

விட்டுக்கொடுத்து, சகிப்புத் தன்மையுடனும் புரிதலுடனும் பயணிப்பதுதான் காதல். பெரியோர் நடத்திவைத்த திருமணம் எங்களுடையது. அப்போது அவருக்கு 22 வயது. ஒரு ஆடிட்டரிடம் பயிற்சியாளராக வேலை செய்துகொண்டிருந்தார். அதனால், அப்போது அவருக்குத் திருமணத்தில் விருப்பமில்லை. அவருடைய அப்பாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்துகொண்டார். வேலையைத் தொடர முடியாமல் போன ஆதங்கம் என் மேல் பல முறை கோபமாக வெளிப்படும். எனக்குச் சகிப்புதன்மை அதிகம் என்பதால், அவரின் கோபத்தை நீடிக்க விடமாட்டேன்.
‘சின்னதம்பி’ படத்தில்வரும் குஷ்புபோல் நான் வளர்க்கப்பட்டதால் கோளாறான விஷயங்கள் நிறைய செய்வேன். அன்றிலிருந்து இன்றுவரை எங்களிடையே எந்த விஷயத்திலும் ஒளிவு மறைவு கிடையாது. ரகசியம் என்னும் இரும்புத் திரை எங்களுக்கு நடுவே விழ நாங்கள் அனுமதிப்பதே இல்லை. எனக்குத் தேவைப்படும், ஆசைப்படும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் சுதந்திரமும் பொருளாதார வசதியும் இருந்தபோதிலும், நான் அப்படிச் செய்வதில்லை. நான் எங்கே சென்றாலும் அவரிடம் சொல்லாமல் செல்ல மாட்டேன். இது சாதாரண விஷயம் என்றாலும் அதில் அவருக்கு ஒரு சந்தோஷம், எனக்கு மகிழ்ச்சி.
மகிழ்ச்சியான எங்கள் குடும்ப வாழ்வில் என் உடல் நலக் குறைபாடு பேரிடியாக விழுந்தது. நாள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்கும்படி ஆனது. பிறரது உதவியின்றி தன்னிச்சையாக இயங்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் இருக்கிறேன். ஆனால், எனக்கு உதவுவதில் என் கணவர் ஒரு நாளும் சுணக்கம் காட்டியதில்லை. ஒருநாள்கூட முகம் சுளித்ததில்லை. எங்கள் இருவருக்கும் தினமும் காலை 11 மணிக்கு டீ குடிக்கும் பழக்கமுண்டு. அப்போது நான் பிஸ்கட் சாப்பிடுவேன். என்னால் பிஸ்கட்டை இரண்டாக உடைக்க முடியாது என்பதால் அதை அவர் உடைத்துவைப்பார். இதுவொரு விஷயமல்ல. ஆனால், நான் அப்போது மகிழ்ந்து, நெகிழ்ந்துபோவேன். அவர் அப்படிச் செய்வது என் மீதான கருணையால் மட்டுமல்ல, ஆழமான காதலால் என்பது எனக்குத் தெரியும்.
நான் அவரைச் சந்தித்த தருணம் இப்போதும் நினைவில் இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் திருவாரூர் ஆழித்தேர் வெள்ளோட்டம். அப்போது எங்களுக்குத் திருமணம் முடிவாகியிருந்தது. நான் என் பாட்டியுடன் தேர் பார்க்கச் சென்றிருந்தேன். தெருவில் எதிர் பக்கம் நின்றிருந்தவரைச் சுட்டிக்காட்டிய பாட்டி, “இவர்தான் உனக்கு முடிவுசெய்திருக்கும் பையன்” என்றார். நான் பாட்டியுடன் நின்றிருந்ததால் என்னையும் அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் கடும் வெயிலில் பனிபொழிவதுபோல் உணர்வேன். ஒருநாள் என் பேத்தி என் கணவரிடம், “உங்களும் பாட்டிக்கும் பெற்றோர் செய்துவைத்த திருமணமா காதல் திருமணமா?” என்று கேட்டாள். அதற்கு நான், “பெற்றோர்களால் செய்துவைக்கப்பட்ட திருமணம்” என்றேன். அப்போது அவள் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். இப்போது அவள் கல்லூரி மாணவி. ஆனால், ஒவ்வொரு காதலர் தினத்தின் போதும் நாங்கள் இருவரும் என்ன பரிசளித்துக்கொண்டோம் எனக் கேட்பாள். பேத்தி இவ்வாறு கேட்டும்போது எங்கள் மனது குதூகலிக்கும்.
இதுபோன்ற சந்தோஷங்களை எண்ணியே நாட்கள் உற்சாகத்துடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது உடல்நலக் குறைவோடு முதுமையும் சேர்ந்துகொண்டது. தொட்டில் குழந்தையைப் போல் கட்டிலிலேயே இருக்கும் என்னை முழுநேரமும் அவர்தான் கவனித்துக்கொள்கிறார். பாரதிதாசன் ‘குடும்ப விளக்கி’ல் வயதான தம்பதியர் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். ஒரு காலைப் பொழுதில் இருவரும் படுத்திருப்பார்கள். அப்போது கணவர் மனைவியின் தூக்கம் கெடாதவாறு எழுந்து பால் வாங்கி வருவார். அதற்கு மனைவி, “இந்தப் பனியில் ஏன் பால் வாங்கச் சென்றீர்கள்?” என்பார். அதற்குக் கணவர், “காலையில் எழுந்தவுடன் உனக்கு காபி குடிக்க வேண்டும் என எனக்குத் தெரியாதா? அதனால்தான்” என்பார். முதுமை காரணமாக உடல் உபாதையில் படுத்திருக்கும் மனைவி, “நான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறேன்” என வருத்தமான குரலில் வேதனைப்படுவார். அதற்கு அவர், “நீ என்னுடன் இருக்கிறாய் என்பதே போதும்” என்பார். இந்த வரிகள் முதுமைக் காதலின் மகத்துவத்தை வெளிப்படும்.
பலப் பல வேதனைகள், இன்னல்கள், இடர்பாடுகள் போன்றவை ஒவ்வொரு நொடியும் தொடர்ந்தாலும் என் கணவரின் அபரிமிதமான அன்பால் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகிறது.
- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.