

ஓய்வறியாப் போராளி
அற்புதம்மாள்
உலகில் ஒரு தாய் தன் மகனின் விடுதலைக்காக நீண்ட போராட்டத்தை மேற்கொண்டுவருகிறார் என்றால் அவர் அற்புதம்மாள்தான். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு பேர் 29 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்துவருகிறார்கள். தன் மகன் பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க 43 வயதில் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியவர் அற்புதம்மாள். இன்னல்கள், அவமானங்கள், அடக்குமுறைகள் எனப் பல நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உறுதிமிக்க போராட்டத்தைக் கைவிடாதவர். அதன் விளைவாக ராஜீவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சாத்தியப்படுத்த ஆளுநரின் அனுமதி வேண்டும். அவரின் ஒரு கையெழுத்தில் மகன் விடுதலையடைந்து வீடு வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் அற்புதம்மாள், ஓய்வறியாப் போராளி.
சின்னபிள்ளையின் சிறுசேமிப்பு
மதுரை சின்னபிள்ளை
வட்டிக் கொடுமையிலிருந்து பெண்கள் விடுதலை பெறச்சிறுசேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகண்டவர் மதுரை சின்னபிள்ளை. பில்லுச்சேரி என்ற கிராமத்தில் வசித்துவரும் சின்னபிள்ளை, ‘களஞ்சியம்’ என்ற மகளிர் சுய உதவிக் குழுவை 1995-ல் தொடங்கினார். வெற்றிகரமாக ஐந்தாயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி சாதனைபடைத்தார். அவரது சேவையைப் பாராட்டி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1999-ல் ‘சக்தி புரஸ்கார்’ விருது வழங்கிக் கௌரவித்தது மட்டுமல்லாமல் அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் பரவலாக அறியப்பட்டார். முப்பது ஆண்டுகளாகக் ‘களஞ்சியம்’ சிறுசேமிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திவரும் சின்னபிள்ளைக்கு மத்திய அரசு 2019-ல் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.
தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டியவர்
கீதா ராமகிருஷ்ணன்
உள்நாட்டு உற்பத்தியில் ஐம்பது சதவீதம் பங்கு வகிக்கும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்களுக்காகத் தொடர்ந்து போராடிவருபவர் கீதா ராமகிருஷ்ணன். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கீதா, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராட இயற்பியல் முனைவர் படிப்பைப் பாதியில் கைவிட்டவர். 1974-ல்
நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட கீதா, அதன் பின்னர் 40 ஆண்டுகளாகத் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிவருகிறார். அமைப்புசாராத் தொழிலாளர் கூட்டமைப்பு, பெண்ணுரிமை இயக்கம், உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகளை உருவாக்கித் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
எழுத்தே ஆயுதம்
வ.கீதா
சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகளை மார்க்ஸியப் பார்வையோடு ஆவணப்படுத்திவருபவர் எழுத்தாளர் வ.கீதா. இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றிவரும் இவர் சமூக வரலாற்று ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’, ‘நிழல் முற்றம்’ ஆகிய புத்தகங்களை ‘Current show’, ‘Seasons of the palm’ ஆகிய தலைப்புகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரையுடன் இணைந்து ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’, ‘கடைசி வானத்துக்கு அப்பால்‘, ‘ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்ஸியம்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
அஞ்சுவது அவர்களாக இருக்கட்டும்
சின்மயி
பாலியல் வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பொதுச் சமூகத்தின் முன்னால் நிறுத்தத் தொடங்கப்பட்டது #Metoo பிரச்சார இயக்கம். தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையை இந்த இயக்கத்தின் வழியே உரக்கச் சொன்னதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக ஒலித்தார் திரைப்பாடகி சின்மயி. அவரது இந்தத் துணிச்சல் இதுபோல் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களுடைய பிரச்சினையை வெளியே தைரியமாகச் சொல்வதற்கான களத்தை அமைத்துக்கொடுத்தது.
