Published : 16 Feb 2020 11:14 AM
Last Updated : 16 Feb 2020 11:14 AM

மகளிர் திருவிழா: ஆனந்தத்தில் திளைத்த சேலம் வாசகிகள்

வி.சீனிவாசன்

பெண்களுக்கான தனி உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஆண்டுதோறும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடத்தும் மகளிர் திருவிழாவுக்கு வந்தவர்கள் மட்டுமே கண்களால் காணவும் அனுபவித்து உணரவும் முடியும்.

‘இந்து தமிழ்’ நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழான ‘பெண் இன்று’ சார்பில், சேலம் அம்மாபேட்டை ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 9 அன்று மகளிர் திருவிழா கோலாகலமாக அரங்கேறியது.

சட்ட விழிப்புணர்வு

இவ்விழாவில், சேலம் மத்திய சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சத்தியபிரியா, பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்துப் பேசினார். “பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது அவசியம். கருவில் வளரும் சிசு முதல் வயது முதிர்ந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் வயது வரை இந்தியச் சட்டங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், இடர் தருகிறவர்களுக்குத் தகுந்த தண்டனைகளைத் தருவதுடன் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்துள்ளன. பெண்களுக்கான சமுதாயம் அழகானதாகவும் அற்புதமானதாகவும் படைக்கப்பட்டிருந்தாலும், தீய எண்ணம் படைத்த ஆண்கள் சிலரால் தினம்தோறும் பெண்கள் தொல்லைகளை அனுபவித்துவருகின்றனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனச் சொல்வதில் தொடங்கிப் பெண் சிசுக்கொலை, குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம், ஈவ்-டீசிங், வரதட்சணை, பாலியல் வன்கொடுமைகள் என அடுக்கடுக்காய்ப் பெண் சமுதாயம் ஆண்களால் சீரழிக்கப்படுகிறது. இதுபோன்ற சமுதாயச் சூழலில் பெண்கள் சட்டம் சார்ந்த விழிப்புணர்வைப் பெற்று, தன்னையும் தன் சார்ந்த பெண்களையும் தற்காத்துக்கொள்வதற்கான வழிகாட்டியாகத் தன்னம்பிக்கை பெறுவது அவசியம்” என்றார்.

மகளிர் சுய முன்னேற்றம் குறித்து சேலம் அரசு கலைக் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் வி.அன்பரசி பேசும்போது, “ஆண்டுக்கு ஒரு நாள் முழுவதும் பெண்கள் சர்வசுதந்திரமாக ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், இந்த ஒரு நாளை ஏகபோகமாக உரிமை கொண்டாடி மகிழ பெண்கள் வந்திருந்தாலும், வீட்டில் தந்தை, மாமனார், கணவர், குழந்தைகள் என அனைவருக்குமான வேலைகளையும் செய்துவிட்டுத்தான் வந்திருப்பார்கள். இருந்தாலும், இதுபோன்ற விழாவில் பங்கேற்க வீட்டில் உள்ளவர்கள், உங்களை அனுப்பி வைத்ததை மெச்சாமல் இருக்க முடியாது.

இந்த உலகம் ஒருவரை ஒருவர் சார்ந்த சார்பு வாழ்க்கை முறையைக் கட்டமைத்துள்ளது. ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றொருவரின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன. எனவே, தனித்தனித் தீவுகளாக ஒதுங்கிவிடாமல் கூட்டுக் குடும்ப முறையில் வாழ்ந்தால் நல்லது” என்றார்.

விழாவில் செவிக்கு விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் வாசகியர் திளைத்திருந்தபோது கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்தது துர்கா தேவியின் நடன நிகழ்ச்சி. ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதை உணர்த்தும் வகையில் அர்த்தநாரி வடிவத்தில் துர்கா தேவி ஆடிய நடனத்தைப் பார்த்து அரங்கமே பிரமிப்பில் ஆழ்ந்தது. பாரம்பரிய நடனமான கரகத்தில் பல்வேறு அரிய செயல்களைச் செய்து வாசகிகளை அவர் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.

அனைவருக்கும் பரிசு

அதைத் தொடர்ந்து விழா மேடை வாசகியர் வசமானது. விளையாட்டுப் போட்டிகளில் இளம்பெண்களுக்கு இணையாகப் பேரிளம்பெண்களும் களம் இறங்க நிகழ்ச்சி களைகட்டியது. கண்களைக் கட்டிக்கொண்டு பொட்டு வைப்பது, ஸ்டிரா மூலமாக தெர்மகோலை உறிஞ்சி டம்ளரில் நிரப்புவது, சமூக விழிப்புணர்வு மவுன நாடகம், பேனாக்களைப் பொருத்துவது, கோலிக் குண்டை அடுக்கிப் பிடிப்பது எனப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசு வென்றவர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது. மேலும், அரங்கத்தில் வீற்றிருந்த வாசகியரை உற்சாகமூட்டும் வகையில் உடனடி போட்டி நடத்தப்பட்டு அதில் வென்றவர்களுக்கு ஆச்சரியப் பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பிரேமா, பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மலர்க்கொடி ஆகிய இருவருக்கும் பம்பர் பரிசு வழங்கப்பட்டது.

வயது தடையல்ல

கரகாட்டத்தின்போது சிறுமியின் உற்சாகத்துடன் நடனமாடிய 63 வயது புனிதா ராஜ், வாசகிகயரின் பாராட்டை அள்ளினார். வயது என்பது வெறும் எண்தான் என்பதைத் தன் துள்ளல் நடனத்தின் மூலம் நிரூபித்த அவருக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்புக் குழந்தையான ஜெப கிறிஸ்டினா, குறைப்பிரசவத்தில் பிறந்தவர். ஆனால், தன் பாட்டியும் அம்மாவும் வழிகாட்ட எம்.ஏ., தமிழ் முடித்திருக்கிறார். ஆங்கிலக் கலப்புச் சிறிதுமின்றிப் பேசும் அவர், வாசகியருக்காகப் பாடல் ஒன்றைப் பாடினார்.
மகள், அம்மா, பாட்டி என மூன்று தலைமுறைப் பெண்களுமாகச் சேர்ந்து ஜெப கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் விழாவுக்கு வந்திருந்தனர்.

போட்டிகள் நிறைவடையக் காத்திருந்ததைப் போல் வாசகியர் மேடையேறி நடனமாடினர். அதிரடி சரவெடியாக ஆடியவர்களைப் பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். மூதாட்டிகளும் இளம்பெண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அனைத்து வயதினரும் உற்சாகத்துடன் ஆட, மகளிர் திருவிழா இனிதே நிறைவுற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் லலிதா ஜூவல்லரி, பொன்வண்டு டிடர்ஜென்ட், பிரஸ்டீஜ் குக்வேர், பூமர் லெக்கின்ஸ், டிஸ்கவுண்ட் சோப், சாஸ்தா கிரைண்டர்ஸ், அம்மு ஸ்பெஷல் இட்லி தோசை மாவு, எஸ்கேஎம் பூர்ணா ஆயில், விஎஸ்சி குரூப் ஆப் கம்பெனி, ரத்தோர் நைட்டீஸ், ஏவிடி டீ, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம், ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, பாலிமர் சேனல் ஆகியவை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x