Published : 16 Feb 2020 10:59 AM
Last Updated : 16 Feb 2020 10:59 AM

காதலர் தின ஷ்பெஷல் : முதலும் இல்லாதது முடிவே இல்லாதது

காதலைப் பாடாத கவிகள் குறைவு. காதல் இந்தப் புவியை விடப் பெரிது, வானத்தை விட உயர்ந்தது, கடலைவிட ஆழமானது என்று குறுந்தொகைப் பாடல் சொல்லும் உண்மையை உணர்வுப்பூர்வமாக அணுகினால் உணர்ந்துகொள்ள முடியும். ‘நான் சாவதற்கு அஞ்சவில்லை. அப்படி நான் இறந்து இன்னொரு பிறவி எடுக்கும்பட்சத்தில் என் காதலனை மறந்துவிடுவேனோ என்பதற்காகத்தான் சாக அஞ்சுகிறேன்’ என்னும் நற்றினைப் பாடல் தலைவியின் அச்சம் எங்கும்நிறை காதலுக்குச் சான்றுதானே. அப்படித் தங்கள் வாழ்க்கைப் பயணம் நெடுக துணைவரும் காதலைச் சொற்களுக்குள் அடக்க முயன்றிருக்கின்றனர் சிலர். அவற்றில் சில இங்கே.

காதலால் தொடரும் தேடல்

ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட நீல வண்ண ஆல்பம் முழுவதும் கறுப்பு வெள்ளையில் ஏராளமான புகைப்படங்கள். அந்த ஆல்பத்தின் முதல் பக்கத்தில் வசீகரமான ஒரு பெண் பூந்தொட்டியில் கை வைத்தபடி புன்னகையுடன் நின்றுகொண்டிருப்பார். அவர் ‘பானு பெரியம்மா’ என்று அம்மா சொல்லியிருந்தார். வீட்டுக்கு யார் வந்தாலும் ஆல்பம் பார்க்கும் வழக்கம் அப்போது இருந்தது. பார்த்தவுடன், ‘இவர் யார்’ என்றுதான் கேட்பார்கள். நாங்களும் ‘பானு பெரியம்மா’ என்று உற்சாகமாகச் சொல்வோம்.
நான்காம் வகுப்பு படிக்கும்போதுதான் இந்த பானு பெரியம்மாவை இதுவரை பார்த்ததில்லையே என்று தோன்றியது. அம்மாவிடம் விசாரித்தேன்.

சிரித்துக்கொண்டே, “உங்க அப்பாவின் தோழி” என்றார்.

“ஓ… அவங்க ஏன் நம்ம வீட்டுக்கு வந்ததே இல்லை? நாமும் அவங்க வீட்டுக்குப் போனதே இல்லை. அப்பாவும் இதுவரை இவங்களைப் பற்றிச் சொன்னதே இல்லையே?” என்ற என் கேள்விகளால் அம்மா சிறிதும் சங்கடப்படவில்லை. “பானுவும் உங்க அப்பாவும் கல்யாணம் பண்ணிக்க விரும்பினாங்க” என்று ஆரம்பித்த அம்மா முழுக் கதையையும் சொன்னார்.
கல்லூரியில் படித்தபோது ஒரே பகுதியில் வசித்த இருவரும் நண்பர்களாகிப் பின் காதலர்களாக மாறியிருக்கிறார்கள். வசதியில்லாத பானு பெரியம்மாவின் குடும்பம், அவரின் சம்பாத்தியத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது. விஷயம் இருவர் வீட்டுக்கும் ஒருநாள் தெரியவந்தது. சாதியைக் காரணம் காட்டி, இருவர் வீட்டிலும் மறுத்தனர். சாதியை மீறுவதிலும் தாத்தாவை மீறுவதிலும் அப்பாவுக்குத் தயக்கமில்லை. ஆனால், பானு பெரியம்மாவின் அப்பா தீக்குளித்துவிடுவதாகச் சொல்லவும் இருவருக்கும் வேறு வழியில்லை. காதலை விட்டுக்கொடுத்துவிட்டனர்.

