Published : 08 Mar 2020 11:59 AM
Last Updated : 08 Mar 2020 11:59 AM

தெய்வமே சாட்சி 07: இட்டுக்கட்டப்பட்ட இதிகாசப் பாத்திரங்கள் அல்ல

ச.தமிழ்ச்செல்வன்

சாதி மறுப்புத் திருமணம் செய்வது, சாதி மீறிக் காதலிப்பது போன்ற ஏதோ பெரிய ‘குத்தம்’ செய்தால்தான் பெண்களைக் கொல்ல வேண்டும் என்பதில்லை. நம் ஆண் மையச் சமூகம் அற்ப காரணங்களுக்காகக்கூடப் பெண்களைக் கொன்று பின்னர் தெய்வமாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இன்று நாம் கொலை செய்யாமல் இருந்தாலும், அற்ப விஷயங்களுக்காகப் பெண்களைத் தற்கொலைக்குத் தள்ளும் காரியங்களைச் செய்யாமலா இருக்கிறோம்? இன்று போல்தான் என்றும் இருந்துள்ளது நம் சமூகம். இரண்டு கதைகளை இங்கே பார்க்கலாம்.

மணிமுத்தம்மாளின் சாபம்

பாளையங்கோட்டை ஒன்றியத்திலுள்ள கொங்கந்தான் பாறை கிராமத்தில் மணிமுத்து என்ற பெயர் கொண்ட பெண்கள் அதிகம் இருப்பதைக் கண்டு, என்ன கதை என்று கேட்கப் போனோம். மூன்று தலைமுறைகளுக்கு முன்பாக அந்த ஊரில் மணிமுத்தம்மாள் என்றொரு பெண் இருந்தாள். அவள் ஒருநாள் குளத்துக்குக் குளிக்கப் போயிருக்கிறாள்.

குளித்துவிட்டு ஈரப்புடவையுடன் வீடு திரும்பியிருக்கிறாள். வீட்டுக்குள் அவள் நுழையும் நேரம் நடுவீட்டில் உட்கார்ந்து அவளுடைய கணவனும் கொழுந்தனும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவள் படியேறியபோது தன் காலில் ஏதோ ஒட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து அதை நீக்கு வதற்காகக் காலை உதறியிருக்கிறாள். அதைப் பார்த்த அவள் கணவனுக்குக் கோபம் இன்னமட்டு என்றில்லாமல் வந்துவிட்டது.

அவன் வேகமாக எழுந்து வந்து “இரண்டு ஆண்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களைப் பார்த்து நீ காலை ஓங்கி என்னையும் என் தம்பியையும் அவமதித்து விட்டாய்” என்று கத்தினான். உள்ளே போய் உளியும் கொட்டாப்புளியும் எடுத்துவா என்று சொல்லியிருக்கிறான்.

கொட்டாப்புளி என்பது ஐந்து கிலோ எடையுள்ள ஆயுதம். அவளும் மறுபேச்சு பேசாமல் எடுத்து வந்து கணவனிடம் கொடுக்க, அவன் அதை வாங்கிய கையோடு ஓங்கி அவள் தலையில் அடித்தான். அந்த இடத்திலேயே அவள் கீழே விழுந்து மரித்தாள். சாவதற்கு முன்னால், “இனி ஏழு தலைமுறைக்கு உனக்கும் உன் வம்சத்துக்கும் பெண் குழந்தைகளே பிறக்காது” என்று சொல்லிவிட்டுச் செத்துப்போனாள்.

அதன் பிறகு அந்தக் குடும்பத்தில் இருந்த பெண்களுக்கு அடிக்கடி சுகமில்லாமல் போனது. அவள் சபித்ததுபோல அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. கவலை கொண்ட குடும்பத்தார் குறி கேட்கப் போனார்கள். குறி சொல்பவர் மூலம் மணிமுத்தம்மாள் வந்து, “எனக்குப் பீடம் அமைத்து வழிபட்டுக் கொடை கொடுங்கள், எல்லாம் சரியாகும்” என்று சொல்லியிருக்கிறாள். அதன்படி, ஒவ்வோர் ஆடி மாதம் இரண்டாம் வெள்ளியன்று கொடை கொடுத்துவருகிறார்கள். இப்போது, குடும்பத்தில் பெண் குழந்தைகள் பிறந்து தங்குவதாகக் கூறுகிறார்கள்.

(கதை சொன்னவர்: பெரியசாமி ஆசாரி,
கொங்கந்தான் பாறை. சேகரித்தவர்: ஹெப்சிபா சாம்)

இரண்டாம் கதை 1980-ல் நடந்தது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புப் பகுதியில் சீனியம்மாள் என்னும் இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒருநாள் சீனியம்மாள் வீட்டில் தனியாக இருக்கும்போது, வீட்டுக்கு வெளியே சில அடித் தொலைவில் ஆண்கள் சிலர் கூடி நின்று, சிரித்துச் சிரித்து அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, வேலை முடிந்து வீடு திரும்பிய சீனியம்மாளின் அண்ணன், “நல்ல பொம்பளப் பிள்ளை குடியிருக்கிற வீடு மாதிரி இது தெரியலியே. கண்ட கண்ட ஊர்ப்பயக எல்லாம் சிரிக்கிறாப்பிலே இல்ல இருக்கு” என்று கோபமாகவும் சாடையாகவும் பேசியிருக்கிறான்.

