நிகரெனக் கொள்வோம் 05: நம் இயலாமையின் வெளிப்பாடு

நிகரெனக் கொள்வோம் 05: நம் இயலாமையின் வெளிப்பாடு
Updated on
2 min read

ஒரு முறை குழந்தைகளிடம் அவர்கள் எதையெல்லாம் தண்டனை என்று கருதுகிறார்கள் என்று உரையாடியபோது 108 வகைகளை வரிசைப்படுத்தினோம். அவற்றில் பெரும்பாலானவை அவர்கள் அவமானப்படுத்தப்படுபவையாக இருந்தன. சாதியைச் சொல்லி அழைத்தல், அப்பாவின் தொழிலை வகுப்பறையில் குறிப்பிடுதல், பட்டப்பெயர் வைத்து ஆசிரியர் அழைத்தல், வெளியில் நிறுத்துதல், ஓடவைத்தல், தன் தலையில் தானே குட்டிக்கொள்ளுதல், கன்னத்தில் அறைதல், முடியை இழுத்தல் இப்படிப் பலவற்றை உள்ளடக்கியது அந்தப் பட்டியல்.

பள்ளியில் அளிக்கப்படும் தண்டனை களைக் கடந்து வீட்டில் நடப்பதைப் பற்றிக் குழந்தைகளிடம் கேட்டபோது பட்டியல் நீண்டது. ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் மட்டுமல்ல, குழந்தைகள் வேறு பலரிடமும் அடி வாங்குவது தெரியவந்தது.

எதற்காக அடிக்கிறார்கள்?

பள்ளியிலும் வீடுகளிலும் அடி வாங்குவது பற்றி அவர்கள் விளக்கும்போது நமக்குக் கண்ணீர் கொட்டும். “சாப்பிடாததற்கு, சாப்பிட்டதற்கு, மார்க் வாங்காததற்கு, விளையாடியதற்கு, கை தவறி கீழே சிந்தியதற்கு, விழுந்து எழுந்ததற்கு, பதில் சொல்லாததற்கு, வீட்டு வேலை செய்யாததற்கு, தூங்குவதற்கு, எட்டிப்பார்த்ததற்கு, பதில் சொன்னதற்கு, சொல்லாததற்கு, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு உதவியதற்கு, உதவாததற்கு, பெண் பிள்ளை என்பதால், வாயாடியதற்கு, கேள்வி கேட்டதற்கு” என்று நூற்றுக்கணக்கான காரணங்களைக் குழந்தைகள் பட்டியலிட்டார்கள். சில குழந்தைகள், “ஆபீஸில் பிரச்சினை என்றால் வீட்டுக்கு வந்ததும் என்னை அடிப்பாங்க, நான் பிறந்தது அவங்களுக்குப் பிடிக்கவில்லை, குடிச்சிட்டு வந்தால் மட்டும் அடிப்பாங்க” என்பது போன்றவற்றைக் குறிப்பிட்டனர். குழந்தைகள் சொன்னபோதுதான் பெற்றோர்களாக, பெரியவர்களாக, ஆசிரியர்களாக நாம் எதற்கெல்லாம் குழந்தைகளை அடிக்கிறோம் என்பது புரிந்தது.

எப்படியெல்லாம் அடிக்கிறார்கள்?

“தொடையைப் பிடித்துத் திருகுவார்கள், வீட்டில் அதற்கென்று ஒரு குச்சி இருக்கு, ஒரு முறை அடித்ததில் எலும்பு முறிந்திருக்கிறது; அடித்த தழும்பு இதோ, தலையில் நறுக் நறுக்கென்று குட்டுவார்கள், சூடு வைத்திருக்கிறார்கள், முகத்தில் காறித் துப்பி இருக்கிறார்கள், வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி இருக்கிறார்கள், சுவரில் என் தலையை மோதுவார்கள், கையில் கிடைப் பதை வைத்து வெளுப்பார்கள், மிதிப்பார்கள், விளக்குமாறை வைத்து அடிப்பார்கள்”.

அடிவாங்கியபின் என்ன செய்வீர்கள்?

“அழுவோம், முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு உட்கார்ந்து அப்படியே தூங்கி விடுவேன், திருப்பி அடிக்கணும் எனத் தோன்றும் ஆனால் முடியாது, கோவம் கோவமாக வரும், அடிவாங்கும்போது நிறைய வலிப்பதுபோல் சத்தமாக அழுவோம், அடிவிழப்போகிறது என்று தெரிந்தால் கொஞ்சம் கவனமாகிவிடுவோம், என்னை அடிச்சிட்டு அம்மா அழுவாங்க அதை மறைந்திருந்து பார்ப்பேன், காயம்பட்ட இடத்தைப் பார்த்துப் பார்த்து அழுவேன், ஆறுதல் படுத்த யாராவது வரமாட்டார்களா என்று பார்ப்பேன், தப்பித்து ஓடிவிடுவேன்”.

