Published : 08 Mar 2020 12:01 PM
Last Updated : 08 Mar 2020 12:01 PM

வட்டத்துக்கு வெளியே: பெண்களின் ‘சுவை’யான கூட்டணி

அ.சாதிக்பாட்சா

வட்டத்துக்கு வெளியேஅ.சாதிக்பாட்சாவிவசாயம் நொடித்துப்போன நிலையில் சொந்த ஊரில் இருந்து பக்கத்து நகரத்துக்குக் குடியேறியது அந்தக் குடும்பம். வாடகை வீட்டில் வாழ்க்கையை ஓட்டுவது எப்படி என்ற கணவரின் மலைப்பை மனைவி புரிந்துகொண்டார். தனக்குத் தெரிந்த சமையலைவைத்துக் குடும்பத்தின் துயர் நீக்க முடிவெடுத்தார். அந்த முடிவு அவர்களது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியது.

வாடகை வீட்டில் இனிப்பு, கார வகைகளைச் செய்து விற்பனையைத் தொடங்கியவர்கள் இன்று தமிழகம் முழுவதும் கிளைகள் பரப்பி கோலோச்சிக்கொண்டிருக்கும் ‘அஸ்வின்ஸ் நிறுவன’த்தின் உரிமையாளர்கள். இந்த மாபெரும் வளர்ச்சிக்குக் காரணம் பெண்களே என்கிறார் உரிமையாளார்களில் ஒருவரான செல்வகுமாரி.

400-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறார்கள். அஸ்வின்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கணேசன் அடிப்படையில் ஒரு விவசாயி. 12-ம் வகுப்புவரை படித்துவிட்டு, சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் கடம்பூரில் விவசாயம் செய்துவந்தார். இவருக்கு 1991-ல் கழனிவாசல் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரியுடன் திருமணமானது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள். விவசாயத்தில் போதுமான பலன் கிடைக்கவில்லை. அதனால் பெரம்பலூருக்குக் குடிபெயர்ந்தனர்.

செல்வகுமாரி

வாடகை வீட்டில் தொடங்கிய பயணம்

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் மிகச் சிறிய வாடகை வீட்டில் தங்கினர். வருமானத்துக்கு என்ன செய்வது எனக் கணவனும் மனைவியும் ஆலோசித்தனர். அப்போது செல்வகுமாரி, தனக்குப் பலகார வகைகளையும் நொறுக்குத் தீனியையும் நன்றாகச் செய்யத் தெரியும் என்று சொன்னதுடன் அதையே தொழிலாகத் தொடங்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்.

முயன்றுதான் பார்ப்போமே என இருவரும் களமிறங்கினர். அச்சு முறுக்கு, தேன்குழல் முறுக்கு, தட்டை, அடை போன்ற நொறுக்குத்தீனி வகைகளை செல்வகுமாரி செய்து தர, கணேசன் அதைக் கடைகளுக்கு விற்பனை செய்தார்.

செல்வகுமாரியின் கைமணத்தில் தயாரான தின்பண்டங்களின் சுவையும் தரமும் சுவைப்போரைக் கவர்ந்தன. கடைகளில் ஆர்டர் குவிய, தின்பண்டத் தயாரிப்பில் தனக்கு உதவ இரண்டு பெண்களைப் பணியமர்த்தினார். நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரிக்க, சிறிது சிறிதாக இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார். பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்தது. தமிழகம் முழுவதும் 17 நகரங்களில் கிளைகள் அமைக்கும் அளவுக்கு வியாபாரம் விரிவடைந்தது. பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு ரோட்டில் அதிநவீனத் தயாரிப்புக்கூடத்தை அமைத்தனர். இதில் இப்போதைக்கு சுமார் 400 பெண்கள் பணிபுரிந்துவருகின்றனர். அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பெண்கள்.

பெண்களுக்கே முன்னுரிமை

“எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெண் ஊழியர்களின் பங்கு அதிகம். அவர்கள் உணவுப் பொருளைத் தரத்துடனும் சுவையாகவும் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். எந்த வேலையையும் கடமைக்காகச் செய்யாமல் ஈடுபாட்டுடன் செய்பவர்கள் பெண்கள். அதனால்தான் பெண்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருகிறோம். ஒருவர் மனநிறைவோடு இருந்தால்தான் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலைசெய்ய முடியும்.

அதனால், ஊழியர்கள் மனநிறைவோடு இருக்கும்விதமாக அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவற்றைச் செய்திருக்கிறோம். ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கும் உதவுகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை குடும்ப விழா நடத்தி, சிறந்த ஊழியர்களைப் பாராட்டி ஊக்குவிக்கிறோம்.

உற்சாகப்படுத்துகிறோம். நன்றாகப் படிக்கும் ஊழியர்களின் குழந்தைகளுக்குப் பரிசுடன் உதவித் தொகையை வழங்கிக் கவுரவிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் கணவரால் கைவிடப்பட்ட, கணவரை இழந்த, வறுமையில் வாடும் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளை நன்றாகப் படிக்கவைத்து பொறியாளர்கள், ஆசிரியர்கள், சுய தொழில் செய்பவர்களாக உருவாக்கியிருக்கிறார்கள்” என்றார் செல்வகுமாரி.

தொழிலதிபராக வளர்ந்த பிறகும் செல்வகுமாரி தினமும் தயாரிப்புக் கூடத்துக்குச் செல்கிறார். இனிப்பு, கார வகைகளைச் சுவைபார்த்து, தேவைப்பட்டால் திருத்தம் சொல்கிறார். தின்பண்டங்களைச் செய்கிறார். ஊழியர்களை அம்மா, அக்கா, தங்கை, அண்ணா, தம்பி என உறவுமுறை சொல்லி அழைத்து அணுக்கமாகப் பேசுகிறார். அவரது இந்த அணுகுமுறை ஊழியர்களை உற்சாகப்படுத்துகிறது. இதுவும் செல்வகுமாரியின் வெற்றியின் ரகசியம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x