Published : 16 Feb 2020 11:25 AM
Last Updated : 16 Feb 2020 11:25 AM

பாடல் சொல்லும் பாடு 04: பொதுவில் வைக்கப்படும் பெண்கள்

கவிதா நல்லதம்பி

முதலில் என்னைச் சூழ்ந்துள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன். பின்பு, இந்த மெல்லிய அரக்கு நிறத் தோலையும் அதனுள் இருக்கும் எலும்புகளையும் உதறுகிறேன். இறுதியில் வீடற்ற, அனாதையான, அதியழகு நிறைந்த தோல், எலும்புகள் என அனைத்துக்கும் அடியில் உள்ள என் ஆன்மாவை உங்களால் காண இயலும் என நம்புகிறேன்'
- கமலா தாஸ்

‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியைக் குறிப்பிடுவது இங்கே பொருத்தமாக இருக்கும். மஸ்தானியை, சுமங்கலி நோன்பில் கலந்துகொள்ளுமாறு அழைக்க பாஜிராவின் முதல் மனைவி காசிபாய் வருவார். அவரைக் கண்டதும் மஸ்தானி, “வாருங்கள் சகோதரி, நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி” என்பார். காசிபாயோ, “நான் உனக்குச் சகோதரியல்ல; காசிபாய் மட்டுமே” என்றதும், மஸ்தானி சொல்வார்: “நீங்கள் யாருக்கு மனைவியோ, அவர் எனக்கும் கணவர் என”.

காசிபாயோ, “இருக்கலாம். முறைப்படி மணந்துகொண்ட மனைவி இருக்கும்போது இன்னொருத்தியைக் கூட்டி வந்தால் அவளைக் காதற்கிழத்தி என்பார்கள். புரிகிறதா? நம் பேச்சு வழக்கில் அதை என்ன சொல்வார்கள்?” என்று நிறுத்த, மஸ்தானி மிகுந்த வலியுடன் பதிலளிப்பார், “சக்களத்தி.”

ஆணுக்கு இதுவா ஒழுக்கம்?

நம் வரலாறு நெடுக, இக்காட்சி காட்டும் இரண்டாம் நிலைப்பட்ட வாழ்வு, வெவ்வேறு பெயர்களில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. சங்க காலத்தில் மனைவியைத் தவிரவும் வேறு பெண்களோடு தொடர்புகொள்ளும் பாலியல் சுதந்திரம் ஆணுக்கு இருந்தது. திருமணத்துக்குப் பின் இரண்டாவதாக மணந்துகொள்ள, மணமின்றி இன்னுமொருத்தியை வீட்டுக்கு அழைத்துவர, இதற்கெனவே இருக்கும் பெண்களின் இல்லங்களுக்கே செல்ல அந்தச் சுதந்திரம் அவனுக்கு அனுமதி யளித்திருந்தது. காதற்கிழத்தி, இற்பரத்தை, சேரிப்பரத்தை எனப் பல்வேறு பெயர்களில் அப்பெண்கள் அழைக்கப்பட்டனர்.

மனைவி கருவுற்ற காலத்திலும், குழந்தைப் பேற்றுக் காலத்திலும் ஆண் வெளிப்படையாகவே பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபட்டான். தலைமகளின் மாதவிடாய் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள், குழந்தைப் பேற்றுக்குத் தகுதியான காலம் என்பதால் அந்த நாட்களில் தலைவன் தன் மனைவியைப் பிரியமாட்டான். வாரிசுரிமையை, சொத்துரிமையை நிலைநாட்டும் செயல் தலைமகளின் இக்குழந்தைப் பேற்றினாலே சாத்தியமானது. பரத்தையருக்குக் குழந்தைகள் இருந்ததாகக் குறிப்புகள் இல்லை. பூத்த கரும்பு, காய்த்த நெல் என்ற குறியீடு இந்தஎதிர்வைக் குறித்தது. காய்த்த நெல் - தலைவி (குழந்தைப் பேற்றுக்கு உரியவள், நெல் அறுவடைக்கு உகந்தது), பூத்த கரும்பு - பரத்தை (அவள் குழந்தைப் பேற்றுக்கு உரியவள் இல்லை. பூத்தும் பயன்படாத கரும்பு) . உடைமைச் சமூகம் குலத் தூய்மையைப் பேண பரத்தையைக் குலமகளுக்கு எதிர்நிலையில் வைத்தது.

சகித்துக்கொள்ளும் பெண்கள்

கல்விக்காக, பொருள் ஈட்டுவதற்காக, தூதுக்காக, பரத்தைக்காக ஆண் தன் மனைவியை விட்டுப் பிரிவான் என்று சொல்லும் இலக்கணம், கல்வியும் தூதும் உயர்ந்தோர்க்கு மட்டுமே உரியவை; ஆனால் பரத்தையர் பிரிவு மட்டும் அனைவருக்கும் உரியது என்கிறது. பேதங்களின்றி எல்லாத் தரப்பு ஆண்களாலும் ஒடுக்கப்படக்கூடிய இனமாக, எல்லாக் காலத்திலும் பெண்களே இருந்துவருகின்றனர் என்பதையே இச்செய்தி சொல்கிறது.

காலையில் எழுந்ததுமே, தேரைத் தயார் செய்து தன் விருப்பத்துக்குரிய பெண்ணிடம் தலைவன் செல்வதைப் பார்த்ததும், குழந்தையைப் பெற்ற மகிழ்வு சிறிதும் இல்லாது, பெண்ணாய்ப் பிறந்ததே மிகுந்த துன்பத்துக்குரியது என்று வருந்துகிறாள் ஒரு தலைமகள். மற்றொருத்தியோ, தலைவனின் புற ஒழுக்கத்தை நினைத்து வருந்தவும், ஊடல் கொள்ளவும்தான் நம்மால் முடியுமே தவிர, தலைமகனை ஒதுக்கிவிட முடியுமா? அப்படி ஒதுக்கினால், நம் பிள்ளைகள் வளமின்றி வற்றிப்போன நம் மார்பில் பாலருந்தவும் இயலாது பசியில் உழல்வார்கள் என்கிறாள்.

