Last Updated : 09 Aug, 2015 12:08 PM

 

Published : 09 Aug 2015 12:08 PM
Last Updated : 09 Aug 2015 12:08 PM

பெண் எனும் பகடைக்காய்: ‘குடி’யும் குடித்தனமும்

கடந்த வாரம் முழுவதும் குடிப் பிரச்சினைதான் அனைத்து ஊடகங்களிலும் அலசப்பட்டது. ஆனால் முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்தும் ஆண்களே பேசிக்கொண்டிருப்பது வினோதமாக இருக்கிறது. ஏனென்றால், குடியால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள்தாம்.

கடந்த வாரம் உச்ச நிலை அடைந்த இப்போராட்டம் மக்களின் தன்னெழுச்சி என்று முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும், எளிய மக்களின் மனங்களுக்குள் சொல்ல முடியாத துயரமாகவும் பெருங்கோபமாகவும் கனன்றுகொண்டிருந்த நெருப்பு வெடித்துச் சிதறியதன் வெளிப்பாடு என்று கூறலாம்.

பெண்களைப் பொறுத்தவரை மது, குடி என்றாலே ஒருவித வெறுப்பும் அசூயையும் மேலோங்கிய நிலைதான் உள்ளது. குடிப்பவர்களையும், குடித்துவிட்டு உளறுபவர்களையும், தன்னிலை மறந்து சாலையோரத்தில் விழுந்து கிடப்பவர்களையும் கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும்?

சில வாரங்களுக்கு முன் இடதுசாரிப் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சிலர் பாண்டிச்சேரியில் சாராயக் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். இங்கு, இப்பிரச்சினையில் நீண்டகாலமாகப் போராடிவருபவர்கள் பெண்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். படிப்படியாக அது வளர்ந்து மேலும் தீவிரம் கொண்டு சசிபெருமாளின் உயிரையும் குடித்துவிட்டது.

ஒரு போராட்டத்தில் மாணவர்களும் பெண்களும் பங்கெடுக்கும்போது அது மேலும் மேலும் தீவிரமடைகிறது. சமீபத்திய போராட்டத்தில்கூட, சாராயக்கடை முன் சமையல் செய்து, யாரையும் கடையை அணுக விடாமல் செய்வது, பாட்டிலுக்குத் தாலி கட்டிவிட்டு அதைக் கழுத்தில் அணிந்துகொள்வது என பெண்கள்தான் எத்தனை மாறுபட்ட கோணங்களில் போராட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்!

அவர்களின் போராட்டத்தில் அவர்களது மன வேதனையைப் பார்க்க முடிகிறது. கால் நூற்றாண்டு காலக் குடி, குடும்ப வாழ்க்கையின் உருவத்தையே மாற்றிவிட்டது. கணவன் டாஸ்மாக்கே கதியெனக் கிடக்க, பெண் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். பள்ளிக் கல்வி முடித்த பெண்கள் சிறு நகரங்களில்கூட அனைத்து வேலைகளையும் ஏற்க ஆரம்பித்துவிட்டார்கள். விசேஷ வீடுகளில் சாப்பாட்டுப் பந்திகளில் பரிமாறுவது தொடங்கி இலை எடுப்பது வரையிலும், கம்யூட்டர் பொருட்கள் விற்பது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் என்பது வரை மிகச் சொற்பமான ஊதியத்தில் அவர்கள் வேலைக்குக் கிடைக்கிறார்கள்

ஆனால், குடித்துவிட்டு குடல் வெந்து வரும் ஆம்பிளைக்குக் கடித்துக்கொள்ள ஏதாவது கொடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் உள்ளே இருக்கும் மிருகம் எழுந்துவிடும். ரத்தத்தில் ஓடும் ஆம்பிளைத் திமிர் முறுக்கேறும். அடி உதை சித்திரவதை! அக்கம்பக்கம் வேடிக்கை பார்க்கிறது. சில நேரங்களில் போதை அதிகமாகிக் குப்பைத் தொட்டிக்கருகில், சாக்கடையில் விழுந்து கிடக்கிறான். இதெல்லாம் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் வலியைச் சொல்லி மாளாது. குறிப்பாகப் பெண் குழந்தைகள் மனரீதியாக உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இந்த லட்சணத்தில், சராசரியாக 13 வயதில் குடி அறிமுகமாகிறதாம்! பள்ளிக் காலத்திலேயே இந்த அறிமுகப் படலம் நிகழ்கிறது. வெகு விரைவில் அப்பாவைப் போல அவனும் குடிக்க ஆரம்பித்து அடுத்த தலைமுறையின் வாரிசாகிறான். பூர்வீகச் சொத்தாகக் குடி அவன் கைக்கு வந்து சேர்கிறது.

குடிநோயாளிகளாக மாறிப் போனவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கண்ணெதிரிலேயே அப்படி ஒரு குடும்பத்தைக் காண நேர்ந்தது. குடிக்கு அடிமையாகி, வேலை செய்த அலுவலகத்தில் பணம் கையாடல் செய்யும் நிலை வரை அது கொண்டுபோய்விட்டது. கை நடுக்கமும் உடல் நடுக்கமும் அதிகமாகி அதற்கான வைத்தியமும் கை கொடுக்காமல் அந்த நபர் உயிரையும் விட்டார்! இன்று அவரது மனைவி, பள்ளியில் படிக்கும் மகளுடன், கடன்காரர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகித் தனித்து நிற்கிறார். குடிகாரக் கணவனை இழந்த விதவைப் பெண்களின் எண்ணிக்கையும் இங்குதான் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. அதேபோல, சித்திரவதைக்கு ஆளாகும் பெண்கள் ஒரு கட்டத்தில் கணவனைக் கொலை செய்த சம்பவங்களையும் கேள்விப்படுகிறோம். இதுதான் பெரும்பாலான அடித்தட்டுக் குடும்பங்களின் நிலை. இப்படியான நிலையில் மனம் நொந்து கிடக்கும் பெண்கள் ஏன் மதுவுக்கு எதிராக அணி திரள மாட்டார்கள்?

அரசே சாராய விற்பனையை ஊக்குவித்து, குடிகாரர்கள் எண்ணிக்கையைப் பெருக்கி, குடிநோயாளிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. மாணவர்களும் இளைஞர்களும் குடிக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. ஆனால், இப்போது அவர்களே மதுவுக்கு எதிராக அணி திரள்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதுதானே! இப்பிரச்சினை ஒரு முக்கியக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்து அரசு என்ன செய்யப் போகிறதென்று பார்க்கலாம்!

கொசுறு: கடந்த வாரம் பிஹாரில் ரம்சான்பூர் கிராம மகளிர் பஞ்சாயத்து, கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், குடிப்பவர்களுக்கும் விற்பவர்களுக்கும் விளக்குமாற்றுக் கட்டையால் ‘பூசை’ கொடுக்கப் போவதாக முடிவெடுத்து, அதைத் தீர்மானமாகவும் போட்டிருக்கிறது. அதற்கெல்லாம் அசருபவர்களா நம் குடிகாரக் ‘கனவான்கள்’!

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x