Last Updated : 02 Aug, 2015 02:20 PM

 

Published : 02 Aug 2015 02:20 PM
Last Updated : 02 Aug 2015 02:20 PM

தாய்ப்பால் என்னும் அமுதம்

உலகத்தில் தாய்ப்பாலைவிட அருமருந்து வேறு எதுவும் இருக்க முடியாது. தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாகவும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் விளங்குகிறார்கள் என்கிறது பிரேசில் நாட்டின் ஆய்வு ஒன்று.

ஆறாயிரம் குழந்தைகளிடம் முப்பது ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த நீண்ட கால ஆய்வு முடிவுகள், தாய்ப்பாலின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்துவதாக இருக்கின்றன. இந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குத் தற்போது முப்பது வயதாகிறது. அவர்களில் மூவாயிரத்து ஐநூறு பேரிடம் தனிப்பட்ட முறையில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

அந்த நேர்காணல் முடிவில் நீண்டகாலம் தாய்ப்பால் அருந்தியவர்கள் அதிகமான அறிவுத்திறனுடம் (ஐ.க்யூ), சமூகத்தில் மதிக்கப்படும் அந்தஸ்துடன் வாழும் சாதனையாளர்களாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. ஒரு மனிதனின் ஆரோக்கியமான, அறிவார்ந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகத் தாய்ப்பால் இருக்கிறது. ஆனால், தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை ஒரு தாய்க்கு இந்தச் சமூகம் எந்தளவுக்கு அளிக்கிறது என்பதை 24-வது உலகத் தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில் சிந்தித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது.

உழைக்கும் மகளிரைக் கருத்தில் கொண்டே இந்த ஆண்டுக்கான கருப்பொருள் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. ‘Breast feeding and Work, Let's make it work' என்பதுதான் அது.

உழைக்கும் பெண்கள்

கடந்த முப்பது ஆண்டுகளாகவே சர்வதேச அளவில் உழைக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிக்கத்தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்த உழைக்கும் பெண்களின் பேறுகால வேலை பாதுகாப்பு என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் கேள்விக்குள்ளானதாகவே இருக்கிறது. இதனால், உழைக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பது என்பது நம் நாட்டில் சவாலான விஷயமாக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ஓராண்டு வரை அளிக்கப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மட்டுந்தான் ஆறு மாதகால பேறுகால விடுப்பு சாத்தியப்படுகிறது. மற்றவர்களுக்கு பதினான்கு வாரங்களுக்கும் குறைவாகவே ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது. அதுவும் பொருளாதார பின்னணியில்லாத, படிப்பறிவற்ற உழைக்கும் பெண்கள் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். இந்த சூழ்நிலையிலிருந்துதான் இந்தியாவில் தாய்ப்பால் வழங்கும் உரிமையைப் பற்றிய விழிப்புணர்வை தொடங்க வேண்டியிருக்கிறது.

தாய்ப்பால் ஏன் முக்கியம்?

“ஒரு குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் அளிக்கக் கூடாது. தாய்மார்கள் கர்ப்பக் காலத்திலிருந்தே தாய்ப்பாலின் அவசியத்தை உணரந்து நடந்துகொள்ள வேண்டும். கேழ்வரகு, கம்பு, சோளம், கருப்பட்டி வெல்லம், பேரிச்சம்பழம், கடலை மிட்டாய், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், கோதுமை, புரதச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. நீரிழிவுப் பிரச்சினை இருப்பவர்கள் அரிசி உணவைக் குறைத்துக்கொள்ளலாம். இப்படி பேறுகாலத்தில் சரிவிகித உணவை எடுத்துக்கொண்டால்தான் ஒரு தாயால் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் வழங்க முடியும். தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவதும் அவசியம்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் சரஸ்வதி ஆப்ரஹாம்.

குழந்தை பிறந்தவுடன் உடனடியாகத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நான்கு மணிநேரத்துக்கும் ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் தேவைப்படும்.

“முதன்முதலில் சுரக்கும் சீம்பாலைப் பெரும்பாலானவர்கள் குழந்தைக்குக் கொடுக்காமல் தவிர்த்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. பிறந்த குழந்தைக்கு இந்தச் சீம்பால் மிகவும் முக்கியம். இது பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தாய்ப்பாலைத் தவிர சிறந்த உணவு வேறில்லை” என்கிறார் டாக்டர் சரஸ்வதி ஆப்ரஹாம்.

ஒரு குழந்தையின் ஆரோக்கியம் என்பது தாய்ப்பால் அளிப்பதில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், அந்த உரிமையை அளிப்பதில்தான் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அலுவலகங்களில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான அறைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருப்பதைப் போல் அலுவலகங்களிலும் இதைச் செயல்படுத்தினால் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவதில் தடையேதும் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x