எப்போதும் பரிசு உண்டு

எப்போதும் பரிசு உண்டு
Updated on
1 min read

இயற்கைக் காட்சிகளைப் பார்த்ததுமே மனதுக்குள் ஓவிய ஒத்திகை நடத்திவிடுவார் ஜோன்ஸ்டா கிரேஷியா. வீட்டுக்கு வந்ததும் வண்ணங்களைக் குழைத்துத் தன் கற்பனைக்கு வடிவம் கொடுத்துவிடுவார். எம். டெக். முடித்திருக்கும் ஜோன்ஸ்டா, வேலை தேடுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறாரோ அதைவிட அதிக முனைப்புடன் ஓவியங்கள் வரைகிறார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருக்கும் இவரது வீட்டில் அடுக்கப்பட்டிருக்கும் ஓவியங்களே அதற்கு சாட்சி.

“எங்க சொந்த ஊர் திசையன்விளை பக்கத்துல இருக்கற நாடார்உவரி. என்னோட படிப்புக்காக திசையன்விளைக்கு வந்துட்டோம். நான் பென்சில் பிடித்து எழுதின வயசுலேயே கிரேயான்ஸ் வச்சு வரைய ஆரம்பிச்சேன். எங்க அம்மாதான் எனக்கு படம் வரைய கத்துக்கொடுத்தாங்க” என்று சொல்கிறார் ஜோன்ஸ்டா.

நான்காம் வகுப்பு படித்த போது வாங்கிய பரிசு, இவரது ஓவிய ஆர்வத்தைத் தூண்டியதாகக் குறிப்பிடும் ஜோன்ஸ்டா, ஓவியம் வரைவதில் இருக்கிற சின்னச் சின்ன நுணுக்கங்களைத் தன் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்.

கல்லூரி படிக்கும்போது எங்கே ஓவியப் போட்டி நடந்தாலும் அதில் ஜோன்ஸ்டாவுக்குப் பரிசு நிச்சயம். தவிர கல்லூரி விழாக்களையும் இவரது ஓவியங்கள் அலங்கரித்திருக்கின்றன. தலைப்பு கொடுத்து உடனே படம் வரைகிற ‘ஸ்பாட் போட்டி’களிலும் ஜோன்ஸ்டாவைத் தோற்கடிக்க அவரது கல்லூரி வட்டாரத்தில் ஆள் இல்லையாம்.

“என் அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே ஓவியத்துல ஆர்வம். அதனாலதான் எனக்கும் சின்ன வயசுல இருந்தே அதுல பயிற்சி கொடுத்தாங்க” என்று சொல்லும் ஜோன்ஸ்டா, கல்லூரி முடித்ததும் இணையதளம் வழியாகவே ஓவியம் பயின்றார். தன் தந்தையின் நண்பர் சொன்ன அறிவுரைப்படி ஓவியத் தேர்வு எழுதுவதற்காக மட்டும் ஒரு வருடம் முறைப்படி பயிற்சி எடுத்திருக்கிறார்.

தான் வரைகிற ஓவியங்களை இணையதளத்தில் பதிவிட்டு, தேர்ந்த ஓவியர்களிடம் கருத்து கேட்டு, தன் குறைகளை நிவர்த்தி செய்துகொள்கிறார்.

“ரியலிஸ்டிக் டிராயிங் வரையறவரைப் பத்தி என் காலேஜ் சீனியர் அக்கா சொன்னாங்க. நானும் அவரோட டிராயிங்கைப் பார்த்து ரியலிஸ்டிக்கா வரைய கத்துக்கிட்டேன்” என்ற ஜோன்ஸ்டாவின் வார்த்தையை நிரூபிக்கின்றன துள்ளும் மீன்களும் பாட்டிலிலிருந்து கொட்டும் தண்ணீரும்.

ஓவியம் மட்டுமல்ல ஜோன்ஸ்டாவின் ஈடுபாடு. களிமண் பொம்மைகள், ஃபேஷன் நகைகள், காகித நகைகள் ஆகியவற்றையும் அழகுடன் செய்கிறார். தான் வரைந்த ஓவியங்களைத் தன் நண்பர்களுக்குப் பரிசளித்து மகிழ்கிறார்.

- படங்கள்:லெட்சுமிஅருண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in