

எனது தொடக்கப்பள்ளி நாட்களில்தான் புத்தக வாசிப்பு தொடங்கியது. எங்கள் ஊரில் விசைத்தறி பட்டறைக்காரர் ஒருவரின் வீட்டுக்கு, நாளிதழுடன் வாரமொருமுறை சிறுவர் மலர் புத்தகமும் வரும். அதைப் படிப்பதில் எனக்கு அவ்வளவு ஆனந்தம். எங்கள் ஊரின் ஒரே மளிகைக்கடையான ‘பால்கார ஐயன்’ கடையில் பழைய செய்தித்தாளில் பொட்டலம் கட்டித்தான் சாமான்கள் கொடுப்பார்கள். அந்தத் தாள்களையெல்லாம் ஒரு எழுத்துவிடாமல் படிப்பேன்.
வீட்டில் இருக்கும் பஞ்சாங்கத்தைக்கூட முழுவதும் வாசித்துவிடுவேன். பள்ளிக்காக காங்கயம் செல்ல ஆரம்பித்த பிறகு நிறையப் புத்தகங்கள் அறிமுகமாயின. நூலகம் என்ற சொர்க்கத்தை நானும் என் தங்கையும் அங்கேதான் கண்டோம். நூலக வாசிப்பு உலக இலக்கியத்துக்கான வாயிலை திறந்துவைத்தது. மொழியெர்ப்பு, வரலாறு, அறிவியல் ஆகிய புத்தகங்கள் என் வாசிப்புவெளியை விரித்தன.
சுஜாதாவைப் படிக்கத் தொடங்கிய பிறகு தேவையில்லாத நம்பிக்கைகள் வேண்டாம் என்ற தெளிவு பிறந்தது. அனைத்தையும் அறிவியல்பூர்வமாக அணுகிப் பார்க்கும் பக்குவம் உண்டானது. வாஸந்தி, மகாஸ்வேதா தேவி போன்றோரின் சமூகப் பொறுப்புணர்வு மிக்க கதைகள் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தின.
எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரது ‘துணையெழுத்து’, ‘தேசாந்திரி’, ‘கதாவிலாசம்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் என்னை நீள்சிறகு பறவை போல் மேகங்களில் மிதக்கவைக்கும். வார இதழ் ஒன்றில் வெளியான ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ தொடரை வாராவாரம் படித்ததுடன் அதை பைண்டிங்செய்து வைத்துக்கொண்டேன். அடிக்கடி அந்தக் கதையினுள் கரைந்து போவேன்.
நதியின் மீது விழுந்த மரமல்லி பூவைப் போல் வாழ்க்கை இழுத்துக்கொண்டுபோனதில் புத்தகங்களே என்னைக் கரைசேர்த்தன. தற்போது பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகள் இப்போது உலக இலக்கியப் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் முல்லா கதைகளில் மூழ்கியிருக்கிறான்.
நல்ல புத்தகங்கள் நம்மை வழிநடத்தும், தாங்கிப்பிடிக்கும். ஒழுக்கநெறி மாறாமல் அறமும் நேர்மையுமாய் வாழவைக்கும். வாசிக்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குப் பரிசளிப்போம். அதன்மூலம் அனைத்தையும் அவர்களே கண்டடைவார்கள்.
- டி.குணசுந்தரி, கரூர்.