Published : 15 Mar 2020 09:59 AM
Last Updated : 15 Mar 2020 09:59 AM

தெய்வமே சாட்சி 08: திக்கற்ற பொன்னுருளாயிகள்

ச.தமிழ்ச்செல்வன்

அது முனி ஓட்டம் உள்ள மரமாம். முனி என்பது பேய்களுக்குத் தலைவன். பொதுவாக, அடர்த்தியான ஆலமரங்கள் முனிகள் குடியிருக்கும் இடமாக அமையும். இந்தக் குறிப்பிட்ட மரம் முனிப் பார்வை உள்ள மரம்தான். முனிப் பார்வை அல்லது முனி ஓட்டம் உள்ள மரம் என்றால், அந்த மரத்தில் முனி நிரந்தரமாகக் குடியிருப்பதில்லை. குடியுரிமை இல்லாத முனிகள் வந்து தற்காலிகமாகத் தங்கிப் போகும் மரமாக அது இருந்தது. சாமியாடிகள் கண்ணுக்கு மட்டும் அந்த முனிகள் தட்டுப்படும். மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாது. நமக்குக் கெட்ட நேரமானால் அது நம்மை அடித்துச் சாப்பிட்டுவிடும்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்திலிருந்து தென்பாலை போகும் சாலையில் அப்படி ஒரு ஆலமரம் இருந்ததாம். எங்கேயோ இருந்து கால்நடையாக, ஒரு கர்ப்பிணி அந்த வழியாக வந்திருக்கிறாள். மாசி மாதத்து வெயில் மண்டையைப் பிளக்க, அந்த ஆலமரத்தடியில் நிழலுக்காக உட்கார்ந்திருக்கிறாள். நடந்து வந்த களைப்பில் அவளுக்கு அப்படியே தூக்கம் வந்துவிட்டது. தூங்கியவள் தூங்கியவள்தான், எழுந்திருக்கவே இல்லை. முனி அடித்து அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கருதிய அவ்வூர் மக்கள் அவள் உடலை அடக்கம் செய்தனர். ஒரு மாதம் கழித்து அந்தப் பெண் அவ்வூரின் ஒரு சிறுமி மேல் வந்திறங்கித் தன் கதையைச் சொல்லியிருக்கிறாள். “என் பெயர் பொன்னுருளாயி. என் ஊர் மானாமதுரை பக்கம் உள்ளது. எனக்குத் தாயும் இல்லை, தகப்பனும் இல்லை. என் கணவன் என்னைத் தினமும் அடித்துக் கொடுமைப்படுத்துவான். எங்கே போவது, யார் வீட்டுக்குப் போவது என்று தெரியவில்லை. அங்கேயே என்னத்தையாச்சும் அரைத்துக் குடித்துச் செத்திருப்பேன். நான் கர்ப்பமாக இருந்ததால், இது தலைப்பிள்ளை ஆனதால் அங்கிருந்து தப்பி வேறு ஊரில் கூலி வேலை செய்து என் பிள்ளையை வளர்த்து ஆளாக்கலாம் என்றுதான் கோபித்துக்கொண்டு கிளம்பி வந்தேன். வந்த இடத்தில் முனி என்னை இப்படி அடித்துவிட்டது. மாசி மாதம் சிவராத்திரிக்கு என்னைக் கும்பிடுங்கள். எனக்குக் குழந்தைகள் மேல் ரொம்ப ஆசை. ஆகையால், எனக்குக் காவல் கொடுக்கும்போது எந்தக் குழந்தையாவது கீழே விழுந்தால் அந்த உயிரை எனக்கு எடுத்துக் கொள்வேன். நான் முட்டையை விரும்பிச் சாப்பிடுவேன். நான் கோனார் சாதிக்காரப் பெண்” என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாளாம்.

