

ஏழு பத்தினியர் பற்றி சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கதை இது. கணவன் பொருள் தேடுவதற்காக வெளியூர் சென்றிருக்கிறான். வீட்டுக்கு அருகே வசிக்கும் ஒருவன் அவள் அழகில் சலனம் கொள்கிறான். கணவனுக்கு மட்டுமேயான இந்த அழகு மற்றவருக்கு ஈடுபாட்டைத் தருவது, தன் கற்புக்குக் களங்கம் என்று நினைக்கிறாள். தனது முகத்தைக் குரங்கு முகமாக மாற்றிக்கொள்கிறாள். கணவன் வந்ததும் அழகிய முகத்தைத் திரும்பப் பெறுகிறாள்.
அழகு யாருக்காக என்று மாணவிகளிடம் கேட்டபோது, நமக்காக, தன்னம்பிக்கைக்காக ஆகிய பதில்களுடன் எல்லோரும் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதில் ஒரு மகிழ்ச்சி என்ற பதிலும் வந்தது. கன்னத்தில் குழி விழுவது வரவிருக்கும் கணவனுக்குப் பிடிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சை மூலம் கன்னக்குழிகளை ஏற்படுத்திக்கொண்ட பெண்ணையும் நினைவூட்டினார்கள்.
மேகமும் பிறையும் மானும் மீனும் சங்கும் மலர்களும் இளநீரும் உடுக்கையும் பாம்பின் படமும் துதிக்கையும் நாயின் நாக்குமென பாதாதி கேசமும் கேசாதிபாதமுமாகப் பெண்கள் வர்ணிக்கப்பட்டதைச் சொன்னபோது சிலர் சிரித்தார்கள், சிலர் சற்றே கோபப்பட்டார்கள். ‘அழகு மட்டும்தானா நாம், நம்மைப் பற்றிப் பேச வேறெதும் இல்லையா?’ என்றது ஒரு குரல்.
அகல் அல்குல், தோள், கண், என மூவழிப் பெருகி,
நுதல், அடி, நுசுப்பு, என மூவழிச் சிறுகி,
- என்னும் சங்கப் பாடல் வரிகள், அரையும் தோளும் கண்ணும் அகன்றதாக, நெற்றியும் பாதமும் இடையும் குறுகியதாக இருத்தல் பெண்ணின் பேரழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்று குறிப்பிடுகிறது.
இருவேறு அழகு
பெண்ணுடலில் எந்தப் பாகம் எப்படி இருக்க வேண்டும் என்று அளவிட்ட சமூகத்தில், தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் இல்லத்தாளுக்கும் ஆடுமகளிருக்கும் வேறுபாடு உண்டு. பிறர் காணும்படித் தன் அழகையும் கலையையும் கொண்டிருக்கிறாள் ஆடுமகள். இல்லத்தாளோ கணவனுக்காக மட்டுமே தகையெழில் பூணுகிறாள். அவன் இல்லாதபோது தான் பேணிய நலன் அனைத்தையும் துறக்கிறாள். தலைவனின் பிரிவால் மலர்சூடப்படாத கூந்தல், மை தீட்டாத கண்கள், பொலிவிழந்த சருமம் கொண்ட பெண்களும், அவன் இறப்பால் கூந்தல் கொய்து, அணிகலன் இழந்து கைம்மை ஏற்கும் கழிகல மகளிரும் நம் இலக்கியங்களில் நிறைந்திருக்கிறார்கள்.
கோவலனைப் பிரிந்த கண்ணகி எப்படி இருந்தாள் தெரியுமா? அவளுடைய சிவந்த பாதங்களில் சிலம்பு அணியப்பெறவில்லை. இடையில் மேகலையும் இல்லை. மீன் போன்ற நெடிய கண்கள் மைதீட்டுவதை மறந்திருந்தன. பவளம்போல் சிவந்த நெற்றியில் திலகம் இல்லை. கரிய கூந்தல் நறுநெய்யைக் கண்டு நெடுநாட்களாயிற்று. மார்பில் குங்குமம் கொண்டு தொய்யில் எழுதவில்லை. மங்கல அணியைத் தவிர வேறு அணி எதையும் அணியாத கண்ணகியின் வடிந்து வீழும் காதில் குண்டலம்கூட இல்லை. கணவனைப் பிரிந்து கையறு நெஞ்சத்துடன் இருந்தாள். மாறாக, கோவலன் உடனிருக்கப்பெற்ற மாதவி பாதம் முதல் தலைவரைக்குமான எல்லாவித ஒப்பனையோடும் இருந்தாள். இன்றும் கணவனை இழந்த பெண் பொட்டு வைப்பதைக்கூட நம் சமூகம் பெருங்குற்றமாகத் தானே கருதுகிறது?
எழுதிவைத்த அழகு
இல்வாழ்வுக்குப் பொருந்தாத இறையுணர்வு கொண்ட பெண் எனக் கணவனால் தனித்துவிடப்பட்ட புனிதவதியார், தன் அழகிய வடிவைப் பேயென மாற்றிக்கொண்டதையும், கொள்ளும் பயனொன்றுமில்லாத மார்பைக் கிழங்கோடு கொய்து எறிவேனென்ற நாச்சியாரையும் இங்கே நினைவுகூரலாம். ‘மலரின் காம்பைக் கிள்ளாது சூடிக்கொண்டாளே, அவள் இடை தாங்குமா?’ என்று பெண் இடையை மலர்க் காம்பின் எடையைகூடத் தாங்காத அளவுக்கு மெல்லியதென வர்ணிக்கிறார் வள்ளுவர். கம்பனும் ‘பொய்யோ என்னும் இடையாள்’ என்று ராமனுக்கும் இலக்குவனுக்குமிடையே நடந்துசென்ற சீதையின் இடையைப் பற்றிச் சொல்கிறார்.