அண்ணன் தன்னைத்தான் இப்படிக் கேவலமாகப் பேசுகிறான் என்பதைப் புரிந்துகொண்டு, மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டாள். பிறகென்ன, அவள் இறந்த இடத்தில் வீட்டுச் சுவரில் படம் வரைந்து அவளைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அவளை வணங்கியதால் நன்மை கிடைப்பதைப் பார்த்துப் பின்னர் ஊராரும் அவளை வழிபடலாயினர். அவள் காப்பியில் சீனி அதிகமாகப் போட்டுக் குடிப்பவளாகையால் அவளுக்குக் கிண்ணத்தில் சீனியையே படையல் பொருளாக வைத்து வணங்க ஆரம்பித்தனர்.

(சாமிகளின் பிறப்பும் இறப்பும் - 2011,
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்)

பெண்களைக் கொல்லும் சந்தேகம்

மேற்கண்ட இரு கதைகளிலும் ஆண்களின் மனத்தில் தோன்றிய தப்பான எண்ணம் அல்லது சந்தேகம் அந்தப் பெண்களின் கொலை/தற்கொலைக்குக் காரணமாக அமைந்து விட்டது. இதைப் போன்ற கதைகள் நூற்றுக்கணக்கில் அல்ல ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. தொகுக்கத் தொகுக்கப் பலப்பல தொகுதிகளாக வந்துகொண்டே இருக்கின்றன. இக்கதைகளுக்கு ஊடாகத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் வரலாறு ரத்தச் சகதியுடன் மேலெழுந்து வருவதைக் காண முடியும்.

தாங்கள் நினைத்தபடி தம் வீட்டுப் பெண்கள் இருக்க வேண்டும். அதில் சின்ன மீறல் இருந்தாலும் அவளைக் கொல்லும் உரிமை தமக்கு உண்டு என்கிற சிந்தனை ஆண்களின் தலைக்குள் எப்படி ஏறியது? அம்மீறலுக்கு அவள் காரணமாக இல்லாமல் இருக்கலாம். ஒரு பாவமும் அறியாதவளாகக்கூட அவள் இருக்கலாம். ஆனால், ஆணின் தலைக்குள் சந்தேகம் வந்துவிட்டால் அவளுக்குச் சாவுதான் என்ற முடிவு என்பது என்ன வகை நியாயம்?

திருந்திவிடுமா ஆண் சமூகம்?

மணிமுத்தம்மாள் சாவதற்கு முன்னால், “உங்கள் வம்சத்தில் இனிப் பெண் குழந்தையே பிறக்காது” என்று சாபமிட்டுப் போகிறாள். அப்பாவிப் பெண்களால் வேறு என்னதான் செய்துவிட முடிகிறது நம் சமூகத்தில். உயிரோடு இருந்தால் கொஞ்ச நேரம் திட்டலாம். மண்ணை வாரித் தூற்றலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. சாவு நிச்சயம் என்று ஆகிவிட்ட தருணத்தில் சாபம்தான் கொடுக்க முடியும். அதுவும் எப்படிப்பட்ட சாபம்? உனக்குப் பெண் வாரிசு கிடையாது என்று. ஏன் அப்படியான சாபம்?

பெண்ணை வைத்து வாழத்தெரியாத ஆண் முண்டமே உனக்கெல்லாம் எதற்கடா பெண் வாரிசு, என்கிற வயிறெரிந்த சாபம் அது. இந்தியனாகப் பிறந்த ஒவ்வோர் ஆணின் முகத்திலும் அறையப்பட்ட வார்த்தைகள் அவை. ஆனாலும், நாம் என்ன கோபப்பட்டுத் திருந்திவிடவா போகிறோம்? பெண்கள் வாழத் தகுதியற்ற நாடு என்கிற பெருமிதத்தை இந்தியா பெற்று மிளிர, தேசத்தை உந்தித்தள்ளிக்கொண்டிருப்போம்.

சீனியம்மாளைப் போல் ஒரு பாவமும் அறியாப் பெண்கள், சாபம்கூட விடத் தெரியாதவர்கள். தான் உண்மையானவள் என்பதைத் தன் வீட்டு ஆண்களுக்கு நிரூபிப்பதற்காகச் செத்துப்போனவர்கள். சீனியம்மாக்களின் மௌனம் வீட்டாரைக் கொல்வதால் அவளைத் தெய்வமாக்கிச் சாந்தப்படுத்த முயல்கிறார்கள்.

மணிமுத்தம்மாளும் சீனியம்மாளும் இட்டுக்கட்டப்பட்ட இதிகாசப் பாத்திரங்கள் அல்லர். சற்று முன்னால் நம்மோடு வாழ்ந்து மடிந்த ரத்தமும் சதையும் உள்ள மனுசிகள். ஏதோ சில பழந்தெய்வங்களின் பழங்கதைகள் இவை என்பதுபோல் சாதாரணமாக இவற்றை வாசித்துக் கடக்க முடியவில்லை. அதே சமூகத்தின் தொடர்ச்சிதான் நாம் என்கிற குற்ற உணர்வில் குறுகிப்போகிறோம். இன்னும் எத்தனை அம்மன்கள், எத்தனை சாபங்கள்!

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x