

சாலை செல்வம்
கணவனும் மனைவியும் மகனும் சமையலறைப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் வீடு வழக்கறிஞர் கீதாவின் வீடு. மகன் சமையலில் ஆர்வம் கொண்டவனாக ஆனான். தன்னைப் பெரிய சமையல்காரன் எனச் சொல்லிக்கொள்வதும் விதம் விதமாகச் சமைப்பதுமாக இருந்தான்.
அரிதான இந்தச் செயல்பாடுகள் குறித்து அவர்களுடன் உரையாடியபோது கீதாவும் அவருடைய கணவரும் இப்படிச் சொன்னார்கள்: “எங்களைப் பொறுத்தவரை என் மகன் ஓரளவு நன்றாகப் படிப்பதற்குக் காரணம் சமையலறையை அவன் சிறப்பாகக் கையாள்வதுதான்” என்று உறுதியாகக் கூறினார்கள். ஆனால், நமக்கு அது புதிய பதில். “சமையலறையில் மூவரா, மகனைச் சமைக்க வைப்பீர்களா, மூவரும் சேர்ந்து சமைப்பீர்களா?” என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைத் தோழியின் முன் வைத்தேன்.
“நாங்கள் மூவரும் சேர்ந்து செயல்படக்கூடிய இடமாகச் சமையலறை மட்டுமே உள்ளது. ஒருவர் காய் வெட்ட, இன்னொருவர் பாத்திரங்கள் கழுவ, நான் அடுப்பில் வதக்க எனக் கலகலவென்றிருக்கும். சுவையைப் பற்றிப் பேச, பிடித்ததைச் சமைக்க, உடல் நலன் பற்றி உரையாட, எங்கள் மற்ற இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள, வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவென இனிமையாக இருக்கும்.
அப்படியே சேர்ந்து சாப்பிடுவோம். யாராவது ஒருவர் டிபன் பாக்ஸில் எடுத்து வைப்போம். நிறைய சண்டைகளும் நடக்கும். மீண்டும் இரவு நாங்கள் கூடும் இடம் சமையலறை. இதனால், சுவையாகச் சாப்பிட முடிகிறது. பிறகு நாங்கள் மூவரும் அலுவலக, பள்ளி வேலைகளைத் தனித்தனியே தொடர்வோம். தவறாமல் சமையலறைக்காகக் காத்திருப்போம். நாங்கள் என்ன காத்திருப்பது? பசி எங்களை அழைத்துச் செல்லும்” என்றார் கீதா.
நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும்
இவ்வனுபவத்தைப் பலருக்கு முன்னு தாரணமாக எடுத்துச் செல்ல வேண்டும் என மற்றவர்களிடம் பகிர்ந்தேன். அது பற்றிய நம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டையும் பார்க்க முடிந்தது. சிலர் வியப்பாகக் கேட்டனர். சிலர் ஏற்றுக்கொண்டாலும் செய்ய முடியுமா என்ற கேள்வி அவர்களுக்கு இருந்தது.
அப்படியொரு கணவன் எனக்கு இல்லையே என்ற பெண்களின் குமுறலையும் உணர முடிந்தது. நான் முற்போக்காக இருக்க முடிந்தாலும் என் குடும்பம் ஆண் மகனான என்னைச் சமையலறைக்குள் அனுமதிப்பதில்லை என ஆண்கள் சிலர் அங்கலாய்த்தனர். மகனை வளர்ப்பதும் மகளை வளர்ப்பதும் ஒன்றல்ல என்ற பழைய பல்லவியும் இவற்றுக்கிடையே ஒலித்தது.
ஆனால், எல்லோருமே வியப்பாகக் கேட்டனர். பாராட்டினர். இது போன்ற பதில் களுக்குக் காரணம் வாழ்வியல் புரிதல்தானோ என அடிக்கடி தோன்றுவதுண்டு. கூடவே, இன்னொன்றும் தோன்றியது. இது போன்ற வித்தியாசமான பல முன்னுதாரணங்களை நாம் ஏன் பொதுவெளியில் பேசுவதில்லை, பாராட்டுவதில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
பெண்கள் முன்னேற்றத்துக்கு வீரப் பெண்கள் முன்னுதாரணமாகக் காட்டப்பட்டது போல சமத்துவ ஆண்கள் காட்டப்படவில்லை. வித்தி யாசமான செயல்பாடுகளுடைய மனிதர் கள் ஆங்காங்கே இருந்தாலும் அவற்றைக் கற்றலுக்கானதாக, முன் மாதிரிக்கானதாக எடுத்துச்செல்ல வேண்டிய அவசியத்தை உணரவில்லை. நாம் விரும்பும்படியான மதிக்கத்தக்க செயல்பாடுகள், முன் மாதிரி செயல்பாடுகளை முன்னுதாரணமாக ஆக்க வேண்டியுள்ளது.
