

கவிதா நல்லதம்பி
சமூகம் எல்லோரையும் பேச விடுவதில்லை. குறிப்பாக அரசியல், பாலியல் குறித்துப் பேச அனுமதிப்பதில்லை. எனவே, சொல்லாடல்கள் சுதந்திரமாக இருப்பதில்லை.
- பூக்கோ
பதினைந்து வயது இளம்பெண்ணிடம் முப்பது வயது ஆண் தன் காதலை ஏற்கச்சொல்லி வற்புறுத்துகிறான். தொடர்ந்து மறுத்ததால், அவளது முகத்தில் அமிலத்தை ஊற்றிச் சிதைக்கிறான். அதிலிருந்து மீண்டு தன்னைப் போல் அமில வீச்சுக்கு ஆளான பெண்களை நம்பிக்கையுடன் வளர்த்தெடுக்கும் பணியைச் செய்கிறாள் அந்த இளம்பெண். சட்ட விரோதமாக நடைபெறும் அமில விற்பனைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுக்கிறாள்.
‘International Unsung Hero of the Year’, International Women of Courage Award எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் லட்சுமி அகர்வால்தான் அவர். நம்பிக்கைக்குரிய அவரது வாழ்வே ‘சப்பாக்’ படமாகத் திரைகண்டிருக்கிறது. பார்வதி மேனனின் நடிப்பில் வந்த ‘உயரே’ என்னும் மலையாளப் படமும் அமில வீச்சுக்குள்ளான பெண் ஒருத்தியின் கதையே.
அறிவும் அழகும் கொண்ட தன் காதலி, எல்லோருடனும் இயல்பாகப் பழகுவது அவள் காதலிக்கும் ஆணைத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறது. தனக்கு மட்டுமே அவளது அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது குறுகிய மனம், அவள் மீது அமிலத்தைக் கொட்டி ஆசுவாசம் கொள்கிறது.
பக்குவமற்ற ஆண் மனம்
இவ்விரு கதைகளும் காதலில் ஆணின் பக்குவமற்ற தன்மையைக் காட்டுகின்றன; காதலியைத் தனக்கே ஆனவள் என உரிமை கொண்டாடுகிற ஆண் மனத்தைச் சொல்கின்றன. தனக்குக் கிடைக்காத ஒன்று யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது எனவும், காதலுக்குரிய பெண்ணின் அழகும் இன்பமும் தன்னைத் தவிர யாராலும் அனுபவித்துவிட முடியாதவையாக இருக்க வேண்டும் எனவும் நினைக்கிற ஆணின் பெருவிருப்பையும் சொல்கின்றன.
இப்படங்கள் காட்டுகிற ஆண் மனநிலைகள்தாம் இன்று உலகமெங்கிலும் காதலுக்காக நடந்துகொண்டிருக்கும் கொலைகளின் வெளிப்பாடுகள். குலப்பெருமை என்று கருதும் சாதிவெறிக்காக நிகழ்த்தப்படும் ஆணவக் கொலைகள் ஒருபுறமும், காதலை நிராகரித்ததற்காகப் பழிதீர்க்கப்படும் கொலைகள் மறுபுறமுமாகக் காதலின் களம் கண்ணீர்க் கதைகளால் நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆள்பவர் தொடங்கி எளியவர் வரைக்கும் சாதி, இனம், வர்க்கம் எனும் வேற்றுமைகளில் சிக்கிக் காதல் சமாதிகளுக்குள் அடங்குகிறதெனில், காதலித்த பெண்ணை உணர்ந்துகொள்ள இயலாமல், தான் கொண்டாடிய பெண்ணைத் தானே கொல்லத் துணிகிற அவலம் நேர்வதும் நம் பண்பாட்டு உளவியலின் போதாமையையே காட்டுகிறது. பிறக்கையில் பெண்ணும் ஆணும் நிகரான உயிர்கள்.
அவர்கள் வளர்த்தெடுக்கப்படும்போது பெண்மை, ஆண்மை எனும் கருத்தியல் ஊட்டப்பட்ட சமூக உயிர்கள். இந்த வளர்த்தெடுப்பில், ஆணுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் பெண்ணைத் தன் உடைமையெனக் கருதும் மனோபாவத்தை இயல்பெனத் தருகிறது.
தனக்குரிய அவள் எப்படித் தன்னை நிராகரிக்க முடியும்? ஆண் என்கிற ‘நான்’ அவனைத் தொந்தரவுக்குள்ளாக்க, புறக்கணிப்பின் வலி வன்முறையின் ஆயுதத்தைக் கையிலெடுக்கச் செய்கிறது. தன் விருப்பைப் பற்றிப் பெரிதும் நினைக்கிற ஆண் எதிரிலிருக்கும் பெண்ணின் விருப்பை, கனவுகளைத் துளியும் கருதாதன் விளைவே இது.
மடலேறுதல் என்னும் வன்முறை
சங்க இலக்கியப் பெண் காதலில் திளைக்கிறாள்; கூடலுக்குப் பிந்தைய பிரிவில் நலமிழந்து வாடுகிறாள்; காதலையும் காமத்தையும் வெளிப்படுத்த இயலாது உணர்வொடுங்கிக் கிடக்கிறாள். அந்தப் பெண் காதலை மறுத்தபோது ‘மடலேறுதல்’ என்கிற ஆணின் வன்முறையை எதிர்கொண்டாள்.
