

மெட்ராஸ் நகரோடு 1668- ல் திருவல்லிக்கேணி கிராமம் இணைக்கப்பட்டது. அதன் மையத்தில் இன்றும் இயங்கும் கோஷா ஆஸ்பத்திரி என்று சென்னை மக்களால் அழைக்கப்படும் கஸ்தூரிபா பெண்கள் மருத்துவமனை பிறந்த ஆண்டு 1885.
பிரசவ மரணங்கள்: அன்றைய மெட்ராஸ் பெண்கள் ஆங்கில மருத்துவர்களிடம் வைத்தியம் பார்க்க மாட்டார்கள். அப்போதைய மருத்துவர்கள் அனைவரும் ஆண்கள். அவர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்வதில் கோஷா எனும் ஆடையை அணிந்து முகத்தை மூடிக்கொள்ளும் இஸ்லாமியப் பெண்களுக்கோ மத ரீதியான பண்பாட்டுப் பிரச்சினைகளும் இருந்தன. அதனால் பிரசவத்தின்போது ஏராளமானவர்கள் இறந்துபோனார்கள். துயரமான இந்த நிலையைப் பற்றி இந்தியாவில் உள்ள ஆங்கில மருத்துவர்களின் தலைவரான சர் ஜோசப் ஃபிரேயர் என்பவர் ஒரு கட்டுரையை எழுதினார். அதைப் படித்தார் மேரி ஆனி எனும் பெண். அவருடைய கணவர் வில்லியம் மேஸன் ஸ்கார்லீப்
1866-ம் ஆண்டு முதல் மெட்ராஸில் வக்கீலாகப் பணியாற்றியவர். இளம் வக்கீல்களுக்கான ‘மெட்ராஸ் ஜூரிஸ்ட்’ என்னும் சட்ட இதழையும் நடத்தியவர் அவர்.
மேரி ஆனி, மெட்ராஸ் பெண்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எனப் பரிதவித்தார். அதற்காக மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார். தற்போதைய அரசு பொது மருத்துவமனையின் அப்போதைய தலைவராக இருந்த எட்வர்ட் பால்போரோடு பேசினார். எட்வர்ட், இந்துஸ்தானி, பாரசீகம் உள்ளிட்ட பல மொழிகளில் வல்லவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் மருத்துவத் தாதியருக்கான புத்தகங்களை மொழிபெயர்த்தவர். அவரால்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் ஆனி உள்ளிட்ட நான்கு பெண்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ராணியிடம் வேண்டுகோள்: மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஆனி, மருத்துவமனையில் நர்ஸ் ஆக சேவையாற்றிக்கொண்டே மூன்றாண்டு காலம் படித்தார். Licentiate in Medicine & Surgery - LM&S எனும் மருத்துவச் சான்றிதழ் படிப்பை 1878-ல் முடித்தார்.
மருத்துவத்தில் பட்டம் படிக்க ஆனி இங்கிலாந்து சென்றார். அப்போது இங்கிலாந்தின் ஒரே பெண் டாக்டராக டாக்டர் எலிசபெத் ஆண்டர்ஸன் இருந்தார். அவர் நடத்திய பெண்களுக்கான மருத்துவப் பள்ளியில் சேர்ந்தார்.
தனது 37-வது வயதில் லண்டன் பல்கலைக் கழகத்தில் தங்கப் பதக்கத்தோடு பட்டத்தையும் அள்ளிக்கொண்டார் ஆனி. மேற்படிப்புக்கான உதவித்தொகையும் பெற்றார்.
மேரி ஆனி விக்டோரியா ராணியைச் சந்திப்பதற்கான வாய்ப்பை மருத்துவர் ஹென்றி ஏற்படுத்தித்தந்தார். இந்தியாவில் பெண் டாக்டர்கள் இல்லாமல் பெண்கள் படும் துயரை ராணியிடம் அவர் எடுத்துக்காட்டினார். அவரது கோரிக்கையை ராணி ஏற்றுக்கொண்டார்.
குவிந்த நன்கொடை: 1883-ல் மெட்ராஸ் திரும்பினார் ஆனி. பெண்களுக்கான மருத்துவமனையை சென்னையில் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். கோஷா மருத்துவமனைக்கான ஆலோசனைக் கூட்டம் 1885 மார்ச் 6-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு 1884 முதல் 1888 வரை இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த மார்கோஸ் ஆஃப் டஃபரின் அண்ட் அவா என்பவரின் மனைவி லேடி கிரான்ட் டஃபரின் தலைமை வகித்தார். கஸ்தூரி பாஷ்யம் அய்யங்கார், திவான் பகதூர் ஆர்.ரகுநாத ராவ், விஜயநகர அரசர்,வெங்கடகிரி அரசர், நீதிபதி முத்துசாமி ஐயர், ராஜா சர் சாவாலை ராமசாமி முதலியார் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்திலேயே 70 ஆயிரம் ரூபாய் நன்கொடை குவிந்தது. அந்தக் கூட்டத்தில் மேரி ஆனி கலந்துகொண்டாரா என்பது தெரியவில்லை.
புதிய பெண் மருத்துவர்கள்: டாக்டர் எட்வர்ட்டின் உதவியோடு கோஷா மற்றும் சாதி இந்துப் பெண்களுக்கான விக்டோரியா ராணி மருத்துவமனை (Queen Victoria Hospital for Caste and Gosha Women) என்ற பெயரில் நுங்கம்பாக்கத்தில் மூர் தோட்டம் என்னுமிடத்தில் டிசம்பர் 7-ம் தேதி இந்த மருத்துவமனை பிறந்தது. 1890- ல் இப்போதைய இடத்தை அரசு வழங்கி, 10 ஆயிரம் ரூபாயும் தந்தது. வெங்கிடகிரி ராஜா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
1921-ல் அரசு இந்த மருத்துவனையைத் தானே எடுத்து நிர்வாகம் செய்யத் தொடங்கியது. இதில் மெட்ராஸின் முதல் தலைமுறை பெண் மருத்துவர்களான மேரி பீடன், ஹில்டா மேரி லஷாருஷ், இ.மதுரம் ஆகியோர் உருவானார்கள்.
மேரி ஆனி 1887-ல் இங்கிலாந்து திரும்பினார். மேலும் மேலும் உயர் படிப்புகளைப் படித்தார். மகப்பேறியல் துறையில் இங்கிலாந்திலும் இங்கிலாந்தின் பல காலனி நாடுகளிலும் இருந்த மருத்துவர்களுக்கான தலைவர் ஆனார். 1930-ல் 85 வயதில் காலமானார்.
கஸ்தூரிபா பெயரில்: வைஸ்ராயின் மனைவியான லேடி கிரான்ட் டஃபரினும் 1888-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். இங்கிலாந்தின் பல காலனி நாடுகளில் பெண்களுக்கான மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் அவர் திறந்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகு காந்தியடிகளின் மனைவி கஸ்தூரிபாவின் பெயரைத் தாங்கிக்கொண்ட மருத்துவமனை இன்று சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி பெண்கள் தங்களுக்காகவே அமைத்துக்கொண்ட மருத்துவமனையாக கம்பீரமாக நிற்கிறது!