

இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரையப்படும் மதுபானி வகை ஓவியங்களில் எளிமையின் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருக்கும். மிகப் பழமையானதாகக் கருதப்படும் இந்த ஓவிய வகை, புராண காலத்திலிருந்தே புழக்கத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மிதிலையின் மன்னர் ஜனகர் காலத்திலேயே இந்த வகை ஓவியங்கள் வரையப்பட்டதாகச் சொல்கிறார்கள். மிதிலாபுரியில் ஜனக மன்னரின் மகள் சீதைக்கும் ராமருக்கும் கல்யாணம். இந்த நிகழ்ச்சியை மதுபானி வகை ஓவியங்களாகத் தீட்ட ஜனக மகாராஜா நூற்றுக்கணக்கானவர்களை நியமித்திருந்தாராம்.
இத்தகைய பாரம்பரியப் புகழ் வாய்ந்த, கிராமிய மணம் கமழும் மதுபானி வகை ஓவியங்களை வரையக் கற்றுத் தருகிறார் சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் வசிக்கும் சுஜாதா சுந்தர்ராஜன். தற்போது இயற்கை வண்ணங்களுடன் அக்ரிலிக் வண்ணங்களும் இந்த ஓவியங்களில் சேர்க்கப்படுகின்றன.
தேங்காய் மூடி மற்றும் நார், சணல் பை, காலியான பற்பசை குழல் மூடி, முட்டை ஓடு, பாட்டில் மூடி, பெருங்காய டப்பா, ஸ்டிரா, சாக்லேட் பேப்பர் ஆகியவற்றைக் கொண்டு பரிசுப் பொருட்களைச் செய்து அசத்துகிறார் இவர்.
தென்னம்பாளை, அரச இலை ஆகியவற்றில் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வண்ணங்களைக் கொண்டு வரைகிறார் இவர். குங்குமம், மஞ்சள் பொடி, மருதாணிச் சாறு, பீட்ரூட் சாறு ஆகியவற்றை வைத்து இயற்கை வண்ணங்களைத் தயாரித்துக்கொள்கிறார்.
இருபது ஆண்டு பயிற்சியின் பயனாகப் பல கைவேலைகளைக் கற்றுக் கொண்டுள்ள இவர், ‘சக்தி ஆர்ட் அண்ட் கிராஃப்ட்’ என்ற பெயரில் பலருக்கும் அவற்றைக் கற்றுத் தருகிறார். “மாணவ, மாணவிகள் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் இதைக் கற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார் சுஜாதா.
தென்னையோலையில் கிளி, மீன், வேலைப்பாடு மிகுந்த தோரணம், பூ மாலை போன்றவற்றையும் ஆர்வத்தோடு கற்றுக்கொண்ட இவர், இதில் ஆர்வமுள்ளவர்களுக்கு அவற்றைக் கற்றுத் தருகிறார். பனையோலையில் தோடு, வளையல் ஆகியவற்றையும், பனை நுங்கு குலையில் பொக்கேயும் செய்வதாகச் சொல்கிறார்.
படங்கள்: எல். சீனிவாசன்