திரைக்கவிஞர்களும் தங்கள் பங்குக்கு ‘இடையா’ இது இடையா ‘இல்லாததுபோல் இருக்குது’ என்றும் மெல்லிடையைப் படைத்த பிரம்மனைக் கஞ்சனென்றும் தனங்களைப் படைத்த அவன் வள்ளலென்றும் எழுதிவைத்தனர். பெண்ணழகும் வடிவும் எதிர்ப்பாலினத்தின் களிப்புக்காகவே எப்போதும் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருக்க நேர்வது நவீன வாழ்விலும் மாறிடவில்லை.
இந்த யுகம் பெண்ணுக்கு அளித்திருக்கும் அழகு பற்றிய மதிப்பீடுகள் அச்சுறுத்தக் கூடியவை. இந்தியத் திரையுலகின் ஒளிமிகு நட்சத்திரமாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, இயற்கையாய் நிகழும் முதிர்வின் அழகைச் சிகிச்சைமுறைகளால் வென்றுவந்தார். வடிவிலும் தோலின் வனப்பிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவர், ஊடக ஒளியில் தன் இயல்பெழிலைக் காட்டுகிற திடமற்றவராகவே இருந்தார். திரைக்கலைஞராக அழகு பற்றி அவருக்கு ஊற்றி வளர்க்கப்பட்ட மதிப்பீடுகள், பொதுச் சமூகத்தின் பார்வைக்கு வண்ணமூட்டின.
இது யாருக்காக?
ஹாலிவுட்டின் பெருமைமிகு கலைஞர் ஏஞ்சலினா ஜோலியின் வாழ்க்கை இந்த மெனக்கெடல்களுக்கு மாறான வெளிப்படைத்தன்மையில் ஒளிர்கிறது. தனக்கு மார்பகப் புற்றுநோய் வரக்கூடும் என்பதையறிந்து மார்பகங்கள் நீக்கியதைப் பொதுவெளியில் அவர் பகிர்ந்துகொண்டார். உள்நாட்டுப் போர் நடைபெறும் நாடுகளில் அகதிகளாக்கப்பட்ட மக்களைச் சந்தித்துவரும் அவர், அகதிகளான குழந்தைகளில் சிலரைத் தத்தெடுத்து வளர்த்துவருகிறார். ஐநாவின் நல்லெண்ணத் தூதரான ஏஞ்சலினா, இழந்ததை மறைத்து, தன் தோற்றத்தை மீண்டும் அதே கவர்ச்சிக்குரியதாக்கிட நினைக்கவில்லை. மனித மனங்களுக்கிடையே அழகைத் தேடுகிற பண்பும், இயற்கையின் போக்கை அப்படியே ஏற்ற மனத்திடமும் இன்னும் பேரழகான பெண்ணாக அவரை நமக்குக் காட்டுகின்றன.
புருவம் திருத்தி, சருமத்தை ஒளியூட்டி, கூந்தலுக்கு நிறம் மாற்றி, உதடுகளுக்கும் நகங்களுக்கும் சாயம் தீட்டி அழகை மேம்படுத்துகிறார்கள் இன்றைய பெண்கள். உடல் வடிவை ஜீரோ சைஸாக வைத்துக்கொள்ளவும் எத்தனிக்கிறார்கள். ஊடகங்கள் புற அழகின் தேவையைச் சொல்லிச் சொல்லிச் சந்தைப்படுத்துகின்றன. பெண் உடல் பூப்பு, மாதவிடாய், மகப்பேறு, அறுவை சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் எனப் பல உடலியற்கூறுகளை உள்ளடக்கியது. பதினெட்டு வயதிலிருந்த தோற்றமும் வடிவும் முப்பது வயதிலும் இருக்க வேண்டும் என்று நினைக்கச் செய்கிற நிர்ப்பந்தம் நமக்குள் எப்படி விதைக்கப்பட்டது? உடல் எடைக் குறைப்பு சிகிச்சைகளால் உயிரிழந்த, நலமிழந்த பெண்களைக் காண்கிறோம். இந்த உடலை யாருக்காகத் தயார்செய்கிறோம்? ஆணுக்காகவா? அழகை நினைக்கையில் குறைந்துவரும் பெண் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேச மறக்கிறோம்.
‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ என்று தன் புலமையால் செம்மாந்து நிற்கும் ஔவையின் ஞானம், ‘மானிடர்க்கெனில் வாழ்க்கைப்படேன்’ என்ற ஆண்டாளின் கவிதைத் துணிவு, மார்க்ஸின் சிந்தனைகள் இச்சமூக மாற்றத்துக்கு வேராகும் என்ற நம்பிக்கையுடன் வறுமையில் உழன்றபோதும் உடன் இருந்த ஜென்னியின் புரிதல், ஏஞ்சலினா ஜோலியின் சுடரும் தாய்மைப் பண்பு போன்றவை கொண்டிருக்கிற அழகை இந்த ஒப்பனைகளும் உடல் வளைவுகளும் தந்துவிடக்கூடுமா?
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்...
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்...
நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
- சல்மா
(பெண் வரலாறு அறிவோம்)
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com