இந்த விஷயம் எல்லாம் தெரிந்துதான் அப்பாவைத் திருமணம் செய்துகொண்டார் அம்மா. சில ஆண்டுகளுக்குப் பிறகு பானு பெரியம்மா ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுவதாகத் தகவல் வந்தது. ஆனால், அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அறிந்தபோது அப்பா மிகவும் துயரப்பட்டதாகச் சொன்னார் அம்மா.

மேலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அப்பாவின் கல்லூரித் தோழர் வீட்டுக்கு வந்தார். பானு பெரியம்மாவுக்குத் திருமணமாகிவிட்டதாகச் சொன்னார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நிம்மதியாக இருந்தது.

காலப்போக்கில் அவர்கள் பானு பெரியம்மா குறித்துப் பேசுவதை விட்டுவிட்டார்கள். ஆனால், நானோ அவரைத் தேட ஆரம்பித்துவிட்டேன். நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களிடம் பானு என்று யாராவது பேராசிரியராக இருக்கிறாரா என்று விசாரித்துக்கொண்டே இருந்தேன். நானும் காதலிக்க ஆரம்பித்தபோதுதான் அப்பாவின் வலியை முழுமையாக உணர்ந்தேன். என் தேடல் இன்னும் அதிகமாகிவிட்டது.

அன்று சின்ன அத்தை வந்திருந்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்தில் பேராசிரியர் ஒருவர் குடிவந்ததாகச் சொன்னார்.
“அவங்க பேரு பானுவா?”
“இன்னுமா தேடறே? எதுக்கு?”
“ஒரு தடவை அவங்ககிட்ட பேசணும்.”
“என்ன பேசுவே?” என்ற அப்பாவின் குரல் கேட்டு நானும் அத்தையும் திகைத்தோம்.
பேசுவதா முக்கியம்! தேடல் தொடர்கிறது.

- சுஜி, சென்னை.

மாறாதது காதல் மட்டுமே

காதல் என்றால் என்னவென்றே உணராத வயதிலேயே என்னுள் காதல் துளிர்த்துவிட்டது. அது பள்ளி இறுதியாண்டு. எங்கள் தூரத்து உறவினர் அவர். என்னைவிட 16 வயது பெரியவர். கனிவான பேச்சாலும் மென்மையான சுபாவத்தாலும் முதல் சந்திப்பிலேயே என்னைக் கவர்ந்துவிட்டார். அந்தக் கனிவும் மென்மையும் இன்று எங்கே என்று தேட வேண்டியுள்ளது என்பது வேறு விஷயம்.
அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது கதவிடுக்கில் என் சுண்டுவிரல் மாட்டிக்கொண்டு ஆழ்ந்த வெட்டு ஏற்பட்டது. ரத்தம் பொலபொலவெனக் கொட்ட வலியில் நானும், பயத்தில் அம்மாவும் அழுதோம். அப்போது அவர்தான் பதற்றமடையாமல் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனை என்றாலே பயந்து நடுங்கும் நான், அவர் உடன் வரும் நம்பிக்கையில் தைரியமாகச் சென்றேன். ‘ஊசி மட்டும் போட வேண்டாம் என மருத்துவரிடம் சொல்லிவிடுங்கள்’ என்று அவரிடம் சொன்னேன். ‘அதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தைரியம் சொன்னார். காயத்தைப் பார்த்த மருத்துவர் தையல் போட வேண்டும் என்று சொன்னார். நீங்கள் வெளியே இருங்கள் என்று அவரிடம் மருத்துவர் சொன்னார். அவர் உள்ளே இருக்க வேண்டும் என்று அழுதபடி அடம்பிடித்ததால் அவர் என் அருகிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டார்.

