

த.அசோக்குமார்
பருவம் பொய்த்தாலும் ஆண்டுதோறும் தவறாமல் நடந்துவிடுவது ‘பெண் இன்று’ மகளிர் திருவிழாவின் சிறப்புகளில் ஒன்று. ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் நடைபெறும் மகளிர் திருவிழா, ஐந்து ஆண்டுகளைக் கடந்து ஆறாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் விழா திருநெல்வேலி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஜனவரி 26 அன்று நடைபெற்றது.
விழாவில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், முதியவர்கள் என வயது வேறுபாடின்றிப் பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.
ஆரோக்கியம் அவசியம்
விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் மகப்பேறு மருத்துவ நிபுணர் ஆக்னஸ், பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையும் சமச்சீரான உணவும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கும் என அவர் குறிப்பிட்டார். “அழகையும் ஆரோக்கியத்தையும் பெண்கள் குழப்பிக் கொள்ளக் கூடாது. சிவப்பழகு கிரீம்களுக்குச் செலவிடும் பணத்தை ஆரோக்கியத்துக்குச் செலவிடலாம். பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப் படுகின்றனர். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பெண்களுக்குக் கருப்பையை நீக்க வேண்டும். ஆனால், வணிக நோக்குடன் செயல்படும் மருத்துவமனைகளில் பெண்களின் கருப்பையை அறுவடை செய்கிறார்கள் எனத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டேன். அதைப் பலரும் எதிர்த்தனர். ஆனால், அதுதான் உண்மை. கருப்பையில் மிகப் பெரிய கட்டியோ, புற்றுக்கட்டியோ இருந்தால் மட்டுமே கருப்பையை அகற்ற வேண்டும். மற்றபடி பெரும்பாலான சிக்கல்களைச் சரிசெய்ய மருத்துவத்தில் வழியுண்டு” என்று பேசிய ஆக்னஸ், வாசகியரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். “வேலை செய்யாமல் இருப்பதால்தான் இந்தக் காலப் பெண்களில் பலருக்கும் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறதா?” என்ற கேள்வியை மறுத்த அவர், “உணவு முறையும் பெண்களின் மனநிலையும் இதற்குக் காரணம்” என்றார். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் உடலையும் சுத்தமாக வைத்துக்கொண்டாலே ஆரோக்கியம் தானாக அமையும் என்று முத்தாய்ப்பாக முடித்தார்.
நமக்காக வாழ்வோம்
அவரைத் தொடர்ந்து பேசிய திருநெல்வேலி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, குடும்பத்துக்காக மட்டும் உழைத்துக்கொண்டிருக்காமல் பெண்கள் தங்களுக்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார். பாலின பேதத்தைக் களைய குழந்தை வளர்ப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் குறிப்பிடார். பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்துக்கொடுக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான கைவினைக் கலைப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதையும் அவர் குறிப்பிட்டார்.
செல்போன், கணினி, தொலைக்காட்சி போன்றவற்றின் வரவால் மக்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்துவருவதைப் பற்றிக் குறிப்பிட்டார் மாவட்ட நூலக அலுவலர் இரா. வயலட். போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கான ஏராளமான புத்தகங்கள் நூலகங்களில் இருக்கின்றன; அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரினார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாநகரத் தொழில்நுட்பப் பிரிவு உதவிக் காவல் ஆய்வாளர் சுபா, ‘காவலன் எஸ்ஓஎஸ்’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது குறித்தும், அந்தச் செயலி பெண்களை எப்படி ஆபத்திலிருந்து காக்கும் என்பதையும் விளக்கினார். விழா அரங்கிலேயே பெண்கள் பலர் தங்கள் ஸ்மார்ட் போன்களில் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொண்டனர்.
67 வயதில் முதல் பரிசு
செவிக்கு விருந்தைத் தொடர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கும்விதமாக திருநெல்வேலி பெருமாள்புரம் லேடீஸ் கிளப் உறுப்பினர்கள், திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி கலைக்குழு ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் அமைந்தன. கல்லூரி மாணவர்களின் கரகாட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களையும் ஆடச்செய்தன.
நடன நிகழ்ச்சிகள் முடிந்ததுமே போட்டிகள் களைகட்டத் தொடங்கின. மதிய உணவுக்குப் பிறகும் வாசகியர் பலர் போட்டிகளிலும் பரிசுகளிலும் திளைத்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பல வண்ண தெர்மகோல் பந்துகளைப் பிரிப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு ஓவியம் வரைவது, கோலிக் குண்டை ஊதித் தள்ளுவது, எண்களை இறங்குவரிசையில் அடுக்குவது எனப் பல வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டன. பெண் கல்வி, அமில வீச்சு, அரசியலில் பெண்கள் போன்ற சமூகக் கருத்துகளை மையமாக வைத்து ‘மைம்’ போட்டி நடத்தப்பட்டது. இவற்றுடன் உடனடிப் போட்டிகளும் ஆச்சரியப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நடுக்களூரைச் சேர்ந்த மாரியம்மாள், திருநெல்வேலையைச் சேர்ந்த சங்கர கோமதி இருவருக்கும் பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளின் இடையே வாசகியர் தங்கள் கரவொலியாலும் அதிரடி நடனத்தாலும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். மூத்த பெண்களும் சிறு குழந்தைகள்போல் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கெடுத்தனர். இசை நாற்காலி போட்டியில் முதல் பரிசை வென்ற 67 வயதாகும் சேது ராமலஷ்மி, தான் முதன்முதலாக வாங்கும் பரிசு இதுதான் என்று சொன்னபோது வாசகியரின் கரவொலி அரங்கை நிறைத்தது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நிகழ்ச்சிகளைச் சின்னத்திரை தொகுப்பாளர் தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.
மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் லலிதா ஜுவல்லரி, பொன்வண்டு டிடர்ஜென்ட், பிரஸ்டீஜ் குக்வேர், ஆரெம்கேவி, சாஸ்தா வெட்கிரைண்டர், ராஜேஷ் எலெக்ட்ரிக்கல்ஸ், பூமர் லெகின்ஸ், எஸ்கேஎம் பூர்ணா ஆயில், ஏஜெஜெ மஸ்கோத் அல்வா, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, மயூரி டிவி ஆகியவை இணைந்து வழங்கின.