

சமூக வலைத்தளங்களில் போராளி களாக வடிவெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும் இன்னமும் பெண்கள் பலரது கடவுச்சொற்கள் கணவன்மார்களின் கைகளில்தாம் இருக்கின்றன. அன்பு, நம்பிக்கை என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், முழுமையான தனிமனித சுதந்திரம் அங்கே மறுக்கப்படுகிறது.
எல்லா ஆண்களும் பெண்களிடம் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்களா என்ற கேள்விக்கு உவப்பான பதில் கிடைப்பதில்லை. ‘இந்தா வச்சுக்கோ’ என்று எல்லாப் பெண்களும் பெருமையாகத் தூக்கிக் கொடுத்துவிடுவதில்லை. வீண்பழி எதற்கு என்ற பயமும் ஒரு காரணமே. சின்னச் சின்ன விஷயங்களுக்காக வாழ்க்கை பறிபோய்விடக் கூடாது என்ற பயமே பாஸ்வேர்டைத் தரச் செய்கிறது. இதையும் மீறி விதிவிலக்குகளாகச் சிலர் இருப்பதுண்டு. அப்படி இருந்தால் என்ன நேரும்?
தன் மன உணர்வுகளைப் பாதுகாக்க நினைக்கும் ஒரு சின்னச் செயலுக்காக ஒரு இளம்பெண் எப்படி நிந்திக்கப்படுகிறாள், எத்தகைய தண்டனைக்கு ஆளாகிறாள் என்பதுதான் ஜெயமோகனின் ‘தேவகி சித்தியின் டைரி’ யின் கதை (ஜெயமோகன் சிறுகதைகள், கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: +91 9244411119).
அந்த வீட்டில் வேலைக்குச் செல்லும் ஒரே பெண்ணான தேவகி, யாருக்கும் தெரியாமல் டைரி எழுதிவருகிறாள். ஒருநாள் அந்த விஷயம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியவருகிறது. ஏற்கெனவே அவள் வேலைக்குப் போவதில் காழ்ப்புணர்வுடன் இருக்கும் மற்றொரு மருமகள் அதைப் பெரிய பிரச்சினையாக்குகிறாள். எல்லாரும் தேவகியைச் சந்தேகத்துக்கு உட்படுத்து கிறார்கள். அவளுடைய கணவனைத் தூண்டிவிட்டுக் கேள்வி கேட்க வைக்கிறார்கள். மனசாட்சிக்குத் தவறான எதையும் டைரியில் எழுதவில்லை என்பதைக் குடும்பத்தினருக்கு அவள் எடுத்துச் சொல்லியும், திரும்பத் திரும்ப வலியுறுத்தியும் யாரும் அதை நம்பவில்லை.
எழுதக்கூட உரிமையில்லையா?
அந்த டைரியில் அப்படி என்னதான் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கும்படி கணவன் வற்புறுத்துகிறான். அவளுக்குத் தனது டைரியை யாரும் படிப்பதில் விருப்பமில்லை. திடீரென சமையல் அறையின் உள்ளே சென்று பூட்டிக்கொள்கிறாள். அந்த டைரியை எரித்துவிடுகிறாள். இந்தச் சின்ன விஷயத்துக்காக அவள் தன் வாழ்க்கையை இழக்க வேண்டி வருகிறது. அவள் கணவன் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியை மணந்துகொள்கிறான்.
சின்ன சின்ன ரசனைகளை, தன் மனத்தில் பட்டவற்றை எழுதி வைக்கக்கூட ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லாமல் போவது ஏன்? அதை அவள் கணவனுக்காகவாவது காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன?
“ஏன்? புருஷன்கூடப் படிக்கக் கூடாத ரகசியம் என்ன உனக்கு?” என்ற கேள்வி எதற்கு? கணவனே ஆனாலும் மன இடைவெளிகள் இருக்கக் கூடாதா? அந்தரங்கம் என்பது அவளது தனிப்பட்ட உணர்வும் உரிமையும்தானே. தனித்துவமான எண்ணங்கள், உணர்வுகள், செய்கைகள் போன்றவற்றால் ஆனதுதானே ஆளுமை. அது பெண்ணுக்கு இங்கே மறுக்கப்படுவது ஏன்?
- ஸ்ரீதேவி மோகன்