அந்த ஆலமரம் நின்ற இடத்தில் ஒரு பெண் படுத்திருப்பதுபோல மண்ணால் சிலை செய்தனர். அந்தப் பெண் குண்டுமுத்துக் கண்டாங்கிச் சேலை கட்டி வந்ததால், அந்தச் சிலைமீது குண்டுமுத்துக் கண்டாங்கிச் சேலையைச் சுற்றி, அந்தச் சிலையிலிருந்து சற்றுத் தொலைவு தள்ளி நின்று சோறும் முட்டையும் கலந்து உருண்டையாக உருட்டி உருட்டி சிலை மீது எறிவார்கள். மாசி மாதம் திருவிழா நடக்கிறது. ஊரில் உள்ள எல்லாச் சாதிக்காரர்களும் சேர்ந்து (தாழ்த்தப்பட்ட இரு சாதிக்காரர்கள் தவிர) வரி கொடுத்துத் திருவிழா நடத்துகின்றனர்.

(கதை சொன்னவர்கள்: நாகராஜன், கருப்பையா - புலியூரான் கிராமம். சேகரித்தவர்: டி.கனகவள்ளி)

நம் இந்தியக் கிராமங்களின் சமூக உளவியல் எவ்விதம் இயங்குகிறது என்ப தற்கான கச்சிதமான வரைபடமாக இக்கதை விளங்குகிறது. 70 ஆண்டுகளுக்கு மேலான மதச்சார்பற்ற ஜனநாயக பொதுவுடைமைக் குடியரசில், பழைய பேய்களின் ஆட்சியே இன்னும் முடிவுக்கு வரவில்லை. மையிருட்டும் அடர்ந்த மரங்களும் ஒற்றைப்பனைகளும் தள்ளியிருக்கும் சுடுகாடுகளும் டெசிபல் குறைவான காற்றின் ஒலியும் மனித மனங்களில் உருவாக்கும் அதீதக் கற்பனைகளும் அரூபச் சித்திரங்களும் அழிபடும் அளவுக்குக் கல்வி நம் கிராமங்களுக்குச் சென்று சேரவில்லை. அல்லது சேர்ந்த கல்வியில் போதுமான அறிவியல் உள்ளடக்கமும் பகுத்தறிவுப் பார்வையும் இல்லை. நகர்ப்புற வாழ்விலிருந்தும் பேய்கள் முற்றிலுமாக விடைபெற்றுச் சென்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது. ‘ஆனானப்பட்ட’ அமெரிக்காவிலேயே 45 சதவீத மக்கள் பேய்கள் இருப்பதாக நம்புகிறார்களாம்.

ஆற்றாமையைத் தணிக்கும் தெய்வம்

உடல் வேறு உயிர் வேறு என்கிற அறிவிய லற்ற புரிதல் உலகெங்கும் இருக்கிறது. பேய்ப் படங்களும் பேய்க் கதைகளும் ஆவி உலக உரையாடல்களும் நீடிப்பதற்கு இப்புரிதலே அடித்தளமாக இருக்கின்றன. இப்புரிதலை நீட்டிக்க இப்படியான படங்களும் கதைகளும் உதவுகின்றன. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், குடும்ப நீதிமன்றங்கள், இலவச சட்ட உதவி மையங்கள், பெண்ணுக்குப் பாதுகாப்பளிக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள், மகளிர் அமைப்புகள் என இத்தனை கோடி இருக்கும்போதே பெண்கள் மீதான வன்முறை கட்டுக்கடங்காமல் நடக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்? தாய் வீடு ஒன்றைத் தவிர வேறு அடைக்கலம் பெண்களுக்கு இருந்ததில்லை.