பாடல் பிரச்சாரம்
சோபியா அஷ்ரப்
பொழுதுபோக்குக்காகப் பாடப்படும் சொல்லிசைப் (ராப்) பாடல்களைச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகப் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சோபியா அஷ்ரப். கொடைக்கானலில் யுனிலிவர் நிறுவனம் வெப்பமானி தயாரிக்கும் ஆலையை நடத்திவந்தது. இந்த ஆலையில் பாதரசக் கழிவை ஊழியர்கள் வெறும் கையால் அப்புறப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இந்நிறுவனம் 2001-ல் மூடப்பட்டது. ஆனால், ஆலையிலிருந்த 50 டன் பாதரசக் கழிவு முறையாக அப்புறப்படுத்தப்படவில்லை. இந்தக் கழிவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சோபியா அஷ்ரப் பாடிய ‘Kodaikanal Won’t’ பாடல் தேசிய அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தித் தன்னுடைய கருத்தைச் சொல்லிசைப் பாடல்கள் வழியாகப் பிரச்சாரம் செய்துவருகிறார் சோபியா.
அவலங்களை ஆவணப்படுத்தியவர்
திவ்யா பாரதி
சமூகத்தில் சில விஷயங்கள் திட்டமிட்டே பேசப்படாமல் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் மலக்குழி மரணங்கள். இந்த நூற்றாண்டிலும் தொடரும் இந்த இழிநிலையைத் தன்னுடைய முதல் ஆவணப்படமான ‘கக்கூஸ்’ மூலம் விவாதப் பொருளாக மாற்றியவர் திவ்யா பாரதி. ஒக்கி புயலின்போது பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் கிராமங்களுக்குச் சென்று அவர்களுடைய வலியையும் வேதனையையும் ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்தில் பதிவுசெய்தார். அடிப்படையில் வழக்கறிஞரான திவ்யா, சமூகம் பேச மறுக்கும் விஷயங்களையே தொடர்ந்து ஆவணப்படங்களாகப் பதிவுசெய்துவருகிறார்.
தனியொருத்தி
நந்தினி
மக்களைப் பாதிக்கும் மதுவுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் தொடர்ந்து பத்தாண்டுகளாகத் தனியொருத்தியாகப் போராடி வருகிறார் மதுரை நந்தினி. அரசு நடத்திவரும் மதுக்கடைகளை மூடக் கோரி, சட்டக் கல்லூரியில் பயின்ற காலத்திலிருந்தே போராட்டம் நடத்திவருகிறார். திருமணம் நடைபெறவிருந்த சில நாட்களுக்கு முன்புகூடப் போராட்டம் நடத்திய காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டார் நந்தினி. மக்களைப் பாதிக்கும் மதுபானக் கடைகளை அரசு மூடும்வரை அகிம்சை வழியிலான போராட்டமே தனது ஆயுதம் என்கிறார் நந்தினி.
தடைகளைத் தகர்த்தவர்
பெனோ செபைன்
பிறவியிலேயே பார்வையற்றவரான சென்னையைச் சேர்ந்த பெனோ செபைன், மத்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தவர், பின்னர் லயோலா கல்லூரியில் முதுகலைப் படிப்பை முடித்தார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வை வங்கியில் பணியாற்றிக்கொண்டே எழுதினார். அதில் 343-வது இடம் பிடித்து சாதனைபடைத்தார். 2015-ல் அவருக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது.
பெண்ணும் ஆணும் சமமே
ஓவியா
இருபாலரும் சமம் என்பதை வலியுறுத்திவருபவர் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா. பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்ட குடும்பத்திலிருந்து வந்த மூன்றாம் தலைமுறைப் பெண். சிறு வயதிலேயே திராவிடக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசெல்வதில் சிறந்த பேச்சாளராகவும் களப்பணியாளராகவும் அறியப்பட்டவர். சாதியற்ற, பாலின பேதமற்ற தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு ‘புதிய குரல்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்கள் சமூக விடுதலை பெறவும் தொடர் கட்டுரைகள், விவாதங்கள், போராட்டங்கள் எனத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார் ஓவியா.
- ரேணுகா