

முதலும் இல்லாத முடிவும் இல்லாத காதலைக் கடந்துவராத மனிதர்கள் குறைவு. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு விதமான அன்பும் காதலும் இருக்கத்தான் செய்கின்றன. காதலைக் கொண்டாடும்விதமாகத் தங்கள் வாழ்க்கையின் காதல் தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:
மலரும் உதிரும் மலரும்
அவளுக்கு ஒரு பெயர் வேண்டுமா? தமிழழகி என்று வைத்துக்கொள்ளலாம். அவளை முதலில் எங்கு சந்தித்தேன் என்பதை இப்போதும் துல்லியமாக நினைவுகூர முடிகிறது. இப்போது நினைத்தாலும் அந்த நாளின் சூடு மனத்தில் பரவும் அளவுக்கான வெயில்நாள் அது. அப்படியான ஒரு நாளின் நண்பகல் வேளையில் அவளைச் சந்தித்தேன். உண்மையில் அவளைவிட அவளுடன் வந்தவன்தான் நானறிந்தவன். ஏனெனில் அவன் என் நண்பன்.
‘செல்வராகவ’ வாடை அடிக்கிறதே எனத் திகைக்காதீர்கள். நீங்களாக ஏதாவது மடமடவெனக் கற்பனை செய்துவிடாதீர்கள். அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தார்கள். இருவரும் திருமணம்செய்துகொள்ள முடிவெடுத்திருந்தனர். அது தொடர்பாக அவளை அடிக்கடி சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்பது பின்னர் தெரிந்தது.
சூழல் காரணமாக நண்பனால் அவளைத் திருமணம்செய்துகொள்ள இயலவில்லை. என்னால் முடிந்த அளவு அவளிடம் நண்பனின் நிலையை எடுத்துச் சொன்னேன். தொடக்கத்தில் மிகவும் வருந்தினாள். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தாள். நானறிந்த தத்துவங்களை வைத்து நிலைமையைச் சமாளித்தேன். அவள் தனது காதலை என்னிடம் சொன்ன நாளில் என் நண்பனின் திருமணம் அமைந்தது தற்செயல் என்றுதான் நினைக்கிறேன்.
அவளும் நானும் ஒன்றாகத்தான் அந்தத் திருமணத்துக்குச் சென்றோம். ஆனால், வழக்கத்திலிருந்து ஏதோ ஒரு மாறுதலை மனம் உணர்ந்தது. என்னவென்றுதான் தெரியவில்லை. எதையுமே சட்டென்று கேட்டால் மனம் திடுக்கிட்டுவிடுமே. அப்படித்தான் இருந்தது, அவள் என்னைக் காதலிப்பதாகச் சொன்னபோது. மிக இயல்பாகத் தனது உள்ளத்தை வெளிப்படுத்தினாள் எனது சூழலில் ஏனோ அதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதே நேரத்தில் சட்டென மறுத்து அவளைச் சங்கடத்துக்குள்ளாக்கவும் விரும்பவில்லை.
அவளையே பார்த்தபடி கல்லாகச் சமைந்திருந்தேன். வழக்கமாக என்னிடம் வெளிப்படும் அசமந்தத்தனம் அது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை, ‘இன்று போய் நாளை வா’ என்பதுபோல் அவகாசமளித்தாள். அவள் அளித்த அவகாசம் சற்று ஆசுவாசம் தந்தது.
மீண்டும் எப்படி அவளை எதிர்கொண்டு என்ன சொல்லப்போகிறேன் என்பது புரியாமல் அவளைச் சந்திக்கச் சென்றேன். வழக்கம்போன்ற நலம் விசாரிப்புகளுக்குப் பின்னே முக்கியமான விவகாரத்துக்கு வந்தாள். நான் எனது சூழலையும் திருமணம், காதல் பற்றிய எனது எண்ணங்களையும் சொல்லி அவளது காதலை ஏற்க முடியாத நிலையை விளக்கினேன். அவளுக்கு விளக்கம் தேவைப்படவில்லை; ஆனால், விளங்கிக்கொண்டாள்; விலகிக்கொண்டாள்.
அவளுடைய திருமணத்துக்கு அழைப்பிதழ் தந்திருந்தாள். என் நண்பன், அவனுடைய மனைவி, நண்பர்கள் என அனைவரும் சென்றுவந்தோம். அப்போது ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பின்னர் அவளை ஓரிரு முறை பார்த்ததாக ஞாபகம். அவளை நான் காதலித்தேனா இல்லையா என்பதை மட்டும் இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், எது காதல் என்பதில் எனக்கு எப்போதும் தெளிவிருந்ததில்லை. ஒருவேளை நான் அவளைக் காதலித்திருக்கக்கூடும். என் ஆழ்மனத்தில் என்ன இருக்கிறது என்பதை என்னால் ஒருபோதும் விளங்கிக்கொள்ள முடிந்ததில்லை. அவளுடைய ஆழ்மனத்தில் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாளோ என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். நினைவுகளின் கண்ணி வலுவானது, கன்னியைக் கைவிடாதது; கைவிடாது அது.