அடிப்பது சரியா? இந்தக் கேள்வியைக் குழந்தைகளிடம் கேட்பது குற்றம் என்று தெரிந்தும் கேட்டு பார்ப்போம் என்று கேட்டேன்.
“சரி, தவறு, திருந்துவதற்குத்தான் அடிக்கிறார்கள், டீச்சர் அடித்தால் தப்பு, வீட்டில் உள்ளவர்கள் அடித்தால் சரி, அப்பான்னா அடிப்பார்”.

அடி வாங்கியதால் திருந்தியவர்கள் எத்தனை பேர்? இந்தக் கேள்விக்கு யாருமே கை தூக்கவில்லை.
நாம் ஏன் குழந்தைகளை அடிக்கிறோம்?

குழந்தைகள் மீது நமக்குள்ள அதிகாரம், நமது இயலாமை, குழந்தைகள் மீதான நம்பிக்கையின்மை, குழந்தைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இன்மை, பெற்றோர் அல்லது ஆசிரியராக இருக்கத் தகுதியின்மை, வெறுப்பு, கண்மூடித்தனமான அன்பு, உளவியல் காரணங்கள், உடல் பிரச்சினைகள், போதை, வக்கிரம், சாதிய மன நிலை, பேராசை, எதிர்பார்ப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

எப்படி நியாயப்படுத்துகிறோம்?

அடிப்பதை நியாயப்படுத்தும் பேச்சு தரக்குறைவாக இருக்கும். “அடியாத மாடு படியாது, அடி உதை உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவதில்லை, கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிக்கணும், எங்கப்பா என்னை அடிச்சதில் நான் ஒரு மடங்குகூட அடிக்கலை, அடிக்கணும்னு ஆசைப்பட்டா அடிக்கிறேன் அவன் செய்யும் வேலை அப்படி, சொல்றதைக் கேட்டுத் திருந்துனா ஏன் அடிக்கிறோம், பல தடவை சொல்லிக் கேட்காததை அடித்துத்தான் செய்ய வைக்க முடியும்” - குழந்தைகளை அடிப்பதற்காகப் பெரியவர்கள் சொல்லும் வியாக்யானங்களைக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

குழந்தைகள் மட்டுமா அடி வாங்குகின்றனர்?

வன்முறை என்பது அதிகாரத்தின் வெளிப்பாடாகவும் வலுவானவர்கள் வலுவிழந்தவர்களைத் தாக்குவதாகவும் நம் அன்றாட வாழ்வின் பகுதியாகவும் இருக்கிறது. தற்போது அதிகரித்துவரும் சாதிய வன்முறை, காதலிக்கும் இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், மதவாதத் தாக்குதல், வார்த்தைகளால் தொடுக்கப்படும் தாக்குதல் போன்றவை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. இத்தகைய வன்முறைகளில் ஒன்றாக இருப்பது குழந்தைகள் மீதான வன்முறை. நாம் பாதுகாக்க வேண்டிய குழந்தைகளை, வளர்த்தெடுக்க வேண்டிய குழந்தைகளை நாமே அடிப்பது வெகு இயல்பான செயலாகிவிட்டது. இந்தப் பழக்கம் நம்மிடமிருந்து நம் பிள்ளைகளைத் தொற்றி அவர்களும் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளதைப் பார்க்கிறோம். “ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை அடிக்கிறது என்றால், அந்தக் குழந்தை வீட்டில் அடி வாங்குகிறது என்று பொருள். அடுத்த காரணம் வீட்டில் அம்மாவோ வேறு யாரோ அடி வாங்குவதைப் பார்க்கிறது. அதற்கும் அடுத்த காரணம் அடிப்பவர்களை ஹீரோவாகப் பார்க்கிறது” என்கிறார் ‘பயிர் பள்ளி’யை நடத்திவரும் ப்ரீத்தி.

அடிக்காமல், அடி வாங்காமல் ஆகிய இருவகைக்குள்ளும் அடங்கும் வலுவான மனிதர்களாக நாம் வாழ வேண்டியுள்ளது. நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் நம்மை மாற்றிக் கொள்ளவும் வேண்டும் என்பதைத்தான் குழந்தைகளோடு நடத்திய மேற்கண்ட உரையாடல் உணர்த்துகிறது. சக உயிர்களை மதிக்கவும் புரிந்துகொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் நேசிக்கவும் முடியாமல் இருந்தால் நாம் மனிதர்களா? பிறரை அடித்துத் துன்புறுத்தும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பது சரியா? அதை எப்படி மறு ஆய்வுக்கு உட்படுத்துவது? குழந்தைகளால் மதிக்கப்படும் பெற்றோராக இருப்பது எப்படி? விடை தேடுவோம்.
(சேர்ந்தே கடப்போம்)

கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in