

கவிதா நல்லதம்பி
செந்நிற ஆடையும் மிகச் சிறந்த அணிகலன்களையும் அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராஜபுத்திரப் பெண்கள் புடைசூழ ராணி பத்மாவதி தீயை வலம்வரும் காட்சி, ‘பத்மாவத்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.
அலாவுதின் கில்ஜி தம் கோட்டையை நெருங்கிக்கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்ததும் அவர்கள் தீயில் இறங்கத் தயாராகிவிடுவார்கள். அந்த மன உறுதியைப் பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஓர் உணர்வெழுச்சி தோன்றும். அந்நிய ஆணின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதைவிடத் தங்கள் குலப்பெருமைக்காகவும் மானத்தைக் காக்கவும் தம்மையே தீக்கிரையாக்கிக்கொள்ளும் அப்பெண்களின் தியாகம் நம்மை ஒரு கணம் உலுக்கவே செய்யும்.
தீயில் இறங்கும் பெண்கள்
அந்நியர்களின் படையெடுப்பின்போது, ராஜபுத்திரப் பெண்கள் தங்கள் கற்பைக் காத்துக்கொள்ளும்விதமாகக் கூட்டமாகத் தீயில் விழுந்து உயிர்விடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஜவுஹர் (jauhar) என்று இவ்வழக்கம் குறிப்பிடப்பட்டது. போர் சூழ்ந்திருந்த நம் தமிழ்ச் சமூகத்தில் கணவனது மறைவுக்குப் பிந்தைய வாழ்வை பூதப்பாண்டியனின் மனைவி பாடியதாக இடம்பெறும் பாடல் ஒன்று நினைவுபடுத்துகிறது.
பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
- எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் அது.
மன்னன் இறந்தவுடன் அரசியும் உடன்கட்டை ஏறவிருக்கிறாள். அமைச்சர்களும் பிறரும் அவளை உடன்கட்டை ஏறவிடாமல் தடுக்க நினைக்கின்றனர். அப்போது அதை மறுத்து பூதப்பாண்டியனின் மனைவி பெருங்கோப்பெண்டு, ‘கைம்மை நோன்பு ஏற்று வாழும் வாழ்க்கையைவிட இவ்வாறு கணவனோடு தீயில் புகுந்து இறப்பது மேலானது. அந்தத் தீ தாமரை நிறைந்த பொய்கையில் இறங்குவதைப் போன்ற குளிர்ச்சியைத் தரவல்லது’ என்கிறாள்.
மூவகைக் கற்பு
கைம்மை நோன்பில் நெய்யும் எண்ணெய்யும் கலவாத, உப்பில்லாத நீர்ச் சோற்றை உண்டு, எள் துவையலின் துணையோடு, புளியிட்ட கீரையோடு உடலுக்கு இதம் தரும் படுக்கையில் உறங்காது, கற்கள் நிறைந்த படுக்கையில் உறங்க வேண்டும். கணவனுக்கு மட்டுமே என்று மலர்சூடி மகிழ்ந்த கூந்தலையும் மழித்துவிட வேண்டும். அணிகலன்களைத் துறந்து, அழகியல் உணர்வை மறந்து வாழும் வாழ்க்கையைவிட இறந்துவிடுவது மேலானது. கணவன் இறந்த செய்தியைக் கேட்டவுடனே உயிர் தங்காது பிரிவதைத் தலைக்கற்பென்றும், உடன்கட்டை ஏறி உயிர் மாய்த்தலை இடைக்கற்பென்றும், உயிர் துறவாது உலகியல் இன்பங்களைத்
துறந்து கைம்மை நோன்பேற்பதைக் கடைக்கற்பென்றும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.
கோவலன் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு கண்ணகி போன்று தன்னால் உயிர் துறக்க இயலவில்லையென்று வருந்தும் மாதவி, கணவன் இறந்ததும் தானும் இறக்கும் பத்தினிப் பெண்டிர் குலத்தில் பிறக்கவில்லையே, கணிகையாகப் பிறந்து தான் உயிர்துறந்தால் இவ்வுலகம் சிரிக்கும் என்பதால் உயிர் வாழ்கிறேன் என்கிறாள். பௌத்தத் துறவை ஏற்கிறாள். கணவனுக்காக உயிர் துறப்பதைப் பெரும்பேறாக அன்று பெண்கள் கருதினர்.
ஆய் அண்டிரன் என்னும் அரசன் இறந்தபோது, அவன் மனைவியரும் உடன் இறந்தனர் என்கிறது சங்கப் பாடலொன்று. ஆளில் பெண்டிர், கழிகல மகளிர், பருத்திப் பெண்டிர், தொடிகழி மகளிர், படிவ மகளிர், உயவற் மகளிர் எனப் பல தொடர்களில் கணவனில்லாப் பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.
உயிரைப் பறிக்குமா குலப்பெருமை?