- ரோஹின்
கவர்ந்திழுத்த கண்ணியம்
என்னவர் என்னைப் பெண் பார்க்க வந்தபோதுதான் காதல் என்றால் என்ன என்பதையே அறிந்தேன். வருகிறவர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் இருந்த நான் முதன்முதலாக அவரை ஏறெடுத்துப் பார்த்தபோது அவரது முகத்தில் மிளிர்ந்த அந்தப் புன்னகை ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகளை என் மனத்தில் வட்டமடித்துப் பறக்கச் செய்தது. பெண் பார்க்கும் படலம் முடிந்து செல்லும்போது, என்னைப் பிடித்திருக்கிறது என்பதைக் கட்டை விரலைத் தூக்கி, சைகை மொழியில் அவர் சொன்னது இன்னமும் என் மனத்தில் நிற்கிறது. திருமணமான பின் குழந்தைப்பேற்றின்போது என்னையே ஒரு குழந்தையாகக் கருதி, முழுக் கவனிப்பையும் என் மேல் செலுத்தியதை மறக்க முடியாது.
அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகள் எங்கள் வாழ்க்கையில் கிஞ்சித்தும் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. உடல் நலம் குன்றியிருக்கும்போதோ, மனக் கஷ்டங்களில் நான் அவதிப்படும் போதோ எனக்கு அவர் அனுசரணையாக, ஆதரவாக நிற்பார். எந்நிலையிலும் நான் தொய்வடையாதவாறு உறுதுணையாக இருந்து மன உறுதி அளிப்பார். மற்ற பெண்களிடம் அவர் காட்டும் கண்ணியம், மற்றவர்களிடம் பேசும்போது வெளிப்படும் நாகரிகம், அபார நினைவாற்றல், கடும் சொற்களைப் பயன்படுத்தாமை, மற்றவருக்கு உதவுதல் போன்ற உயரிய பண்புகளை அவரிடம் காணும்போதெல்லாம் அவர் மீதான என் காதல் பன்மடங்கு பெருகிவிடும்.
நான் எப்போதாவது கோபமுற்றால் முதுகில் தட்டிவிட்டு, “கோபம் கூடாது செல்லமே” என்று சிரித்துக்கொண்டே சொல்வார். அன்றாடம் சிறிது நேரம் செலவிட்டு வாழ்க்கை மேலாண்மை உத்திகளையும் கருத்துகளையும் என் மனதில் நிரப்பி, என் உளநிலையை உயர்த்த வழி வகுப்பார். தன் உயரிய செய்கைகளால் நித்தம் நித்தம் என் மனத்தில் காதல் பூக்களைப் பூக்கவைத்து, என்னை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவரும் அவரை நான் உளமார விரும்புவதன் பின்னணியை என்னால் மட்டுமே உணர முடியும்!
- ஜெயந்தி ராமநாதன், மதுரை.
சொல்லாமலே...
பட்டப்படிப்பு முடித்தவுடன் பிரபலத் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் பி.பி.ஓ. பிரிவில் சேர்ந்திருந்தேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த என் வயதையொத்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்றுதான் முதல் நாள் வேலை. அவர்களில் பலரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களால் ஆண்களும் பெண்களுமாக நிறைய நட்புக் குழுக்களாக இருந்தனர்.
முதல் ஒரு மாதம் வேலை தொடங்கவில்லை. அனைவருக்கும் கார்ப்பரேட் சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் எப்படி உரையாட வேண்டும் என்று பயிற்றுவிப்பதற்கும் கார்ப்பரேட் சூழலுக்குத் தேவையான ஆளுமையை வளர்ப்பதற்குமான பயிற்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. பெண்கள் பலர் என்னுடனும் இயல்பாகப் பேசியது எனக்கு ஆச்சர்யமாகவும் புதிய அனுபவமாகவும் இருந்தது. அந்த அளவுக்கு ஆண்-பெண் பாலின இடைவெளி நிறைந்த சூழலில் வளர்ந்தவன் நான். ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டால் உடனடியாக அவரைக் காதலிக்கத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தேன். எதிர்ப்பாலினத்தவரின் தோற்றத்தாலோ கண்ணுக்குப் புலப்படும் சின்ன சின்னக் குணநலன்களாலோ ஏற்படும் ஈர்ப்பு காதல் அல்ல என்பது இப்போது புரிகிறது. ஆனால், அப்போது அதைத்தான் காதல் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அப்படி அந்த அலுவலகத்தின் மூன்று பெண்கள் மீது ‘காதல்’ வயப்பட்டேன்.
