

கிராண்ட் மாஸ்டர்
விஜயலட்சுமி சுப்பராமன்
செ ஸ் விளையாட்டில் இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் முதல் பெண் சர்வதேச மாஸ்டர் என இரு முறை அழுத்தமான தடத்தைப் பதித்தவர் விஜயலட்சுமி சுப்பராமன். சென்னையைச் சேர்ந்த இவர், 1997-ல் டெஹ்ரானில் ஆசிய மண்டல செஸ் போட்டியில் முதன்முறையாக முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். பின்னர் தொடர்ச்சியாகச் சர்வதேசப் போட்டிகளில் வென்று இந்த உயரத்தை அடைந்திருக்கிறார்.
சர்வதேச உயரம்
தீபிகா பள்ளிக்கல்
இந்திய ஸ்குவாஷ் விளையாட்டைச் சர்வதேச அளவில் உயர்த்தியவர் சென்னையைச் சேர்ந்த தீபிகா பள்ளிக்கல். உலகத் தரவரிசைப் பட்டியலில் பத்து இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை. ஜெர்மன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், டச்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன், ஐரோப்பிய ஓபன் போட்டிகளில் முத்திரைப் பதித்து தீபிகா வெற்றிகரமாக வலம் வந்தவர்.
தப்பாத குறி
இளவேனில் வாலறிவன்
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சீறிப் பாயும் தோட்டாவாக முன்னேறிக்கொண்டிருக்கிறார் இளவேனில் வாலறிவன். கடலூரைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில், 2018-ல் சிட்னியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். 2019-ல் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் தங்கம் சுட்டார். முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றது முத்தாய்ப்பான நிகழ்வானது.
உலக சாம்பியன்
இளவழகி
வட சென்னை ஆண்களின் விளையாட்டு எனப் பேசப்பட்ட கேரம் விளையாட்டை உலக அளவில் பேசவைத்தவர் இளவழகி. அதே பகுதியிலிருந்து வந்த இளவழகி, மூன்று முறை கேரம் உலக சாம்பியனாக வெற்றிக்கொடி கட்டிய நாயகி. 13 வயதில் தேசிய சாம்பியனாக உருவெடுத்தவர், 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் கேரம் உலக சாம்பியனாகி, கேரம் விளையாட்டைப் பட்டிதொட்டியெங்கும் பேசவைத்தார். ஏழை, எளிய குழந்தைகள், பெண்களுக்கு கேரம் பயிற்சி அளித்து புதிய சாம்பியன்களை உருவாக்கும் பணியில் இவர் ஈடுபட்டுவருகிறார்.
சீறிப்பாயும் ராக்கெட்
ஜோஷ்னா சின்னப்பா
உலக அளவில் சென்னையை ஸ்குவாஷ் விளையாட்டின் அடையாளமாக்கிய பெண் ஜோஷ்னா சின்னப்பா. 14 வயதிலேயே ஸ்குவாஷ் விளையாட்டில் தேசிய அளவில் முத்திரை பதித்தவர் இவர். புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 19 வயதில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றவர் ஜோஷ்னா. சென்னையைச் சேர்ந்த சக வீராங்கனை தீபிகாவுடன் சேர்ந்து பல சர்வதேசப் பட்டங்களை ஜோஷ்னா வென்றிருக்கிறார்.
சர்வதேச நடுவர்
ரூபா தேவி
இந்தியாவில் பெண்கள் கால்பந்து அணியைத் தேட வேண்டிய சூழல் உள்ள நிலையில், சர்வதேசக் கால்பந்து நடுவராகத் தமிழகத்தைச் சேர்ந்த ரூபாதேவி தேர்வாகி ஆச்சரியத்தை அளித்தார். திண்டுக்கல்லில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரூபாதேவி, பல தடைகளைக் கடந்து 19 வயதில் இந்த மகத்தான சாதனையைச் செய்துகாட்டினார். இவருடைய விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசாக, சர்வதேசக் கால்பந்துக் கழகம் (ஃபிபா) அவரைக் கால்பந்து நடுவராக நியமித்தது.
வாகைசூடிய வாள்
பவானிதேவி
மேற்கத்திய நாடுகளின் விளையாட்டாகவே பார்க்கப்படும் வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானிதேவி வெற்றிக்கொடியை உயர பறக்கவிட்டவர். கடந்த ஆண்டு ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தேசத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தவர் இந்தச் சென்னைப் பெண். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவரும்கூட. வாள்வீச்சு உலகத் தரவரிசையில் 93-ம் இடத்தைப் பிடித்து, நூறு இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற முத்திரையைப் பதித்தவர்.
வெற்றிக்கான ஓட்டம்
சாந்தி
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சர்வதேச அளவில் விளையாட்டில் முத்திரை பதித்தவர் தடகள வீராங்கனை சாந்தி. 2003-ல்
தென்கொரியாவில் உலக சமாதானத்துக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி, 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் என சர்வதேச வெற்றிக் கணக்கைத் தொடங்கியவர். 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், பாலின சர்ச்சை அவரது தடகள வாழ்க்கையைத் தவிடுபொடியாக்க, அதிலிருந்து மீண்டு இன்று இளம் வீராங்கனைகளை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
தங்கத் தமிழ்ப்பெண்
கவிதா
மகளிர் கபடியில் கில்லியாக வெற்றிகளைக் குவித்தவர் சென்னையைச் சேர்ந்த கவிதா. 13 வயதில் ‘கபடி.. கபடி..’ என்று விளையாடத் தொடங்கியவர், பத்தாம் வகுப்பு படித்தபோதே தேசிய அணியில் இடம்பிடித்து, தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 2007-ல் இந்திய மகளிர் அணி துணை கேப்டனானவர். முதன்முறையாக நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லக் காரணமான பெண்களில் கவிதாவும் ஒருவர். நான்கு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வாங்கிய ஒரே தமிழ்ப் பெண் கவிதாதான்.
மாற்றம் தந்த வெற்றி
ஜெனிதா ஆண்டோ
செஸ் விளையாட்டில் வுமன் சர்வதேச மாஸ்டர் என்ற பட்டியலில் தமிழகத்திலிருந்து இடம்பெற்ற இன்னொரு பெண் ஜெனிதா ஆண்டோ. மாற்றுத் திறனாளியான இவர், திருச்சியைச் சேர்ந்தவர். உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தொடர்ச்சியாக ஆறு முறை தங்கம் வென்ற தமிழச்சி. 2018 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்தவர். கடந்த ஆண்டு அதிக செஸ் புள்ளிகளை ஈட்டி முதலிடம் பிடித்து அசத்தினார் இந்தத் தங்கத் தாரகை.
- டி.கார்த்திக்