கணவனின் கொடுமை தாங்க முடியாமல் எல்லாவற்றையும் வெறுத்து வெளியேறும் இந்தப் பொன்னுருளாயிக்குத் தாய் வீடும் இல்லாதபோது என்ன செய்வாள்? ஒத்தையடிப் பாதைகளில் இலக்குத் தெரியாத பயணத்தில் நிர்கதியாய் அலைகிறாள். பொதுவாக நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்றக் கதைகள் எல்லாவற்றிலும் பொதுவான அம்சமாக இந்த நிர்கதியான நிலைமை இருப்பதைப் பார்க்கலாம். கதியற்ற வாழ்வு கிராமப்புற மக்களின் மனங்களில் ஏற்படுத்தும் பரிவும் பாசமும் பச்சாதாபமும் செத்தவர்களைத் தெய்வநிலைக்கு உயர்த்தப் போதுமானதாக இருக்கின்றன. அந்த மக்களும்தான் வேறு என்ன செய்துவிட முடியும்? சாமியாக்கிக் கும்பிடலாம். அவளுக்கு முட்டை பிடிக்கும் என்பது தெரிந்தால் முட்டையையே படையல் பொருளாக (அதுவும் ஆண்டுக்கு ஒரு முறைதான்) எரிசோற்றுடன் தந்து செத்தவளின் மனத்தைச் சாந்தி செய்வதாகச் சொல்லித் தங்கள் மன ஆற்றாமையைத் தணித்துக்கொள்ளலாம்.

வதைக்கும் சித்திரம்

அப்பெண்ணை அடக்கம் செய்த பிறகு சுற்று வட்டாரத்தில் செய்தி பரவியிருக்கும். அவளைப் பற்றிய தகவல்கள் காலப்போக்கில் அந்தக் கிராமத்துக்கு ஒவ்வொன்றாக வந்து சேர்ந்திருக்கும். உறுதிப்படுத்தப்படாத அவளைப் பற்றிய தகவல்கள் ஒரு பெண்ணின் கனவில் வந்தோ அல்லது நரம்புத் தளர்ச்சியுள்ள பெண்கள் மீது ஆவியாக வந்து இறங்கியோ தொகுப்பாக வெளிப்படுவது வழக்கம். ஏற்கெனவே அப்பெண்ணுக்கு ஒரு பீடம் வைத்து வழிபடலாம் என்கிற கருத்துக்கு வந்துவிட்ட கிராமத்து மக்களின் சிதறலான எண்ணங்களுக்கு, இந்தக் கனவுச் சேதி அல்லது பெண் மீது வந்திறங்கிப் பேசுவது ஒரு இறுதி வடிவத்தைக் கொடுத்துவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை ஊருக்கு வெளியே சேரிக்குள் இருத்திவைக்கும் நம் சமூகத்தின் சாதி உளவியல், பொன்னுருளாயிக்கு தலித் அல்லாத ஒரு சாதி அடையாளத்தையும் கொடுத்து அவளைச் சேரிக்கடவுளாக ஆக்காமல் ஊரின் தெய்வமாக ஆக்கியிருக்க வேண்டும். இது ஆவி வந்து சொல்லி நடந்தது அல்ல, மக்கள் நினைப்பதையே ஆவி வந்து சொன்னது.

வயிற்றில் குழந்தையுடனும் கையில் ஒரு துணிப்பொட்டலத்துடனும் திக்குத் திசை அறியாமல் முன்பக்கம் என்ன இருக்கிறதோ என்கிற கேள்வியும் அச்சமும் முகத்தில் தொக்கி நிற்க, பின் பக்கமிருந்து அவளால் திரும்பிக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கணவனின் கொடுமையும் வாழ்ந்த வாழ்வின் துக்கமும் பெண்களைத் துரத்துகிறது. கிராமத்துப் பாதைகளிலும் நகரத்து நெடுஞ்சாலைகளிலும் நீதிமன்றக் கூண்டுகளிலும் திகைத்து நிற்கும் நம் சகோதரிகளின் சித்திரம் மனத்தில் எழுந்து நின்று வதைக்கிறது. ‘என்ன செய்யப்போகிறாய்?’ என்று அச்சித்திரம் விரல் நீட்டுகிறது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x