

வாழ்க்கையோடு வறுமை விளையாடிக் கொண்டிருக்க நாம் ஏன் விளையாட்டையே வாழ்க்கையாகப் பார்க்கக் கூடாது எனக் களமிறங்கிய பிரமிளா, ஆசிய மற்றும் உலகக் காவலர்களுக்கான தடகளப் போட்டிகளில் தங்க மங்கையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிரமிளா, தமிழ்நாடு காவல் துறையில் முதல் கிரேடு காவலராகப் பணியாற்றிவருபவர். இவருடைய பெற்றோர் ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். பால் வியாபாரம் செய்து பிள்ளைகள் ஐவரையும் படிக்கவைத்துள்ளனர். இவர்களுடைய நான்காம் குழந்தையான பிரமிளா, பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடையவராக இருந்தார். பள்ளி, கல்லூரியில் படித்தபோதே மாநில, தேசியப் போட்டிகளில் பதக்கங்களை வென்றார்.
நான்கு தங்கம்
போட்டிகளில் பதக்கங்களை வென்றாலும் குடும்பப் பொருளாதார நிலை பிரமிளாவின் முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருந்தது. இதனால், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாடு காவல் துறையில் விளையாட்டுப் பிரிவின்கீழ் பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.
2005-ல் காவல் துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. தொழில்முறைத் தடகள வீராங்கனையாக பதினெட்டு ஆண்டுகளாக விளையாடிவருகிறார் பிரமிளா. உயரம் தாண்டுதல், 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயங்களில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவருகிறார்.
காவல் துறையில் பணிபுரிந்தபடியே விளையாட்டுப் பயிற்சியையும் இடைவிடாமல் மேற்கொண்டுவருவது பிரமிளாவை வெற்றி மங்கையாகத் தொடரச்செய்கிறது. 2019 டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் 5.58 மீ. உயரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் முந்தைய சாதனையான 5.33 மீட்டரை அவர் முறியடித்துப் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதே போட்டியில் 100, 200, 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 450 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 30 பேர் மட்டுமே பதக்கங்களை வென்றுள்ளனர். அதிலும், ஒரே போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பிரமிளா.
“வீட்டில் நாங்கள் மொத்தம் ஏழு பேர். எனக்கு மூன்று அக்காக்களும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் மாடு வளர்த்துப் பால் வியாபாரம் செய்து எங்களைப் படிக்கவைத்தார்கள். எங்கள் ஐந்து பேரையும் வளர்த்து ஆளாக்குவதே அம்மா, அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்ன செய்தால் குடும்ப கஷ்டத்தைச் சரிசெய்ய முடியும் என யோசித்தபோதுதான் எனக்கு தெரிந்த விளையாட்டைத் தகுதியாக வைத்துக்கொண்டு போலீஸ் வேலையில் சேர முடிவுசெய்தேன். நான் நினைத்தபடியே எனக்குக் காவல் துறையில் வேலை கிடைத்தது. ஒரு பக்கம் வேலை செய்துகொண்டே இன்னொரு பக்கம் விளையாட்டுப் பயிற்சியிலும் ஈடுபடுவேன். காலை, மாலை வேளைகளில் பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே மதியம், இரவு நேர டியூட்டியைத் தேர்ந்தெடுத்தேன். என் நிலைமையைப் புரிந்துகொண்டு உயர் அதிகாரிகளும் எனக்கு உதவியாக இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். அதற்குக் கிடைத்த பரிசுதான் இந்த சர்வதேச அங்கீகாரம்” என மூச்சிரைக்கப் பேசுகிறார் பிரமிளா.
இரட்டைச் சாதனை
உலக அளவில் காவல்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்காக 2019 ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடந்தப்பட்ட சர்வதேசப் போட்டிதான் பிரமிளா பங்கேற்ற முதல் சர்வதேசப் போட்டி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 120 பேர் கலந்துகொண்டனர். அதில் தமிழகக் காவல் துறை சார்பில் ஏழு பேர் கலந்துகொண்டனர். 15 நாட்கள் நடைபெற்ற அந்தப் போட்டியில் தடகளப் பிரிவில் மட்டும் ஐந்தாயிரம் வீரர்கள் போட்டியிட்டனர். அதில் உயரம் தாண்டுதல், 100 மீ., 200 மீ., 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளில் பிரமிளா கலந்துகொண்டார். இதில் உயரம் தாண்டுதல், 100 மீ., ஓட்டப் பந்தயம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் தங்கம் வென்றார். இதே போட்டியில் 200 மீ., 4x100 தொடர் ஓட்டப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பொதுவாக, சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுடைய போக்குவரத்துச் செலவை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பிரமிளாவைப் போல் தமிழ்நாடு சார்பில் இந்த சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் தங்களுடைய செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சர்வதேசப் போட்டியில் ஒரே ஆண்டில் ஆறு தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளி பதக்கங்களைவென்ற பிரமிளா இந்த இரண்டு போட்டிகளில் கலந்துகொள்ள மூன்று லட்ச ரூபாய்வரைக்கும் செலவு செய்துள்ளார். அதற்காக நண்பர்களிடமிருந்து உதவி பெற்றதுடன் நகைகளையும் அடகு வைத்துள்ளார். “பொருளாதாரரிதீயாகவும் உடல்ரிதீயாகவும் நான் மிகவும் காஷ்டப்பட்டுள்ளேன். இந்த சர்வதேப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன்பு என் இரண்டு கால்மூட்டுகளும் பாதிக்கப்பட்டன. முறையான சிகிச்சையுடன் கடின பயிற்சிக்குப் பிறகுதான் சீனாவில் நடைபெற்ற போட்டியில் என்னால் கலந்துகொள்ள முடிந்தது. என் உழைப்புக்குக் கிடைத்த பலனாகத்தான் வென்ற பதக்கங்களைப் பார்க்கிறேன். சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றால் தமிழக அரசு சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்படும். இந்தப் பரிசுத்தொகையை பெறுவதற்காக அனைத்துச் சான்றிதழ்களையும் ஒப்படைத்திருக்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள என்னைப் போன்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அதற்கான அறிவிப்புக்காகக் காத்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் பிரமிளா.
பிரமிளாபோல் இந்த சர்வதேசப் போட்டிகளில் பரிசுபெற்ற வீரர், வீராங்கனைகள் அரசின் அறிவிப்புக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும்போது, பிரமிளாவைப் போல் இன்னும் பல நூறு விளையாட்டு வீராங்கனைகள் தோன்றுவார்கள்.