நாயகி 06: அவளுக்கென்று ஒரு வீடு

நாயகி 06: அவளுக்கென்று ஒரு வீடு
Updated on
2 min read

பிறந்த வீடா, புகுந்த வீடா என்று கேட்டால், இரண்டுமே தனக்குச் சொந்தமில்லை என்றுதான் பெண்களில் பலருக்கும் சொல்லத் தோன்றும். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் இதை உணர்ந்து கடந்து வந்திருப்பார்.

திருமணமாகிவிட்ட பிறகு தாய் வீட்டுக்குச் சென்றால், அதுவும் சகோதரர்களுக்குத் திருமணமான பிறகு சென்றால் போதும். அவ்வளவு காலம் நாம் விளையாடிய, ஆண்டு பழகிய வீட்டில் எதையும் உரிமையோடு எடுத்து ஆள முடியாது. ஒரு தர்மசங்கடத்துடனே எடுக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால் உரியவர்களிடம் (நாம் உரியவர்கள் என்ற பதவியை இழந்துவிடுகிறோம்) கேட்டு எடுக்க வேண்டி இருக்கும். நாம் அங்கே விருந்தாளி மட்டுமே. அதாவது சொந்த நாட்டிலேயே அகதிகள்போல!

கணவன் வீட்டுக்குப் போனாலும் அங்கும் நமக்கு முழு உரிமை கிடைக்குமா என்றால், அதுவும் கேள்விக்குறிதான். எந்நாளுமே ஒரு பெண் என்பவள் அந்த வீட்டின் துணை முதல்வர்தான். முதல்வர் பதவி கணவன்மார்களுக்கே என்பது இந்தச் சமுதாயத்தில் எழுதப்படாத சட்டம்.

‘ஏன் நமக்கே நமக்கென்று ஒரு வீடு இல்லை?’ என்ற கேள்வியின் நாயகிதான் ‘அவள் வீடு’ கமலா (தெலுங்குச் சிறுகதைகள், தெலுங்கில்: கவனசர்மா, தமிழில்: கெளரி கிருபானந்தன்). அந்தக் கேள்வியின் பின்னணியில் அவள் உணர்த்தவரும் இந்தச் சமூகத்தின் முகம் கட்டாயம் மாற்றப்பட வேண்டியது. அதிகம் படிக்காத கமலா, தனக்கென்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டு, தனக்கெனத் தனியே ஒரு வீடு பார்த்துக் குடியேறுகிறாள். இதைக் கௌரவப் பிரச்சினையாகக் கருதி பிள்ளையும் தம்பியும் கணவனின் தூதர்களாக வருகிறார்கள். அவர்களிடம் தன் பிறந்த வீடு தனக்குச் சொந்தமில்லாமல் போனதையும், சின்ன சின்ன கோபத்தின் போதுகூட ‘இது என் வீடு’ எனக் குத்திக் காட்டிப் பேசும் கணவனால், புகுந்த வீடும் தனக்கு சொந்தமில்லை என்றும் உணர்ந்து கொண்டதன் விளைவுதான் இது என்பதைக் கூறுகிறாள். அளவில் சிறியதாக இருந்த போதிலும் ‘இது என் வீடு; எனக்கே எனக்கான வீடு’ என்று அவள் சொல்லும்போது தூதர்களாக வந்தவர்கள் வாயடைத்துப் போகிறார்கள்.

போலி அதிகாரம்

“அசல் விஷயம் என்னவென்றால் என் தந்தை கட்டிய வீடு என்னுடையது இல்லை. என் மாமனார் கட்டிய வீடும் என்னுடையது இல்லை. கடைசியில் என் கணவர் வீடும் என்னுடையது இல்லை. இந்த விஷயத்தை நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு விதமாக உணர்த்திவிட்டீர்கள்”

“இது தங்கும் உரிமை பற்றிய பிரச்சினை இல்லை. என் பேச்சு எடுபடக்கூடிய இடமாகவும் என்னைச் சார்ந்தவர்கள் உரிமையோடு வந்து போகும் இடமாகவும் இருந்தால்தான் அது என் வீடு” என்பது கமலாவின் வாதம்.

வாடகை வீடு தேடும் இடங்களில், “இந்த வீட்டை வாடகைக்குத் தரும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறதா?” என அந்த வீட்டுக்காரப் பெண்களிடம் கமலா கேட்கும் கேள்வி, வீடுகளில் பெண்களின் நிலை என்ன என்பதையும் போலி அதிகாரம் மட்டுமே அவர்களின் சொந்தம் என்ற நிதர்சனத்தையும் உணர்த்துகிறது.

படைப்பில் எது முக்கியம்? மொழியா, உத்தியா, கதையா, கதாபாத்திரங்களா என்றால் ஒரு நல்ல சமூகத்தை வடிவமைப்பதற்கான அல்லது முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டலாக படைப்பு இருப்பின் சிறப்பு. தனி மனித வாழ்வின் துயரங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல் நம் சமூகச் சூழலை வெளிப்படுத்தும் சிறு முயற்சிதான் இந்த கமலா கதாபாத்திரம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in