண்டிக்க வேண்டும் என்று கொதித்தார்கள்.
காலில் விழுந்த கருப்பையா
சூரியன் நடு உச்சியிலிருந்தவாறு மேற்குத் திக்கத்துக்குப் போகத் தவித்துக்கொண்டிருந்தது. வயலில் தூரத் தொலைவில் கானல் நீரை வளர்த்தவாறு அனலாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. வடிவேலு ஆழ கொழுவிட்டுப் பிஞ்சையை உழுததில் புழுதி வாங்கிய மண் சூடேறித் தகித்தது. அந்த மத்தியான நேரத்துக்கு இரை பொறுக்கிய பறவைகள் எல்லாம் மரங்களின் இலைகளுக்குள் தஞ்சம் அடைந்திருந்தன.
இந்த வெயிலுக்கு மரங்கள் எல்லாம் அதனதன் அடியில் நிழல் விரித்திருந்தன. இவ்வளவு நேரம் புழுதி மண்ணில் உழுத காளைகள் ‘கேது கேது’ என்று இளைத்தவாறு வெயிலுக்குத் தவித்துப்போய் நின்றன. அவற்றின் விழிகள் களைப்பில் ஒளியிழந்து கிடக்க, காளைகளின் வேதனையைப் புரிந்துகொண்ட வடிவேலு, ‘இப்போது அவற்றை அவிழ்த்துத் தண்ணிகாட்டி நிழலில் விடுவோம். பிறகு கொஞ்சம் வெயில் தாழட்டும், அதற்குப் பெறவு உழவில் கட்டுவோம்’ என்று நினைத்தவராக நோக்காலில் இருந்து காளைகளை அவிழ்த்துவிட்டார்.
இதற்காகவே காத்திருந்ததுபோல் காளைகள் நிழல் தேடி ஓடின. அவற்றின் கழுத்து மணிகள்கூடக் களைத்துப் போய் மெல்ல ஒலித்தன. கலப்பையை நட்டுக்குத்தலாக நிறுத்திவிட்டு நாமும் நெழல்ல போய்க் கஞ்சியக் குடிப்போம் என்று நினைத்தவராக ஒரு எட்டு எடுத்து வைத்த வடிவேலுவின் காலில், “ஏண்ணே எம் மவனைக் காப்பாத்துண்ணே” என்று அலறலும் கதறலுமாகச் சுடு புழுதி என்றுகூடப் பாராமல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார் கருப்பையா.
செய்யாத குத்தம் செய்தவன்
தன் காலில் விழுந்தவரைப் பார்த்துவிட்டுத் துள்ளி விலகிய வடிவேலு, “ஏலேய் கிறுக்குப்பயலே. உழவு மண்ணு புரண்டு கொதிப்பேறிக் கிடக்கு. இந்த நேரத்தில் வந்து எங்கால்ல எதுக்கு விழுவுத? என்று கேட்டபோதும் அவர் பாதங்களை விடாமல், “என்னைய பொறுத்துக்கிடுதேன்னு சொல்லு. உன் கால விடுதேன்” என்றார்.
“சரி, சரி. நானு உன்னைப் பொறுத்துக்கிடுதேன், எந்திரி. இந்த வெயிலுக்குப் புழுதியில கெடக்க. உம் மேலு பொத்துப்போவப்போவுது. வா ரெண்டு பேரும் அந்தா இருக்க நெழலுக்குப் போவோம். அப்படியென்ன செய்யாத குத்தத்தைச் செஞ்சிட்டே?” என்று கேட்டவாறே அங்கிருந்த புளியமர நிழலுக்குக் கூட்டிப்போனார் வடிவேலு.