நான் அவர் கையை இறுகப் பற்றிக்கொண்டேன். தையல் போடுவதற்காக என்னுடைய காயத்தை மருத்துவர் சுத்தம் செய்யத் தொடங்கினார். எலும்பு தெரியும் அளவுக்குக் காயம் மிகுந்த ஆழமாக உள்ளது என்று மருத்துவர் சொல்லும்போதே, எனது கையிலிருந்து அவருடைய விரல்கள் நழுவின. அவர் மயங்கிக் கீழே விழுந்து கிடந்தார். மருத்துவமனை நெடியும் ரத்தமும் அவருக்கு அலர்ஜி என்பது எனக்கு அதன் பின்னர்தான் தெரியவந்தது.

வயதில் பெரியவர் என்பதாலோ என்னவோ என்னைக் குழந்தையைப் போலவே நடத்தினார். என்ன படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தால் போதாது, எதையாவது சாதிக்க வேண்டும் என்று சொல்லி என்னுள் லட்சிய வேட்கையை ஏற்படுத்தும் முயற்சியில் எப்போதும் மொக்கை போட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், அவருடன் நேரம் செலவழிப்பது பிடிக்கும் என்பதால், அவரது மொக்கையைத் தாங்கிக்கொள்ள பழகிக்கொண்டேன். இன்றும் அப்படித்தான்.

என்னுடைய காதலை அவரிடம் சொன்னபோது வாய்விட்டுச் சிரித்தார். இது வெறும் ஈர்ப்பு மட்டுமே என்று அறிவுரை கூறினார். நான் விடாப்பிடியாக இருக்கவே என் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என் வீட்டுக்கு வரும் சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. என் பிடிவாதம் அவரை இளக வைத்தது. என் அம்மாவிடம் பேசினார். அவர் சம்மதிக்கவே, தன்னுடைய பெற்றோரிடம் பேசினார். அடுத்த ஆறு மாதங்களில் எங்களுடைய காதல் திருமணத்தில் முடிந்தது.
என் பெயரைச் சொல்லி அழைத்ததைவிட, ‘செல்லமே’ என்று அழைத்த நாட்களே அன்று அதிகம். அப்படி அன்பொழுக அவர் அழைத்தது இன்று என் நினைவில் மட்டுமே உள்ளது. இன்று செல்லம் என்ற அந்த வார்த்தை என் மகளுக்கு உரியதாக மாறிவிட்டது. பெண்களின் அன்பும் அதை வெளிப்படுத்தும் விதமும் திருமணத்துக்குப் பின்னும் மாறுவதில்லை. ஆனால், ஆண்கள் அப்படியில்லை. இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.

- ஹமிதா நஸ்ரின், சென்னை.

கா. க. க. போ!

எண்பதுகளில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவன் நான். ஆறாம் வகுப்பிலிருந்து உடன் படித்த நண்பர்கள் பலர் பத்தாவது முடித்ததும் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் என்று தொழில்சார்ந்த படிப்புகளுக்குச் சென்றுவிட, எங்கள் நட்பைப் பிணைக்க நாங்கள் கண்டுபிடித்த இடம் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்!

இதய வடிவத்துக்குள் காதலியின் பெயரைத் தட்டச்சு செய்வது, இரண்டு வண்ண ரிப்பன்களைக் கொண்டு தட்டச்சு செய்வது என்று பலர் ஏதேதோ செய்துகொண்டிருக்க, இன்ஸ்டிடியூட் வைத்திருப்பவரின் மகளை நண்பன் ஒருவன் தன் காதலியாக மனத்தில் வரித்துக்கொண்டான். 15 நிமிடத்தில் ஒரு பிழைகூட இல்லாமல் தட்டச்சு செய்து தேர்வானவன், அந்தக் காதலில்தான் தோற்றுப் போனான்.

