Published : 22 Mar 2020 07:18 am

Updated : 22 Mar 2020 07:19 am

 

Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:19 AM

நிகரெனக் கொள்வோம் 09: யாருக்கும் அடங்காதவர்களா நம் குழந்தைகள்?

teach-equality

ஆறு வயது மகனைக் கூட்டிக்கொண்டு ஜானகி வந்தார். ஒரு முரட்டுக் காளையைக் கையில் அடக்கி வைத்திருப்பதுபோல் தன் மகனைக் கையில் கட்டி வைத்திருந்தார். மகனும் அவ்வப்போது திமிறினான்.

“வீட்டின் கதவைத் திறந்தால் ஓடுகிறான். அதனால், பூட்டியே வைத்திருக்கிறேன். கோவம் வந்தால் பொருட்களைப் போட்டு உடைக்கிறான். ஜன்னல் வழியாகத் தூக்கி எறிகிறான். சோபா, கட்டில் என எதன் மேலாவது ஏறி நின்று சிறுநீர் கழிக்கிறான். பள்ளிக்கு அனுப்பினால் அங்கேயும் பிரச்சினைதான். ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்கவில்லை” என்று ஜானகி சொல்வதைக் கேட்டால் சிலருக்கு ஹைப்பர் ஆக்டிவ், ஆட்டிசம் என்பதெல்லாம் நினைவுக்கு வரலாம். தோழி நடத்திவரும் ‘ரக்க்ஷனா சென்ட’ருக்கு அவர்களை அனுப்பி வைத்தோம். குழந்தையைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கவனித்துவிட்டு, பெற்றோரிடம் உரையாடிய பின் என்னிடம் பேசினார்கள்.


துறுதுறுவென இருக்கும் அந்தக் குழந்தை இயல்பில் அதீதச் செயலாற்றல் அதாவது ‘ஹைப்பர் ஆக்டிவ்’ கொண்ட குழந்தையல்ல, குடும்பத்தால் உருவாக்கப்பட்டது என்று விவரித்தார் டாக்டர் ராணி.

கற்றுத்தராத பெற்றோர்

ஜானகியின் குடும்பத்தில் அப்பாவோ அம்மாவோ குழந்தையுடன் விளையாடு வதில்லை, பேசுவதில்லை, சேர்ந்து செயல்படுவதில்லை. பொதுவெளியில் குழந்தைகளுடன் விளையாடவும் அனுமதித்ததில்லையாம். உறவினர்களும் அதிகம் வந்து போவதில்லை. மகனை நாளெல்லாம் அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அதனால் டிவி பார்ப்பது மட்டுமே அவனது வேலையாக இருந்திருக் கிறது. விளையாடுவது மட்டுமல்ல, மூன்று வயதில் என்ன சொல்லித்தர வேண்டும், நான்கு வயதில் எதைத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி எந்தக் கற்பித்தலும் நடக்கவில்லை.

முறையாகச் சிறுநீர் கழிக்க, தானாகச் சாப்பிட, சாப்பிட்டதும் கை கழுவ என எல்லாமே ஏனோதானோவென்று நடந்துள்ளன. குழந்தை அடங்கி இருக்க முடியாத நேரத்தில், கையில் கிடைக்கும் பொருட்களை ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளான். எங்கே சென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்லித் தராமல் எங்கே சிறுநீர் கழித்தாலும் அனுமதித்துள்ளார்கள்.

தற்போது ஜானகியைப் போன்ற பெற்றோரால் பல குழந்தைகள் இப்படியான நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் ராணி சொன்னார். “தன் பிள்ளைக்குச் சின்ன அடிகூடப் படக் கூடாது, மற்ற பிள்ளைகளிடம் சேர்ந்தால் கெட்டுப்போவார்கள் என்று யாருடனும் அனுப்புவது கிடையாது. சமூகத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்களா இருப்பார்கள் என்கிற நம்பிகையின்மை, நேரமின்மை, தங்களுக்கே எல்லாம் தெரியும் என்ற பெற்றோரின் எண்ணம், மழை, வெயில் என இயற்கையைப் புறக்கணிப்பது, தொடர்ந்து டி.வி. முன் உட்கார்ந்திருப்பது, குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பெற்றோருடன் சேர்ந்து வீட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்பாடுகளே இல்லாமல் இருப்பது போன்றவையெல்லாம் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன” என்றார் ராணி.

முறைப்படுத்தப்படாத ஆற்றல்

கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் ஒழுக்கத்தை, கட்டுப்பாடுகளை, விதிகளை மையமாகக்கொண்டு இயங்கும் குடும்பங்களில் வளரும் குழந்தைகளிடம் இது போன்ற சிக்கல்கள் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள், அதீத சாதி, மதப்பற்று கொண்ட குடும்பங்களில் வளரும் குழந்தைகளும் ஆளுமைச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.