“குத்தம் நானு செய்யலண்ணே. எம்மவன் முருகேசன்தேண்ணே எடுவாத எடுப்பெடுத்து இந்தக் குத்தத்தைச் செஞ்சிட்டான் பரதேசி பயவுள்ள, நாசமா போற பய”
“அப்படி என்னத்தப்பா செஞ்சான் விவரத்தச் சொல்லு”
“மச்சான் பரசுராமு பூவரச மரத்த வெட்டுனது யாருமில்லை என் மவன்தேண்ணே” என்றதும் நிலத்தில் அடித்த வெயில் இப்போது வடிவேலு முகத்தில் வீசியது. “ஏண்டா பரசுராமு பொம்பளப் புள்ள வச்சுருக்காரு. அதுக்குத்தேன் இந்தப் பூரச மரத்த உசுரக் கொடுத்து தண்ணி ஊத்தி மவளுக்கு வளக்காருன்னு தெரியுமில்ல. அம்புட்டும் தெரிஞ்சும் உம்மவன் என்னத்துக்குப் பெரிய இவன் கணக்கா மரத்த வெட்டுதான்?” என்றார் கோபமாக. “அவரு பொண்ணு மயிலரசிக்காவத்தேண்ணே வெட்டியிருக்கான்”
“ஏலேய் என்னடா சொல்லுத? சொல்லுத விஷயத்த விவரமாச் சொல்லு”
“ஆமாண்ணே. அந்தப் பொண்ணு மேல இவனுக்கு ரொம்ப பிரியமாம். கட்டுனா அவளைத்தேன் கட்டணுமின்னு இருந்திருக்கான். அத எங்கிட்ட சொல்லித் தொலைச்சிருக்கக் கூடாது இல்ல உங்ககிட்டயாவது சொல்லியிருக்கலாமில்ல. அம்புட்டு எதுக்கு? மச்சான் பரசுராமுகிட்டவே அதைச் சொல்லியிருக்கலாம். அவரு பெரும் தன்மக்காரரு இவன் சொல்றதக் காதுகொடுத்துக் கேப்பாரு, பொண்ணத்தாரேன், தரல்லன்னு சொல்லியிருப்பாரு.
அதையெல்லாம் வுட்டுட்டு இந்த மடப்பய நேத்து நடுச்சாமத்தில் வந்து மரத்த வெட்டி அதக் கொண்டாந்து கொல்லையிலயும் போட்டுட்டான். பெறவு கொஞ்சம் விடியட்டும், நம்ம இப்படி மரம் வெட்டுன விவரத்தைக் கண்ணும் காதும் வச்சாப்பல போயி மாமாகிட்ட சொல்லிரு வோமின்னு நெனச்சி சத்தப் படுத்திருக்கான். மரம் வெட்டுன அலுப்புல அப்படியே உறங்கிட்டான். இவன் உறங்குனதுனால மச்சான் பரசுராமுவுக்கு மட்டும் தெரிய வேண்டிய விஷயம் ஊருக்காரவு களுக்கெல்லாம் தெரிஞ்சுபோச்சு. ஊருக்காரக கூட்டம் கீட்டம் போட்டுராம நீதேன் பாத்துக்கிடணும்” என்றார் கருப்பையா
யார் முடிவு சொல்வது?
அதைக் கேட்டு, “ஏண்டா உம்மவன் செஞ்சது உனக்கே நல்லாருக்கா?” என்றார் வடிவேலு.
“அய்யய்யோ என்னண்ணே இப்படிச் சொல்லுத. அவன் இந்த மாதிரி செஞ்சிட்டான்ங்கிற விவரமே எனக்கு விடிஞ்சபெறவுதேன் தெரியும். அந்தமான கூரையில சொருகியிருந்த அரிவாளை எடுத்து இப்படியொரு புள்ள உசுரோடவே இருக்கக் கூடாதுன்னு கண்டந்துண்டமா வெட்டவில்ல போயிட்டேன். வீட்டுக்குள்ளாற இருந்த என் பொண்டாட்டி ஓடியாந்து புடிக்க, தெருவுல போனவுக வந்தவகன்னுல என்னப் புடிச்சி விலக்கிப் போட்டாக.
இல்லாட்டா இந்நேரம் என் வீட்டுக்குள்ள ஒரு கொலையில்ல விழுந்திருக்கும்” என்று கருப்பையா சொல்ல இனி என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார் வடிவேலு.
“என்ணண்னே என் மவன் இப்படி ஒரு அநியாயத்த செஞ்சிட்டானேன்னு அங்கமெல்லாம் பதற உன்னைத் தேடி ஓடிவந்திருக்கேண்ணே. எனக்கு ஏதாவது ஒரு முடிவச் சொல்லு” என்றார் கருப்பையா.
“நான் என்னத்த முடிவச் சொல்ல. வா வந்து பொண்ணப் பெத்தவன் காலில் விழுவு. அவன் சொல்லுவான் உனக்கான முடிவ” என்ற வடிவேலு கருப்பையாவோடும் காளைகளோடும் வீட்டுக்கு நடந்தார்.
(நிலா உதிக்கும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com