ஆணைச் சார்ந்தே குடும்பம் இருந்தது என்பதையே இக்கவிதை காட்டுகிறது. ஆணை ஒதுக்கிவிட்டால் அவனை நம்பியிருந்த குடும்பம் வறுமையில் தள்ளப்படும். எனவே, ஒரு பெண்ணால் தன் கணவனின் புற ஒழுக்கத்தை முழுமையாகக் கண்டிக்க இயலாது. இன்றளவும் பெண் தன் குடும்பத்துக்காக, குழந்தைகளுக்காக, சமூகத்துக்காக ஆணின் எல்லா நடவடிக்கைகளையும் சகித்துக்கொண்டு வாழ்பவளாகவே இருக்கிறாள். கல்வியும் பொருளாதாரச் சுதந்திரமும் கிடைத்த பின்னும்கூட ஒரு பெண்ணுக்குத் தனித்து வாழ்தல் அரிதாகவே சாத்தியமாகிறது.

கைவிடப்பட்ட வாழ்க்கை

அற இலக்கியங்கள் பரத்தமையை ஒழுக்கக் கேடென்றன. பெண் மீது வெறுப்புகொள்ளச் செய்ய, அவள் உடலை நரகக்குழி என்றன. தீட்டாக, அசூயை கொள்ளத்தக்கதாகக் காட்டியே ஆணுக்குப் பரத்தமை ஒழுக்கம் வேண்டாம் என்றன. வள்ளுவரும்கூட, பரத்தையோடு ஆண் கூடுவது, பிணத்தோடு கட்டித் தழுவுவதற்கு ஒப்பானது என்று பெண் உடலைப் பிணமாக்கினார். ஒழுக்கம்சார் பட்டங்களும் அவர்களுக்கே வழங்கப்பட்டன. தாய்மையின் வடிவான அவளது உறுப்புகள் வெறுக்கத்தக்க கெட்ட வார்த்தைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மூத்த பரத்தை ஒருத்தியின் கூற்றான நற்றிணைப் பாடல், பொதுமகளிரின் முதுமைக் காலத்தைச் சொல்கிறது. நெடுங்காலமாக ஆற்றைக் கடக்கப் பயன்பட்ட வாய் முறிந்த தோணி இனிப் பயன்படாது எனக் கருதி, ஞாழலும் புன்னையும் கூடிய நிழலில் கட்டப்பட்டிருக்கிறது. இத்தனை நாள் உழுது உழுது முதிர்ந்துபோன எருதோ தன் உழவு வேலையைச் செய்ய முடியாதபடி புல் நிறைந்த வெளியில் தனித்து விடப்பட்டிருக்கிறது. அத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் என்று சொல்வதன் மூலமாக, அவன் முதுமை கருதித் தன்னை விட்டகன்றான் எனக் குறிப்பால் உணர்த்தும் கைவிடப்பட்ட பெண்ணின் வலியைச் சொல்கிறது.

இக்கவிதை, பாலியல் தொழிலாளிகளுக்காக ஓய்வில்லம் உருவாக்கிய ஒரு பாலியல் தொழிலாளி குறித்த செய்தியை நினைவுபடுத்துகிறது. மெக்ஸிகோ நகரின் வீதிகளில் தன் ஏழு குழந்தைகளுடன், வீட்டு வேலை செய்து பிழைக்கலாம் என அலைந்து இறுதியில் எந்த வாய்ப்புகளுமற்றுப் பாலியல் தொழிலாளியான கார்மென் முனோஸ்தான்தான் அந்தப் பெண். 22 வயதான, கல்வியறிவற்ற அப்பெண்ணை இந்தத் தொழிலாளர்களின் உலகம்தான் வரவேற்றுப் பிழைக்க வழிசெய்தது. இங்கே தன் 40 ஆண்டுகளைக் கழித்த கார்மென், குடும்பத்திலும் சமூகத்திலும் புறக்கணிப்புக்கு ஆளாகும் முதிய பாலியல் தொழிலாளிகள் தம் இறுதிக் காலத்தை எப்படிக் கடப்பார்கள் எனச் சிந்தித்தார். அதன் விளைவாக 13 ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகு, கலைஞர்கள், சக பாலியல் தொழிலாளர்களின் துணையோடு மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து முதிய வீடற்ற பாலியல் தொழிலாளிகளுக்கு ஓய்வில்லம் ஒன்றைச் சாத்தியமாக்கியிருக்கிறார்.

‘ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ என்ற நூலைத் தமிழுக்குச் சாத்தியமாக்கிய நளினி ஜமீலாவும் இங்கே நினைவுகூரப்பட வேண்டியவர். தம் பாலியல் தேவைகளுக்கான வடிகால்களாகப் புறமகளிரைக் காணும் ஆண் சமூகம்தான், அவர்களைப் போன்றோரை உருவாக்கவும், பயன்படுத்தவும், புறக்கணித்து, அவமானத்தின் வலியைக் கையளிக்கவுமான வெளியை உருவாக்கித் தந்திருக்கிறது. அச்சமூகமே பெண்கள் யாவரையும் கற்புக்கரசிகளாகக் காணும் பெருவிருப்பையும் கொண்டிருப்பதுதான் முரண்.

அவர்கள் பார்வையில்,
எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

- அ.சங்கரி (சொல்லாத சேதிகள்)

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x