“குழந்தை வளர்ப்பு என்பது ஒருவர் மட்டுமே செய்யும் செயல் அல்ல. குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஈடுபடும் ஒன்று. குடும்பம் மட்டுமல்ல, சமூகமும் சேர்ந்து செய்ய வேண்டியது. ஆனால், அது குறைந்துவருகிறது. தன் பிள்ளையைக் கொஞ்சாத, சோறு ஊட்டாத, பாடம் சொல்லித் தராத, குளிப்பாட்டி விடாத அப்பாக்கள் நம்மிடையே அதிகம். ஆனால், குழந்தைகளை அடக்கி வைக்கப்படும் சூழல் மட்டும் மாறவில்லை. அதனால்தான் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் குழந்தைகளின் ஆற்றல் கரைபுரண்டோடும் வெள்ளமென ஆகிறது. பயன்படுத்தப்படாத அவர்களது ஆற்றல், அதீத ஆற்றலாக மாறுகிறது. பிறரைத் தாக்குவது, எச்சில் துப்புவது, பொருட்களைத் தூக்கி எறிவது, உடைப்பது எனப் பல்வேறு வடிவங்களில் அது வெளிப்படுகிறது. பல நேரம் ஆண் குழந்தைகளும் சில நேரம் பெண் குழந்தைகளும் இப்படியான பாதிப்புக்குள்ளாகின்றனர்” என்கிறார் டாக்டர் ராணி.

நம் குழந்தைகள் ஆற்றல் மிக்கவர்கள். அவர்களது ஆற்றல் வலிமையானது. துறுதுறுவென்று இயங்கிக்கொண்டே இருக்கும் வல்லமை கொண்டது. வளர்ச்சிக்கானது. கற்பனைத் திறனுடன் செயலாற்றும் தன்மை கொண்டது. பெரியவர்களுடன் இணைந்து செயல்களில் ஈடுபட வல்லது. மற்ற குழந்தைகளுடன் இணைந்து மகிழ்ச்சியாக விளையாடி, பாடி, உரையாடக்கூடியது. குழந்தைகளின் இயல்பான இச்செயல்பாடுகளைப் பற்றிப் பெற்றோருக்கு இன்றைக்குப் போதிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தனிமைப்படுத்துவது தவறு

குழந்தைகளைப் புரிந்துகொள்ளுதல் அல்லது புரிந்துகொள்ளப் பழகுவது, பழகியதைச் செயல்படுத்துதல் போன்றவை நம்மிடையே இன்னும் உருவாக்கப்பட வில்லை. குழந்தைகளின் தேவைகளைப் பற்றி உரையாடும் குடும்பங்கள், குழந்தைகளுடன் உரையாடி, உடனிருந்து, விளையாடி, இன்ப துன்பங்களை நாள்தோறும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த வாய்ப்புகளைப் பெற்ற குழந்தைகள் நம் சமூகத்தில் குறைந்துவருகின்றன.

படிக்காத, கிராமச் சூழலில் வாழும் குழந்தைகளுக்கு இவ்வாய்ப்பு இயல்பாக இன்றும் இருக்கிறது. படிப்பு, பணம், அடுக்குமாடி வீடு போன்ற அடையாளங்கள் குழந்தைகளின் நலனுக்கு ஏற்றவையா என்பதையும் விவாதிக்க வேண்டும். அவை குழந்தைகளுக்கான வெளி யைக் குறைத்து, அவர்களைக் கட்டுப்படுத்தி, சக மனிதர்களுடன் உறவற்று, சுயநலம் நிறைந்ததாக ஆக்குவதுடன் குழந்தைகளின் உடல், மன, சமூக வாழ்க்கையைக் குலைக் கின்றனவா என்றும் சிந்திக்க வேண்டும்.

அம்மாவின் பொறுப்பு மட்டுமல்ல

ஜானகியின் மகன் மிகைப்படுத்தப்பட்ட உதாரணமாகத் தோன்றினாலும் குழந்தை களின் ஆற்றல் கட்டுப்படுத்தப்படுவதும் அறிவுசார் எதிர்பார்ப்பு கூடிவருவதும் அதிகரித்துவருகிறது. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகுவதை சாதி, பணம், அந்தஸ்து, மதம், சுகாதாரம், பாலினம், பற்று, பயம், பாசக்கவசம் போன்றவற்றை மையமாக வைத்துத் தடுத்துவிடுகிறோம். இதனால் குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இவற்றால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதை உணர வேண்டும்.

குழந்தைகளைப் பராமரிப்பது என்பது ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. அந்தப் பொறுப்பு பொதுவாக அம்மாவுடையது என்றே பலரும் புரிந்துவைத்திருக்கிறோம்.

குழந்தைகளைக் குடும்பத்தின் உடைமையாகப் பார்க்காமல், சுதந்திரமாக வளர வேண்டிய ஆளுமையாகப் பார்க்க வேண்டும். பராமரிப்புப் பொறுப்புகளைப் பகிர்ந்துசெய்வது, குழந்தைகளுடன் வெளியே செல்வது, விளையாட, நீந்த, ஓட, ஆட, பாட, இசைக்க என செய்ய வேண்டியவை எத்தனையோ உள்ளன. குழந்தைகளின் பேராற்றலை வழிநடத்தவும் முறைப்படுத்தவும் நாம் பழக வேண்டியுள்ளது.

(சேர்ந்தே கடப்போம்)
- சாலை செல்வம், கல்விச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com


நிகரெனக் கொள்வோம்ஆண் பெண் சமத்துவம்குழந்தை வளர்ப்புகுழந்தைகள் உளவியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author