தலைவியைத் தன்னை ஏற்கும்படிச் சொல் எனத் தோழியிடம் கேட்டு, அதற்கு மறுப்புத் தெரிவித்தால் மடலேறித் தலைவியையும் அவள் சுற்றத்தையும் நாணச் செய்வேன் என மிரட்டி, அவளைச் சம்மதிக்கச் செய்வதுமுண்டு. அவ்வாறு நிகழாதபோது, பெண் பனையின் மடல்களால் ஆன குதிரை போன்ற வடிவத்தைச் செய்து மடலேறுவான்.
அந்தப் பனைக் குதிரைக்குச் சிறு மணிகளையும், மயில் பீலிகளையும் சூட்டித் தன் மேனியெங்கும் சாம்பலைப் பூசி, யாரும் அணியாத எருக்க மாலையை அணிந்து, தலைவியின் படத்தை வரைந்து ஏந்திக்கொள்வான். சிறுவர்கள் அந்த மடல் ஊர்தியை வீதியெங்கும் இழுத்துச் செல்வார்கள்.
ஊரார் காணும் வகையில் தனக்கும் அப்பெண்ணுக்குமான காதலைச் சொல்லி, அவள் இல்லையெனில் உயிர் துறப்பேன் என்பதும், பனங்கருக்கால் காயம் ஏற்பட்டபோதும் அதைப் பொருட்படுத்தாமல் வீதிகளைச் சுற்றிவருவதுமாகத் தலைவன் தலைவியையும் அவள் குடும்பத்தையும் எல்லோரும் எள்ளி நகையாடும்படிச் செய்வான்.
“வருந்தமா ஊர்ந்து மறுகின்கண் பாடத்
திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே
பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை
போலக் கொடுத்தார் தமர்”
இந்தக் கலித்தொகைப் பாடல், பாண்டியனின் வீரத்துக்கு அஞ்சி வரி செலுத்திய பகைவர்களைப் போன்று, தலைவனின் மடல் ஏற்றத்தால் ஏற்பட்ட குடிப்பழிக்கு அஞ்சி, பெண்ணை மணமுடித்துத் தந்தனர் உடன்பிறந்தோர் என்பதைக் காட்டுகிறது. ஆனால், எச்சூழ்நிலையிலும் பெண்கள் மடலேறக் கூடாது என்ற செய்தியைத் தொல்காப்பியம்,
“எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடைய நெறிமை இன்மையான்”
என்ற வரிகளில் காட்டுகிறது. பெண்கள் மடலேறுதல் அவர்களுடைய ஒழுக்கத்துக்குப் பெருமை தராது. வள்ளுவரும் காதலும் காமமும் கடலளவு மிகுந்தாலும் எந்தச் சூழலிலும் மடலேறாத பெண்ணின் பண்பைவிடச் சிறந்தது ஏதுமில்லை என்கிறார். பக்தி இலக்கியங்களில் மடலேறும் வழக்கத்தைப் பெண்ணுக்குமானதாகப் பாடியுள்ளனர். அது இறைக்காதல்.
சிக்கித் திணறும் காதல்
குடும்பப் பெயர், தன்மானம், மரியாதை, உயிர் பயம் கருதியாவது தன்னை ஏற்கும்படியான நெருக்கடியைப் பெண்ணுக்கு உருவாக்குவது எல்லாக் காலத்துக்குமான ஆண் இயல்பாக இருந்ததையே, இச்செயல்கள் காட்டுகின்றன. தினைக்கால் போலச் சிறு கால்களைக் கொண்டு, மீன் எப்பொழுது வருமென்று காத்துக்கொண்டிருந்த குருகுவைத் தவிர, காதலனால் கைவிடப்பட்ட அந்தச் சங்கப் பெண்ணுக்குச் சாட்சியங்கள் ஏதுமில்லை.
ஆனால், இன்றோ காதல்வயப்பட்டவர்களின் வாழ்க்கை ஆதாரங்களால் திணறுகிறது. காதலித்தபோது எடுத்துக்கொண்ட படங்கள், காணொலிகள், அந்தரங்க உரையாடல்களின் திரைக் காட்சிகள் என மிகும் நினைவின் சுவடுகள், காதலில் வாழ்கிற கணங்களின் மகிழ்வை விடவும் பிரிந்த கணங்களின் எச்சமாக நின்று அச்சுறுத்துகின்றன.
இந்த நவீன அச்சுறுத்தல்களை, பெண்ணை அடிபணிய வைக்கவும், அவளைக் கொண்டு தாம் நினைத்தவற்றைச் சாதித்துக்கொள்ளவுமான வாய்ப்பாக ஆண் கொள்கிறான். பெண்ணுக்கும் இவ்வாய்ப்பு உண்டென்றாலும், கற்பு, மானம், குடும்பப் பழி என்னும் சொற்களுக்குள் கட்டுண்டு ஆணின் பயன்படுபொருளாக எஞ்சி நிற்கிறாள். கொலைசெய்யப்படுகிற, தற்கொலை செய்துகொள்கிற பெண்களின் எண்ணிக்கை கல்வியும் சுதந்திரமும் கிடைக்கப்பெற்றபோதும் பண்பாட்டு நெருக்கடிகளுக்குள், சமூக மதிப்புகளுக்குள் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் பெண் வாழ்வையே காட்டுகிறது.
எனது காதல் சுதந்திரமானது எந்தச் சிறு நிர்ப்பந்தமும் அற்றது; எனது நெஞ்சில் பெருகும் நேசத்தின் ஒரு பரிமாணம் எனினும் நண்பனே ஒரு பெண்ணிடம் சொல்வது போலவும் உணர்த்துவது போலவும் உன்னை அணுக அஞ்சினேன்.
- அ.சங்கரி (சொல்லாத சேதிகள்)
(பெண் வரலாறு அறிவோம்)
கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com