முதல் பெண் கோயம்புத்தூரிலிருந்து வந்திருந்தவர். வட்டமுகம், பேச்சில் கோவை வட்டார வழக்கு, கன்னத்தில் குழிவிழும் புன்னகை ஆகியவற்றை அவருடைய சிறப்பம்சங்களாகக் கருதி அவரைக் காதலிக்கத் தொடங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டேன். என் காதலை அவரிடம் வெளிப்படுத்த முடிவெடுத்து அதை என் அலுவலக நண்பனிடம் சொன்னபோது, “இவ்வளவு சீக்கிரம் காதலைச் சொல்வது தவறு. இதனால் நட்பு முறியவும் வாய்ப்பிருக்கிறது” என்று உறுதிபடக் கூறி அதைத் தடுத்துவிட்டான். அன்றோடு அலுவலகத்தில் என் ‘முதல் காதல்’ முடிவடைந்தது.
இரண்டாவதாக உயரமாக, கண்ணாடி அணிந்திருந்த ஈரோட்டுப் பெண் மீது ஈர்ப்பு வந்தது. பார்த்தால் புன்னகைத்து ஹலோ சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பழக்கமாகியிருந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் “நாம் இருவரும் வாழ்வில் இணைந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று ஆங்கிலத்தில் பட்டென்று சொல்லிவிட்டேன். “எனக்கென்று குடும்பப் பொறுப்புகள் இருக்கின்றன” என்று மெல்லிய புன்னகையுடன் அப்பெண் கூறிவிட்டார். இதை என்னிடம் எதிர்பார்த்திருந்திருப்பார்போலிருக்கிறது. அவர் எந்தவிதமான அதிர்ச்சியையோ கோபத்தையோ வெளிப்படுத்தாததைக் ‘காதல் முறிந்த’ சோகத்துக்கான மருந்தாக நினைத்துக்கொண்டேன்.
மூன்றாவதாக இன்னொரு பெண்ணைக் ‘காதலித்தேன்’. இந்தப் பெண்ணுடன் அலுவலகத்தில் அன்றாடம் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பிருந்தது. அவர் என் தோழியாகவும் ஆகிவிட்டார். அந்த நட்பை முறித்துக்கொள்ளப் பயந்து கடைசிவரை அவரிடம் என் விருப்பத்தை நேரடியாக வெளிப்படுத்தவில்லை. மறைமுகமாக நான் பலமுறை வெளிப்படுத்தியது அவருக்குப் புரிந்தும் அவர் அதை பொருட்படுத்தாதன் மூலம் என்னை நண்பனாகவே மதித்தார் என்பதைப் புரிந்துகொண்டேன். இன்றுவரை அந்த நட்பு தொடர்கிறது.
காதலைச் சொல்லாமலேயே இருப்பதும் தவறு. ஒருவருடன் பழகாமல் தோற்ற ஈர்ப்பையே காதலாகக் கருதிக்கொண்டு அதை வெளிப்படுத்துவதும் தவறு. ஒருவருடன் பழகிப் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் காதலைச் சொல்வதும்,
அவர் அதை ஏற்கவில்லை என்றால் அதைக் கண்ணியத்துடன் ஏற்றுக்கொள்வதும்தான் சிறந்தது என்று அறிவுரை சொல்லும் வயதை இப்போது அடைந்துவிட்டேன். ஆனால், அந்த நேரத்தில் இதை என்னிடம் யாராவது சொல்லியிருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது.
- கோபால்
காதலைப் பொதுவில் வைப்போம்
Don't love too much என்னும் கருத்தையொட்டி அண்மையில் வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியானது. இன்று பல காதலர்கள் வெளியுலகச் சிந்தனையே இல்லாமல் அல்லது அப்படி ஏற்படவிடாமல் ஒரு வட்டத்துக்குள்ளேயே தங்களைப் பூட்டிக்கொள்கின்றனர். நாளடைவில் அந்த வட்டத்துக்குள் இருக்க முடியாமல் திணறிச் சிலர் வெளியே வந்துவிடுகின்றனர். சிலர் சமுதாயத்துக்கு அஞ்சி அந்தத் திணறலிலேயே வாழ்ந்து பழகிவிடுகின்றனர்.
காதலின் அடிப்படை அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தங்களுடைய சுயத்தை மறைத்து, ஒரு ஆணுக்கு/பெண்ணுக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று ஏமாற்றி அடையும் காதல் தோல்வியில்தான் முடியும். அன்பு, பாசம் போல் காதலும் ஒரு உணர்வுதான் என்ற புரிதலுடன் காதலர்கள் வாழ்க்கையை அணுக வேண்டும் என்பதே அந்த வீடியோவின் மையப் பொருள்.
காதல் புனிதமானதோ புலப்படாததோ இல்லை. காதல் இயல்பானது, இயற்கையானது. வெறித்தனமான காதல் வேதனையில்தான் முடியும். காதலை ஒருவர் மீது குவிக்காமல் இந்தச் சமுதாயத்தில் பரவலாக்குவோம். ஒரு பூ மலரும் செடியைவிட, பல பூக்கள்
மலரும் செடியே கண்ணுக்கு அழகாகத் தெரிகிறது.
- ஜனனி, சென்னை.