நாயகி 10: பூனைகளுக்கு யார் மணி கட்டுவது?

நாயகி 10: பூனைகளுக்கு யார் மணி கட்டுவது?
Updated on
2 min read

ஸ்ரீதேவி மோகன்

இன்றும்கூட ஆண்கள் வீட்டு வேலை செய்தால் தியாகிகள்போல் சித்தரிக்கப்படுவதும், பெண்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் வீட்டுவேலையும் குழந்தைப் பராமரிப்பும் அவர்களது தலையாய கடமையாகக் கருதப்படுவதும் இந்தச் சமூகத்தின் நோய்க்கூறு. இந்த மனநிலையை மாற்ற ராஜியைப் போன்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள்.

ஜோதிர்லதா கிரிஜாவின் ‘நான் ஒண்ணும் நளாயினி இல்லை’ என்னும் சிறுகதை (பெண்மையச் சிறுகதைகள், தொகுப்பு: இரா. பிரேமா, சாகித்திய அகாதெமி வெளியீடு, தொடர்புக்கு: 044-24354815) பெண் விடுதலையின் நவீனச் சிந்தனைப் போக்கை அடையாளம் காட்டுகிறது. அக்கதையின் நாயகிதான் ராஜி.

கணவனைவிட அதிகம் சம்பளம் வாங்குபவள் ராஜி. ஆனால், வீட்டு வேலைகள், சமையல், குழந்தை என அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவளுடையதுதான். அவனைவிடச் சம்பளம் அதிகம் என்று அவள் அவனிடம் பேச்சுக்குக்கூடச் சொல்லக் கூடாது. அவனுக்குக் கோபம் வரும். அதனால் அவள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்வாள்.

ஒருநாள் அலுவலகத்தில் வேலை அதிகம். அதனால், வீட்டுக்கு வரத் தாமதமாகும் என்பதால், காலையிலேயே கணவன் ரமணனிடம் மாலை குழந்தையை, குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைத்து வரும்படியும், இரவு சாப்பிட டிபன் வாங்கி வரும்படியும் சொல்கிறாள். ஆனால், மாலைநேரம் குழந்தையை மறந்து, சினிமாவுக்குச் சென்றுவிட்டு குழந்தையை வீட்டுக்குத் தாமதமாக அழைத்து வரும் ரமணன், டிபனும் வாங்கி வரவில்லை.

அதோடு, தனக்கு மிகுந்த அசதியாக இருக்கிறது, வேலை அதிகமானதால் தலை வலிக்கிறது என்று ராஜி கூறிய பிறகும் உடனடியாகத் தனக்கு காபி வேண்டும் என்றும், அம்மியில் அரைத்த துவையலோடு சாப்பாடு வேண்டும் என்றும் அவளிடம் வற்புறுத்துகிறான். அதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இறுதியில் ஒரு வாரத்துக்குள், அவன் தன்னுடன் வீட்டுவேலைகளில் பங்குகொள்வதைப் பொறுத்து அவனை விவாகரத்து செய்வதா வேண்டாமா எனத் தான் முடிவெடுக்கப்போவதாகத் தீர்மான மாகக் கூறிவிடுகிறாள் ராஜி.

ஆண்களின் வெட்டி அதிகாரம்

புரிதல் இல்லாத கணவன் இனித் தனக்கு வேண்டாம் என்று தைரியமாக ஒதுக்க நினைக்கும் இளம் பெண்ணின் நிலைப்பாட்டைப் பேசுகிறது இக்கதை.

ஆணின் பசி அனைத்துக்கும் ஈடுகொடுத்துக்கொண்டு, சம்பாதித்து, வீட்டு வேலைகள், குழந்தை என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும் பெண்களுக்காகப் பிரதிபலனாக ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் என்ன? அதிகாரம் செலுத்துவதுதானே? அதுவும் வெட்டி அதிகாரம்.

எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் பெண்கள் என்றாவது ஒருநாள் தங்களையும் மீறி நியாயத்தைக் கேட்டால், ஆண்களின் பதில் பெண்களின் சுதந்திரத்தில் முட்டுக்கட்டைப் போடுவதாகத்தான் இருக்கும்.

“பெண்கள் படிக்கக் கூடாது என்பது இதற்குத்தான். லா பாயின்ட் பேசறது” என்னும் ரமணனின் வார்த்தைகள் குறுகிய எண்ணம் கொண்ட ஆண்வர்க்கத்தின் அடிமனத்தைக் கண்ணாடிபோல் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பெண்களின் ரத்தத்தை உறிஞ்சும் இப்படிப்பட்ட பூனைகளுக்கு யார் மணி கட்டுவது? யாராவது கட்டித்தானே ஆக வேண்டும்.

அதற்கான முன் அடியை எடுத்து வைப்பவளாக ராஜி இருக்கிறாள். பெண்களின் பிரச்சினைக்கு மிக அழகாகத் தீர்வு சொல்கிறாள். கணவன் எது செய்தாலும் பொறுத்துக்கொள்ளத் தான் ஒன்றும் நளாயினி இல்லை என்கிற ராஜியின் குரல், தங்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பத்தினர் நலனுக்காக உழைத்துச் சாகும் சாமானியப் பெண்ணினத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கிறது.

சேற்றில் சுகம் காணுகிற எருமைகள் மாதிரி, சிந்தனையே இல்லாமல் வளையவரும் பெண்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே ராஜியின் விருப்பமாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in