ஊக்குவிக்கும் குழு
‘மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற ஒரு பெற்றோர் குழு தங்கள் குழந்தைகளை வழி நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தங்கள் குழந்தைகளுடன் வாசித்தல், பயணித்தல் என்பதன் தொடர்ச்சியாக, சேர்ந்து சமைத்து வருகின்றனர். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்குப் பிடித்ததைச் சமைக்கின்றனர்.
சமையலறை பரிச்சயமில்லாத குழந்தைகள் எழுதி எடுத்து வந்து அதைப் பார்த்துப் பார்த்துச் செய்கின்றனர். சில குழந்தைகள் வீட்டில் செய்துபார்த்து பயிற்சியெடுத்துப் பின் இங்கே வந்து செய்வர். அந்தக் குழுவை வழிநடத்தும் பெற்றோர் குறிப்பிடும்போது, “எங்கள் குழுவில் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வாக இருப்பது குழந்தைகள் சமைப்பதுதான். அதற்கு முன் சமையலறையை அடிக்கடி பயன்படுத்திய விஷால் பாராட்டைப் பெற்றான். ஜஷ்வின் அடுத்த நிகழ்வுக்காகப் பல பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கினான்” என்றனர்.
மதுரையில் உள்ள தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் சமையல் போட்டி, பொங்கல் விழா, உணவுத் திருவிழா போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. சமையல் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குழுவாகவும் தனியாகவும் ஈடுபட்டு, சுவையாகவும் நேர்த்தியுடனும் தங்களது பங்களிப்பைச் செலுத்துகின்றனர். விறகு, மண்ணெண்ணெய் ஸ்டவ், பம்ப் ஸ்டவ், மின்சார அடுப்பு போன்றவற்றை அவர்கள் தூக்கிவருவதும், சமைப்பதற்கான பொருட்களை அவர்கள் கையாண்ட விதமும் அழகாக இருந்தன.
மாற்றத்தை நோக்கி
‘மருதம்’ பள்ளி மதிய உணவு பரிமாறுதல், அதற்கான தயாரிப்புகளை இணைந்து செய்தல், உணவு தயாரிப்பதற்கு உதவுதல் எனத் தினச்செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. பள்ளியின் கைவினைக் கலை விழாவின்போது மாணவர்களும் மாணவியரும் வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவர்.
அதில் தோசைக்கடை, பணியாரக்கடை போன்றவையும் அடங்கும். காலை முதல் மாலைவரை சோர்வின்றி அதில் ஈடுபட்ட மாணவர்களிடம், எத்தனை பணியாரம் சுட்டீர்கள் எனக் கேட்டோம். விற்ற பணத்தை ஐந்தால் வகுத்து, “730 விற்றோம். மீதியைத் தின்றோம்” என்று சொன்னார்கள்.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய, ‘ஆண்களுக்கான சமையல் குறிப்பு’ புத்தகம், ஆண்களுக்கான சமையல் பட்டறை போன்ற முயற்சிகள் பாராட்டப்படவும் அதிகப்படுத்தப்படவும் வேண்டும். அது மட்டுமல்ல; ஒவ்வொன்றும் இயல்பானதாக அதே நேரம் வலுவானதாக ஆக்கப்பட வேண்டும். பெண்கள் சமூக வாழ்க் கைக்கும் பொதுவெளிக்கும் பழகியதுபோல் ஆண்களையும் பழக்கி, சமத்துவத்துக்கான வழிகளை உருவாக்க வேண்டும்.
மகனோ மகளோ அவர்களாகவே சிறப்பானவர்களாக ஆகிவிட முடியும் என்ற எதிர்பார்ப்பைப் பல பெற்றோரிடம் பார்க்க முடிகிறது. சிறப்பானவர்கள் என்பதற் கான விடையில் தோழமை, சமத்துவம், சகோதரத் துவத்துக்கு இடம் இருக்க வேண்டியதைப் பெற்றோர் உணர்தல் இன்றைய தேவை. அதற்கான முயற்சி பெற்றோரிடமிருந்து வர வேண்டியுள்ளது.
(சேர்ந்தே கடப்போம்)
கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com