விரிவுரை தந்த சுருக்கெழுத்து

நானும் நண்பர்கள் சிலரும் வேறொரு இன்ஸ்டிடியூட்டில் சுருக்கெழுத்துப் பயிற்சிக்குப் போனோம். ‘ம்’ என்றால் சந்தேகம்; ‘ஏன்’ என்றால் விவாதம் என நான் அக்கப்போர் செய்வதன் அர்த்தத்தை அந்த ஆசிரியை உணர்ந்துகொண்டார். ஒரு பொன்மாலைப் பொழுதில் எங்களுக்கு காபி வாங்கிக் கொடுத்து, எது எதிர்ப்பாலினக் கவர்ச்சி, எது காதல் என்று எடுத்துச் சொன்னார். இவ்வளவுக்கும் பிறகு, நியாயமாகச் சுருக்கெழுத்தை நான் ஊன்றிப் படித்திருக்க வேண்டும். ஆனால், சுருக்கெழுத்தே பிடிக்காமல் போய்விட்டது.

வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்த அந்தக் காலத்தில் தங்கள் காதலைத் துணிச்சலுடன் வெளிப்படுத்த திரைப்படங்களில் வரும் காதலர்களும் தயங்கினர். அப்படிப்பட்ட காதலர்களுக்கு இடையில் ‘அலைகள் ஓய்வதில்லை’ எங்களைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனைத் திரைப்படம்! அந்தப் படத்தில் காதலர்களின் வெற்றியும் நிஜத்தில் எங்களுக்கு பிடித்தமான மைத்து அக்காவின் காதலின் வெற்றியும் நாமும் காதல் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று எங்களைக் கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்யவைத்தன.

காதல் கீதங்கள்

இதில் தீவிரமாகக் களம் இறங்கியவன் என் நண்பன் பாகி. அவன் ‘தில் தீவானா….’ பாடலைக் கேட்கிறான் என்றால் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்று அர்த்தம். ‘சுவ்வி சுவ்வி சுவ்வாலம்மா சீத்தாளம்மா’ பாடலை விரும்பிக் கேட்கிறான் என்றால் ஆந்திரத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று அர்த்தம். அவன் காதலிப்பதிலும் தோல்வி அடைவதிலும் ஒரு நன்மை இருக்கிறது. அற்புதமான தனிப்பாடல்கள் அவனுடைய சிந்தனையில் உதிக்கும். உடனே என்னுடைய இசை சேர்ப்போடு ஏதாவது ஒரு நண்பரின் வீட்டு மாடியில் அது அரங்கேறும். இப்படி நிறையப் பாடல்கள் அவனிடமிருந்து பிறந்திருக்கின்றன. அருமையாகப் பேசுவான். அவன் காதலிக்கும் பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள்வான். ஆனால், அவன் காதலிக்கும் விஷயம் அந்தப் பெண்ணைத் தவிர, அவரின் குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் தெரிந்துவிடும். எளிமையாக அந்தப் பெண்ணிடம் பேசுவதை விட்டுவிட்டு, அவருக்கு வாழ்த்து அட்டையை அனுப்புவது, அந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு அவர் செல்லும் வழியெங்கும் போஸ்டர் அடித்து ஒட்டுவது எனப் பல தடாலடி வேலைகளைச் செய்வான். இப்படிப்பட்ட விநோதப் பிறவிகளை இந்தக் காலத்திலும் பார்க்கலாம்.

நகரத்து நாடோடிகள்

கல்லூரி நாட்களில் பிறரின் காதலுக்கு உதவும் கவிதைகளை எழுதுவது, காதலர்களைச் சேர்த்துவைப்பது போன்ற ‘நாடோடிகள்’ படப் பாணியிலான சேவையையும் செய்தோம். எங்கள் பகுதியில் கிளை நூலகம் வந்தது. பதின்ம வயதிலேயே சாண்டில்யன், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருந்த எனக்கு நூலகத்தில் அறிமுகமானது தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’. அதன் மையப் பாத்திரங்களான பாபுவும் (வீட்டில் என் செல்லப் பெயர் பாப்பு) யமுனாவும் என்னோடு இரண்டறக் கலந்தனர். யமுனாவின் அழகு, திறமை, அறிவு எல்லாம் சேர்ந்த உருவாக என் மனத்தில் உயர்ந்தாள் என் அக்கா மகள் தமிழ். இசையில் எனக்கிருந்த அனுபவமும் ஆர்வமும் அவளுக்கிருந்த இயல்பான திறமையும் எங்களை இணைத்துவைத்தன. காதல், கல்யாணம் எல்லாம் கடந்து போகும். ஆனால், அன்பான தருணங்களும் நினைவுகளும் நம்முடைய எஞ்சிய நாட்களைக் கடத்தும் அளவுக்கு வலிமையானவை!

