

மாணவிகளிடம் நடத்தப்பட்ட அநாகரிக சோதனை
குஜராத்தில் உள்ள ஸ்ரீசஹஜானந்த் பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 68 மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச்சொல்லி மாதவிடாய் சோதனை நடத்திய கல்லூரி முதல்வர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர்.
ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள இந்தக் கல்லூரி சுவாமிநாராயண் மடத்தினரால் நடத்தப்படுகிறது. இங்கே 1,500 மாணவிகள் படித்துவருகிறார்கள். இவர்களில் 68 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துவருகிறார்கள். இந்துமதக் கட்டுப்பாடுகளின் கீழ் இக்கல்லூரி நடத்தப்படுவதால் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தங்களுடைய மாதவிடாய் நாட்களின்போது தனியறையில் தங்கவைக்கப்படுவது வழக்கம். மாதவிடாயில் உள்ள மாணவிகள் அந்த நாட்களில் விடுதிச் சமையலறையில் நுழையக் கூடாது. மற்ற மாணவிகளுடன் சேர்ந்து சாப்பிடவோ தொட்டுப் பேசுவதற்கோ அனுமதியில்லை. மேலும், மாதவிடாய் நாட்களில் அதற்காக வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் மாணவிகள் தங்களுடைய பெயரைப் பதிவுசெய்வது கட்டாயம். இந்நிலையில் கடந்த புதன்கிழமை விடுதி மாணவிகள் சிலர் மாதவிடாயின்போது விடுதிச் சமையறையில் நுழைந்ததாகவும் மற்ற மாணவிகளுடன் சேர்ந்து சாப்பிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தகவலை விடுதிக் காப்பாளர் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு கல்லூரி முதல்வர் ரீட்டா ராணிகா தலைமையில் நான்கு கல்லூரி ஊழியர்கள் 68 மாணவிகளின் உள்ளாடையைக் கழற்றி அவர்கள் மாதவிடாயில் உள்ளனரா எனச் சோதனையிட்டுள்ளளனர். கல்லூரி நிர்வாகத்தின் இந்த அத்துமீறலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகே இந்த மோசமான நிகழ்வு நாடு முழுவதும் அறியப்பட்டது. இதையடுத்துச் சிறப்புக் காவல் துறையினர் கல்லூரி முதல்வர் உட்பட நான்கு ஊழியர்களையும் கைதுசெய்துள்ளனர். இந்த நிகழ்வுக்குத் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளை ஆணையத்தின் தலைவர் ரஜுல் எல். தேசாய் சந்தித்தார். இது குறித்துப் பேசிய தேசாய், “அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் செயலால் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதவிடாயில் உள்ள மாணவிகளைத் தனிமைப்படுத்துவது பெண் குழந்தைகள் கல்வி பொறுவதற்கான உரிமைச் சட்டத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற செயல்களை எந்தக் காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லூரி நிர்வாகத்தின் இந்தச் செயல் மிகப்பெரிய தவறு” என்றார்.
பட்டணமெங்கும் பழங்குடியின் பாடல்
‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளத் திரைப்படம் அண்மையில் வெளியானது. அதில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த நஞ்சம்மா என்பவர் பாடிய பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இப்படத்தின் கதை தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடி கிராமத்தில் நடைபெறுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், படத்தின் இயக்குநர் சாச்சி, அப்பகுதியில் செயல்பட்டுவரும் ‘ஆசாத் காலா சமிதி’ குழுவினரை அணுகியுள்ளார். பின்னர் அக்குழுவில் பல ஆண்டுகளாகக் கிராமியப் பாடல்களைச் சொந்தமாக உருவாக்கிப்பாடும் நஞ்சம்மாவின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இதன்பிறகு கிராம இசைக் கலைஞர்களின் இசையில் நஞ்சம்மா உருவாக்கிய ‘கலகாத்த சந்தனமர’ என்ற பாடலைப் பாடியுள்ளார். 60 வயதாகும் நஞ்சம்மா, சிறுவயதிலிருந்தே கிராமியப் பாடல்களைச் சொந்தமாக இயற்றிப் பாடிவருகிறார். காடுகளில் ஆடுகளை மேய்த்து வாழ்ந்துவருகிறார். தான் பாடிய பாடல் இந்த அளவுக்கு வெற்றிபெற்றிருப்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. வெளியுலகத்தின் வெளிச்சம் படாமல் இருந்த நஞ்சம்மாவுக்கு அவர் பாடிய பாடல் புதிய வெளிச்சத்தைத் தந்துள்ளது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதியைத் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அந்த அறிக்கையில், “தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது பிறந்தநாளை மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பதில் அரசு பெருமைகொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வக்கிரத்தை மறைக்க என்ன செய்வது?
பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடிகை ரம்யா நம்பீசன் இயக்கி வெளியிட்டுள்ள ‘UNHIDE’ குறும்படம் சமூக வலைத்தளத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெண்கள் எந்தவொரு ஆடையை அணிவதற்கு முன்பும் அவர்களுக்குள் எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது இப்படம். ‘உடலை மறைக்கத் துணி தேவை. ஆண்கள் மனத்தில் உள்ள வக்கிரத்தை மறைக்க என்ன தேவை?’ என்ற அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறார் ரம்யா. மனைவியின் அனுமதியில்லாமல் அவரை வல்லுறவுக்கு ஆளாக்கும் கணவன்களின் கோர முகத்தை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகச் சமூகம் ஒன்றாக நிற்க வேண்டும் என்பதையும் இந்தக் குறும்படம் வலியுறுத்துகிறது.
சரிநிகர் என்பதே சரி
இந்திய ராணுவத்தில் உள்ள வீராங்கனைகளுக்கு அனைத்து உயர் பதவிகளிலும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய ராணுவத்தில் 1992-ம் ஆண்டு முதல் பெண்கள் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பிக்கும் ‘கமாண்டர்’ பொறுப்பு வழங்கப்படாமல் இருந்தது. அதனால், இந்திய ராணுவத்தில் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 332 ராணுவ வீராங்கனைகள் தங்களுக்கு உயர் பதவிகளில் நிரந்தரப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என 2010-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு பத்தாண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ராணுவத்தில் உயர் பதவிகளில் பெண்களை நியமிப்பது குறித்து மத்திய அரசிடம் கடந்த ஜனவரி மாதம் விளக்கம் கேட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு, “ஆண்களைவிடப் பெண்கள் உடலளவில் பின்தங்கியுள்ளனர். அவர்களுக்குக் குழந்தை, கணவர், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் கடமையும் உள்ளது. அதனால், ராணுவத்தில் பணிபுரியும் பெண்களைக் கட்டளைகளைப் பிறப்பிக்கும் உயர் பதவிகளில் நிரந்தரமாக நியமிக்க முடியாது” என வாதிட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை பிப்ரவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு முன்வைக்கும் காரணம் கவலைக்குரியது. அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. காலமாற்றத்துக்கு ஏற்றாற்போல் பெண்களின் பங்களிப்பை அனைத்துத் துறைகளிலும் உறுதிசெய்ய வேண்டும். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்துப் பெண் அதிகாரிகளுக்கும் உயர் பதவிகளில் நிரந்தர பணி வழங்க வேண்டும். இந்தத் தீர்ப்பை மத்திய அரசு மூன்று மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பைக் கேட்ட ராணுவ வீராங்கனைகள் நீதிமன்ற வளாகத்திலேயே உற்சாகக் கூக்குரலிட்டனர்.