

ஸ்ரீதேவி மோகன்
சுய அடையாளத்தைத் தொலைத்து வாழ்வதைவிடவும் அவலம் உண்டா என்கிற கேள்வியை இந்தச் சமூகத்தை நோக்கி அழுத்தமாகக் கேட்கிறாள் மீனாட்சி. ஆர். சூடாமணியின் ‘பிம்பம்’ சிறுகதையின் நாயகி அவள்.
பிரசித்திபெற்ற பெண்ணாகத் தன்னைக் குறித்து எந்நேரமும் கனவு காண்பவள் மீனாட்சி. அவளின் கனவுகளைத் தகர்க்க வருகிறது வரன் எனும் தடை. ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகும் தன் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள தன்னால் முடியும் என்னும் நம்பிக்கையோடு அதற்கு ஒப்புக்கொள்கிறாள். அவள் நம்பிக்கையில் தவறில்லைதானே. ஆனால், மீனாட்சியின் தாயோ திருமணம் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன்பே தன் கனவுகளைக் காவுகொடுத்தவள்.
“அவசர குடுக்கை, அதிகப் பிரசங்கி. அதென்ன பீன்ஸா நறுக்கி வைச்சிருக்க? இது வேணாம். எனக்கு இன்னிக்குப் புடலங்காய்க் கூட்டு தொட்டுக்கணும்போல இருக்கு. அதைப் பண்ணிடு” என்று கணவன் சொன்னால் மறுபேச்சு பேசாமல் பீன்ஸை எடுத்து வைத்துவிட்டுப் புடலங்காயை நறுக்க ஆரம்பிப்பாள். கணவனின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவள். தாயின் வலியை நன்கு அறிந்தவளாக இருக்கிறாள் மீனாட்சி. இருந்தும் திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறாள்.
மீனாட்சியைப் பெண் பார்த்தவர்கள், அவளை வேலையை விடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். முதலில் சீறுகிறாள். பின் அப்பாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, ‘இந்த வேலையினால் எல்லாம் தான் ஒன்றும் பெரிதாகச் சாதித்துவிடப்போவதில்லை’ என தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு வேலையைவிடச் சம்மதிக்கிறாள்.
அடுத்ததாக, மூக்கு குத்திக்கொள்ள வேண்டும் என மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து மற்றொரு கண்டிஷன் வருகிறது. கோபத்தில் பொங்கிப் பின் தாய்க்காகவும் தன் வருங்காலக் கணவனின் முகமலர்ச்சியையும் யோசித்து அதையும் ஏற்றுக்கொள்கிறாள். ரகசியமாகக் கண்ணாடி முன் பவுடரை எடுத்து மூக்குத்தி போல மூக்கில் பொட்டிட்டுப் பார்க்கிறாள். அழகாக இருந்தாலும், மூக்குத்தியுடன் பார்க்கையில் முக ஜாடை தன் அம்மாவைப் போலவே இருப்பதாகத் தோன்றுகிறது மீனாட்சிக்கு.
கனவுகளை மூட்டை கட்டலாமா?
வெளித்தோற்றத்தில் மட்டும்தான் அம்மாவைப் போல் இருக்கிறோமா அல்லது… சுருக்கென்று அவளுள் ஒரு பயம் வியாபிக்கிறது. மூளையில் மின்னலடிக்கிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால், தானும் பிரசித்திபெற்ற பெண்ணாக எல்லாம் ஆகப்போவதில்லை.
இன்னொரு அம்மாவாகத்தான் ஆகப்போகிறோமோ? தன் அம்மாவின் பிம்பத்தின் மறுவார்ப்பாகத் தான் மாறிவருவதை உணர்கிறாள் மீனாட்சி. பிம்பம் இறுகுவதற்குள் தன் கனவுகளை மீட்டெடுக்க விரும்புகிறாள். புத்திசாலித்தனமான முடிவொன்றையும் எடுக்கிறாள்.
“நான் வேலையை விடப்போவதில்லை. மூக்கையும் குத்திக்கொள்ளப் போவதில்லை. இப்படியே என்னை ஏற்றுக்கொள்ள சம்மதம் எனில் எனக்குச் சம்மதம். இல்லையென்றால் உங்களை மணந்துகொள்ள நான் மறுக்க வேண்டியிருக்கும்” என்று மாப்பிள்ளைக்குக் கடிதம் எழுதுகிறாள். பின் நிம்மதியாக உறங்குகிறாள். மறுபடியும் கனவுகள்… கனவுகள். ஆமாம் பின்னே? குழந்தைப் பருவம் முதல் வளர்த்த கனவுகளைப் புதைப்பதற்கா கல்யாணம்?
சிறகை ஒடித்தபின் பறவை என்று பெயரிடுதல் எவ்வளவு அபத்தம்? கனவுகளை மூட்டைக் கட்டுவதற்கா பெண் கல்வி? இவ்வளவு கற்றதும் அடிமை வாழ்வு வாழ்வதற்காகத்தானா? அது தெரிந்தும் வாளாவிருத்தல் எவ்வளவு முட்டாள்தனம்? இந்தக் கேள்விகளை நிச்சயம் தனக்குள்ளே கேட்டிருப்பாள் மீனாட்சி. அதனால்தான் விலங்கிட நினைத்தால் விலக்கி வைக்க வேண்டும் எனத் துணிச்சலுடன் முடிவெடுக்கிறாள். பேச வேண்டிய நேரத்தில் பேசுவதுதான் அறிவாளித்தனம் என்று அவள் உணர்ந்துகொண்டாள்.