32 ஆண்டுகளுக்கு முன், ராஜஸ்தானின் தியோரலா என்ற கிராமத்தைச் சார்ந்த ரூப் கன்வர் என்பவர் உடன்கட்டை ஏறிய செய்தியை இங்கே பொருத்திப் பார்க்கலாம். ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்குத் திருமணம் நடந்து ஓராண்டுதான் ஆகியிருந்தது. கணவர் இறந்துவிட்டார். அவரை எரிப்பதற்காக அடுக்கப்பட்ட சிதையிலேயே ரூப் கன்வர் வைத்து எரிக்கப்பட்டார். உடன்கட்டை ஏறவிருக்கும் பெண்ணுக்கு மகன் இருந்தால், அவனே தன் தாய்க்குத் தீ வைக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் பெண்ணே தன் சிதைக்கு யார் தீ வைக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைச் சொல்லலாம். ரூப் கன்வருக்குக் குழந்தை இல்லாததால், அவளுடைய மைத்துனன் அந்தப் பொறுப்பை ஏற்றார். அவருடைய பெற்றோருக்குச் செய்தி தெரியாது. தெரிந்தபோதும்கூடத் தம் வீட்டுப் பெண்ணுக்கு நடந்த அநீதியாக அதை அவர்கள் பார்க்கவில்லை. ரூப் கன்வரின் சகோதரர் அந்தக் கொலையைப் பற்றிப் பேசும்போது, தன் தங்கை தம் குலப்பெருமையை நிலைநாட்டிவிட்டாள் என்று சொன்னாரே தவிர, தன் தங்கையின் இறப்புக்கு நியாயம் கோரவில்லை. “இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் பெண், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்” என்றுதான் அந்தச் சமூகம் அவரின் இறப்புக்குப் பதிலளித்துப் பெருமை பேசியது. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்குகள் யாவும், ‘தானே விருப்பத்துடன் சிதையில் இறங்கினார்; எனவே அது கொலையல்ல’ என்று தள்ளுபடி செய்யப்பட்டன.
உடைமைப் பொருளா பெண்?
பெண்கள் சுடுகாட்டுக்கு வருவதை மறுக்கும் சமூகம், மணப்பெண்ணைப் போன்று ஒப்பனை செய்யப்பட்ட அவரைச் சிதையில் ஏற்றியது. நெருப்பு பற்றிக்கொண்டபோது வலிதாளாமல் கதறியபடி சிதையை விட்டு எழுந்த அந்தப் பெண்ணை மீண்டும் சிதைக்குள்ளேயே தள்ளித் தம் மரபுப் பெருமையைக் காட்டியது. ரூப் கன்வர் சிதையில் வைத்துக் கொளுத்தப்பட்ட இடம் இன்றும் ‘சதி ஸ்தல்’ என்ற புனிதமான இடமாகக் கருதப்பட்டுவருகிறது. அவர் தீக்கிரையான நாளில் ஆண்டுதோறும் ‘சுன்ரி மகோத்ஸவ்’ என்ற விழாவைக் கொண்டாடிவருவதை எப்படிப் புரிந்துகொள்வது?
சொத்தைப் பாதுகாப்பதுதான் உடன்கட்டை ஏறும் செயலுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்று வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். கணவனுக்கு உரிமையுடையவளாகக் கருதப்படும் பெண், வாரிசைப் பெற்றுத்தருவதையும், தம் குலப்பெருமையைப் பாதுகாப்பதையும்தான் தன் கடமையாகக் கொள்கிறாள். கணவனின் இறப்புக்குப் பிறகு அவள் இன்னொரு ஆணுடன் வாழ்வதையோ மற்றொரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதையோ இச்சமூகம் அங்கீகரிக்கவில்லை.
அரசாளும் நோக்கில் நடத்தப்பட்ட போர் வன்முறைகளின்போது, பகை நாடுகளில் புகுந்த படைவீரர்கள் அங்குள்ள பெண்கள் மீதும் வன்முறையைக் கையாண்டார்கள். விளையாடிக்கொண்டிருந்த பெண்களின் மகிழ்ச்சியைச் சிதைத்தார்கள். தோல்வியைத் தழுவிய மன்னனின் உரிமை மகளிரை, வெற்றிபெற்ற மன்னன் கொள்ளைப் பொருளாகக் கருதினான். பெண்களின் கூந்தல் களைந்து, தம் நாட்டில் பலரும் நீர் அருந்தும் நீர்நிலைகளில் மூழ்கச் செய்து, அம்பலங்களில் ஏவல் பணிகளைச் செய்ய வைத்து அவமதித்தார்கள். இப்பெண்களே பிற்காலத்தில் கொண்டி மகளிராக, பரத்தையராக மாற்றம் பெற்றனர் என்றும் பதிவுகள் உண்டு.
மன்னன் திருமாலாகப் பார்க்கப்பட்டான், நிலமகள் திருமகளாகக் கருதப்பட்டாள். எனவே, மண்ணைத் தன் உடைமையாகக் கருதினான் மன்னன். மண்ணை ஆள்வதும் மண்ணுக்குரிய பெண்ணை ஆள்வதும் ஆண் கடமையாகப் பார்க்கப்பட்டன. பகை மன்னனின் நிலத்தை அவமதிப்பதைப் போலவே, பெண்ணை அவமதித்தான்; உடைமையாக்கினான். உற்பத்தியும் தலைமுறை உருவாக்கமும் ஒன்றெனவே கருதப்பட்ட சமூகத்தின் தொடர்ச்சியாகத்தான் நாம் வாழ்கிறோம். இதைத்தான் இன்று நடைபெறும் ஆணவக் கொலைகளும் அமிலவீச்சுகளும் பாலியல் வல்லுறவுகளும் உணர்த்துகின்றன.
(பெண் வரலாறு அறிவோம்)
கட்டுரையாளர்,
உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: janagapriya84@gmail.com