- வா.ரவிக்குமார்

தவமின்றிக் கிடைத்த வரம்

பிறந்ததிலிருந்து அப்பாவின் கண்டிப்பும் கட்டுப்பாடுமே வாழ்க்கையாக இருந்தது. ஆனால், அதுவும் நல்லதுதான். இல்லையென்றால் அப்பா பார்த்த மாப்பிள்ளையை மணந்திருப்பேனா இல்லையா எனத் தெரியவில்லை. என்னைப் பெண் பார்க்க வந்தபோது அவரை நான் பார்க்கவேயில்லை. நிச்சயதார்த்தத்தில்தான் பார்த்தேன். எனக்கு அப்போது திருமணத்தின் மீது பயமாக இருந்தது. அப்பாவின் வார்த்தையைத் தட்டமுடியாது என்பதால் சம்மதித்தேன். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு வந்த மாட்டுப் பொங்கல் அன்று யாரும் என்னுடன் இல்லை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடிவெடுத்தேன். அப்பாவின் போனில் இருந்த அவர் நம்பரை எடுத்து போன் செய்தேன். என்ன பேசப் போகிறோம் எனத் தெரியாமல்தான் போன் செய்தேன். ஆனால், நாங்கள் பேசிய ஒரு மணி நேரத்தில் என்ன பேசினோம் என்பதை இப்போது யோசித்தாலும் நினைவில்லை. ஆனால், பேசி முடித்த பிறகு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. காதலிப்பவர்கள் அப்படி என்னதான் பேசுவாங்க என்று கேலி செய்த நான், அன்றைக்குதான் காதலுடன் பேசுவதில் உள்ள மகிழ்ச்சியை உணர்ந்தேன். அப்புறம் அப்பாவின் விருப்பத்துக்காக மட்டுமில்லாமல் என் மனசுக்கும் பிடித்து அவரை மணந்துகொண்டேன். என் இந்த மாறுதலுக்குக் காரணம் அவரோட அமைதி, பக்குவப்பட்ட தன்மை, எளிதில் கோபப்படாத குணம் எல்லாம்தான்.

எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கினான் எங்கள் மகன். குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் எங்கே என் மீதான பாசம் குறைந்துவிடுமோ என்ற சின்ன பயமும் இருந்தது. ஆனால், அவரோ நீதான் என் முதல் குழந்தை என்று சொன்னதுடன் இன்றுவரை அதை மெய்ப்பித்தும் வருகிறார். அதுதான் அவர் மீதான அன்பும் காதலும் அதிகரிக்கக் காரணம்.
நாங்கள் இருவரும் எவ்வளவு அன்பாக இருந்தாலும் எங்களுக்குள்ளேயும் சிறு சிறு சண்டைகள் இருக்கத்தான் செய்யும். தவறு என்னிடம் இருந்தாலோ நான் ரொம்ப கோபப்பட்டதாக நினைத்தாலோ மதிய உணவைக் கட்டிக்கொடுக்கும்போது முட்டை, கறிவேப்பிலை, கேரட், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றை இதய வடிவில் வெட்டி அழகாக அலங்கரித்து வைப்பேன். உணவு இடைவேளையின் போது டிபன் பாக்ஸைத் திறக்கும் அவருக்கு எப்படி இருக்கும் என நினைத்து மகிழ்வேன்.
எங்கள் வாழ்க்கை சின்ன சின்ன சண்டைகளுடனும் நிறைய சந்தோஷத்துடனும் சென்றுகொண்டிருக்கிறது. என் அப்பாவிடம் கிடைக்காத சுதந்திரம் என்னவரிடம் கிடைப்பது வரம்தானே!

- ஸ்வர்ணா சுரேஷ், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x