

புனேவில் வசித்துவரும் ஆதித்ய திவாரி என்பவருக்கு ‘சிறந்த தாய்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் 2016-ல் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுள்ள அவினாஷ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினார். அப்போது அவருக்குத் திருமணமாகாததால் குழந்தையைத் தத்தெடுப்பதில் பல சிக்கல்களைச் சந்தித்தார். எனினும், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்குக் குழந்தை தத்துகொடுக்கப்பட்டது.
குழந்தையைக் கவனித்துக்கொள்வதற்காகத் தான் பார்த்துவந்த தகவல் தொழில்நுட்பத் துறை வேலையைவிட்டு விலகினார். சாதாரணக் குழந்தைகளைக் கவனிப்பதே இன்றைய பெற்றோருக்குப் பெரும் சவாலாக உள்ள நிலையில், ஆதித்யா தன் மகன் அவினாஷைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார். டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பது குறித்து பல கருத்தரங்குகளில் ஆலோசனை வழங்கிவருகிறார்.
இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவன நிகழ்வு ஒன்றில் ஆதித்யாவுக்கு ‘சிறந்த தாய்’ என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருது பெற்றதும், “சிறந்த பெற்றோராக எப்படி இருக்க வேண்டும் என்பதை அவினாஷ்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தான். என் குழந்தைக்கு நான் சிறந்த நண்பனாக இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்றார் ஆதித்யா.
மாணவிகளிடம் அத்துமீறிய நூலகர் கைது
வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட நூலகர் தாமோதரன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். இவர் சில நாட்களுக்கு முன் நூலகத்தைச் சுத்தம் செய்ய மாணவிகளை அழைத்துள்ளார். அப்போது அவர்களிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதையடுத்து நூலகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவிகள் கல்லூரி முதல்வரிடமும் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
ஆனால், மாணவிகளின் புகார் மீது காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விடுமுறை அளிக்கப்பட்ட நிலையிலும் மாணவர்கள் கடந்த 17-ம் தேதி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பிறகே மாவட்டக் கல்லூரி தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் நூலகரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் நூலகர் தாமோதரன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இருளர்களைப் பதிவுசெய்யும் ஈஸ்வரி
தமிழகத்தின் தொல்குடிகளான இருளர்களின் வாழ்க்கையைத் திரையில் கொண்டுவரும் நோக்கில் ‘மூப்பத்தி’ என்ற திரைப்படத்தை வெளியிடவிருக்கிறார் இயக்குநர் ஈஸ்வரி. தென்னிந்தியத் திரைத்துறை பெண்கள் மையத்தின் செயலராக உள்ள ஈஸ்வரி, இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘நந்தலாலா’, ‘மூகமுடி’ ஆகிய படங்களில் பணியாற்றியவர். இவர் இருளர் பழங்குடிகள் குறித்துக் கடந்த ஆறு மாதங்களாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். அந்த ஆய்வில் தான் கண்ட ‘திரள்’ உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘மூப்பத்தி’ எனும் படத்தை எடுத்திருக்கிறார். ‘திரட்டல் நிதி’ (Crowd Funding) மூலம் இந்தப் படத்துக்கான நிதி திரட்டப்பட்டது. இருளர் பழங்குடிகள் குறித்த முதல் திரைப்படத்தைப் பெண் இயக்குநர் இயக்குவது இதுவே முதல் முறை.
கடலையும் ஆள முடியும்
ராணுவத்தைத் தொடர்ந்து கடற்படையிலும் குறுகிய கால அடிப்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, ‘ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட கப்பல்களில் பெண்களுக்கான கழிப்பறை இல்லை. இதுபோன்ற காரணங்களால் பெண் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரி பொறுப்பை வழங்க முடியாது’ என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தாய்மை, பெண்களால் இவ்வளவுதான் செய்ய முடியும் என 101 பழமைவாதக் கருத்துகளை மத்திய அரசு முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயுதப் படைகளில் பணியாற்றறும் பெண்களிடம் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2008-ம் ஆண்டுக்குமுன் கடற்படையில் சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்க முடியாது என்ற மத்திய அரசின் முடிவுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி நிரந்தரப் பணியிடம் வழங்க வேண்டும். இது தொடர்பான விதிமுறையை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு இயற்ற வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கரோனா பாதித்த பெண்ணுக்குப் பிரசவம்
சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 33 வயதுப் பெண்ணுக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்துள்ளது. சில வாரங்களுக்குமுன் பிறந்த இந்தக் குழந்தைக்குத் தாயிடமிருந்து கரோனா தொற்று ஏற்படவில்லை. சீனாவில் உள்ள ஷாங்ஷி மாகாணத்தின் தலைநகர் சியானில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 33 வயதுப் பெண் 37 வாரங்கள் கருவுற்றிருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. 2,730 கிராம் எடையுடன் பிறந்த இந்தக் குழந்தைக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தைக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
- தொகுப்பு: ரேணுகா | படம்: வி.எம்.மணிநாதன்