

மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்பவர்கள் வேண்டுமானால் ஆண்களாக இருக்கலாம். ஆனால், மீன் சந்தையில் ஆண்களைவிடப் பெண்களின் பங்களிப்பே அதிகம். மீன் விற்பனையைத் தவிர என்னென்ன வேலைகளை அவர்கள் செய்கிறார்கள் என்பதை அறிய ராயபுரம் மீன் சந்தைக்குச் சென்றால் விடைகளுக்குப் பதில் கேள்விகளே பிறந்தன.
ஏலம் விடுகின்றனர், மீன்களைப் பலகையிலும் கூடைகளிலும் வைத்து விற்கின்றனர், மீன்களை வாங்கிச் செல்லும் பைகளை விற்கின்றனர், தள்ளுவண்டியில் சாப்பாட்டுக் கடை நடத்துகின்றனர். எங்கெங்கு காணினும் சக்தி மயம். ஆண்கள் பிடித்துவரும் மீன்களைப் பெண்கள்தாம் சந்தைப்படுத்துகின்றனர்.
மீன்களை வாங்க மக்கள் அதிக அளவில் கூடும் இடம் வட சென்னை பகுதி என்பதால் நள்ளிரவு முதல் விடியற்காலைவரை சந்தை களைகட்டும். நேரம், காலம் கருதாது அந்த நேரத்திலும்கூடப் பெண்கள் சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.
சங்கரா மீனு, நெத்திலி மீனு, வஞ்சிர மீனு என்று அந்தப் பெண்கள் வாடிக்கையாளர்களைக் கூவி அழைப்பதைக் கேட்கும்போதே அனைத்து வகையான மீன்களையும் வாங்கிவிடத் தோன்றும். அதேநேரம், பேரம் பேசுவது என்கிற பெயரில் சண்டையில் இறங்கும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சாதூர்யமாகச் சமாளிக்கின்றனர். சந்தை முழுக்கப் படமெடுத்துவிட்டுத் திரும்பும் போது பெண்களின் உழைப்பால்தான் அந்தச் சந்தை கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.
படங்கள்: வி. சாமுவேல்