

பேரின்பத் திறவுகோல்
எனக்கு நினைவுதெரிந்த நாள் முதலே என் அம்மாவைப் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். பூஜையறையில் உள்ள மரப்பெட்டியில் பல புத்தகங்கள் பைண்ட் செய்யப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். திருவாசகம் 1950-ல் வெளியான ‘ஆனந்த விகடன்’ தீபாவளி சிறப்பு மலர், பொன்னியின் செல்வன், கடல் புறா, மணியன் எழுதிய பயணக் கட்டுரைகள் என பொக்கிஷங்கள் பல நிறைந்திருக்கும் அந்த மரப்பெட்டியை அம்மா பெரிய பூட்டு போட்டு பூட்டிவைத்திருப்பார். புத்தகத்தைப் பூச்சி அரித்துவிடக் கூடாது என்பதற்காகப் பெட்டியில் வேப்பிலைகளையும் நொச்சி இலைகளையும் போட்டு வைப்பார். இதனால், அந்த பெட்டியை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் வரும் வாசம் ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுக்கும்.
நான் ஆறாம் வகுப்பு படித்த போதுதான் அம்மா ‘ரத்னபாலா’, ‘அம்புலி மாமா’ ஆகிய இதழ்களை வாங்கிக்கொடுத்து வாசிக்க வைத்தார். அதிலிருந்து தொடங்கியதுதான் என் புத்தக வாசிப்பு. மணியன் எழுதிய ‘இதயம் பேசுகிறது’ பயணக் கட்டுரையை என் வளரிளம் பருவத்தில் படித்தேன். அந்தப் பயணக் கட்டுரையைப் படிக்கப் படிக்க நானும் பெரியவளானதும் வெளிநாட்டுக்குப் போக வேண்டும்; அவர்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. சாண்டில்யன் எழுதிய ‘கடல் புறா’ நாவலைப் பத்தாம் வகுப்பு விடுமுறையில் படித்தேன். படிக்கும்போதே என்னை அறியாமல் தமிழ்மேல் காதல் வந்தது. எவ்வளவு அழகான வர்ணணைகள். நாவலில் உள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் கண்முன் நிழலாடின.
அதன்பிறகு எழுத்தாளர்கள் லக் ஷ்மி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன், சிவசங்கரி ஆகியோருடைய புத்தகங்கள் தன்னம்பிக்கை மிளிர எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தன. புகுந்த வீட்டிலும் அனைவரும் புத்தகப் பிரியர்கள் என்பதால் வாழ்க்கை மேலும் இனிமையானது. எந்த அளவுக்கு என்றால் தினமும் ஒரு மணிநேரம் நானும் மாமனாரும் நாங்கள் படித்த புத்தகங்கள், சிறுகதைகள் குறித்து விவாதிக்கிற அளவுக்கு. இறுதியாக, நானும் மாமனாரும் விவாதித்துப் பேசியது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ‘உடையார்’ புத்தகத்தைப் பற்றித்தான். சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ புத்தகம்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தது. அந்தப் புத்தகத்தை நான் இதுவரை எத்தனை முறை படித்திருப்பேன் என்பதை நினைவில் வைத்துகொள்ள முடியாத அளவுக்குப் படித்திருக்கிறேன். கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி, மனச் சோர்விலிருந்து விடுபடுவது எப்படி என சராசரி மனிதர்களின் மனத்தில் தோன்றும் பல ‘எப்படி’களுக்கு அழகாக, எளிமையாகப் பதில் சொல்லியிருப்பார் சுவாமி சுகபோதானந்தா.
மதங்களையும் மனித மனங்களையும் ஒன்றாக இணைத்து நெய்யப்பட்ட எந்தப் புத்தகமானாலும் சரி, அதை ஒரு முறை படித்து மூடிவைத்துவிட்டால் முழுப்பலன் கிடைக்காது.
நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்காக அவற்றைத் திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். புத்தகங்களைப் படிக்கும்போது நாம் எந்த மனநிலையில் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தே புத்தகத்தில் உள்ள கருத்துகள் மனத்துக்குள் நுழையும். சாண்டில்யனின் ‘யவன ராணி’ புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட சுவாசித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். க்ரைம் நாவல்களுக்குப் பெயர்போன எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் ஒவ்வொரு நாவலும் ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக இருக்கும். அதேபோல் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘தொட்டால் தொடரும்’ நாவலில் காதலைச் செதுக்கி, காதலர்களுக்கு உயிர்கொடுத்து உலவவிட்டிருப்பார்.
எந்தப் புத்தகமாக இருந்தாலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை மனத்தில் அசைபோட்டுச் சிந்தித்து அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை வானவில்லைப் போல வண்ணஜாலமாக இருக்கும். காரிருளில் செல்பவர்களுக்குப் பேரொளியாகவும் வழி தவறியவர்களுக்கு வழிகாட்டியாகவும் புத்தக வாசிப்பு திகழும். ‘உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகம்’ என்கிறார் அமெரிக்க அறிஞர் லாங் ஃபெலோ. அது எந்த அளவுக்கு உண்மை என்பது வாசிப்பில் மூழ்கினால்தான் புரியும்.
- ஆதிரை வேணுகோபால், சென்னை.
மனிதரை நேசிக்கவைக்கும் எழுத்து
பள்ளி நாட்களில் புத்தகம் படிக்கும் ஆர்வம் தொடங்கியது. அம்புலி மாமா, கோகுலம், போன்ற இதழ்களைப் படித்து அவற்றில் வரும் கதைகளைப் பிறருக்குச் சொல்வதில் ஆர்வம் அதிகமாக இருந்தது.
மளிகைக் கடையில் சாமான்கள் மடித்துக்கொடுக்கும் காகிதத்தில் வரும் சிறு தகவல்களைக்கூட ஆர்வமாகப் படித்த அனுபவம் என்றும் மறக்காது.
அக்கம்பக்கத்து வீடுகளில் வார, மாத இதழ்களை வாங்கிப் படிப்போம். பின்வந்த நாட்களில் ராஜேஷ்குமார், லக் ஷ்மி, சிவசங்கரி, ரமணிசந்திரன் ஆகியோரின் புத்தகங்களை வாங்கி ஆர்வத்துடன் படித்ததுடன் இன்றும் அவற்றை எங்கள் வீட்டு நூலகத்தில் வைத்துள்ளேன். திருமணத்துக்குப் பிறகு புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்தபோது எனக்கும் என் குழந்தைகளுக்கும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, புத்தகக் காட்சிகளுக்கு அழைத்துச் செல்வது, புத்தகங்களை ஆர்வத்துடன் தேடி வாங்கித் தருவது, தான் படித்த புத்தகங்களைப் பற்றி எங்களுடன் உரையாடுவது என வாசிப்பு ஆர்வத்தைப் புதுப்பித்தவர் என் கணவர்தான்.
எங்கள் வீட்டில் கதை, கவிதை, இலக்கியம், ஓவியம், இயற்கை மருத்துவம், அறிவியல், இயற்கை விவசாயம், உணவு, சினிமா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட சிறு நூலகம் உள்ளது. எங்கள் வீட்டின் எல்லா அறைகளையும் புத்தகங்களே அலங்கரிக்கின்றன. வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசாகப் புத்தகங்களைத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்கள் குழந்தைகளும் அதையே பின்பற்றுகிறார்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். ‘தேசாந்திரி’, ‘கடவுளின் நாக்கு’, ‘துணையெழுத்து’, ‘கதாவிலாசம்’, ‘எழுத்தே வாழ்க்கை’, ‘எனது இந்தியா’ போன்றவற்றைப் படித்து முடித்துவிட்டேன். அவரது மற்ற நூல்களையும் வாங்கி வைத்திருக்கிறேன். அதேபோல் நா.முத்துகுமாரின் ‘வேடிக்கை பார்ப்பவன்’, ‘அணிலாடும் முன்றில்’, ஆயிஷா நடராஜனின் ‘ஆயிஷா’ போன்றவை நான் படித்ததில் பிடித்தவை.
நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களில் நம் கவனத்துக்கு வராத உறக்கமற்றுப்போன கூர்கா, பேருந்தில் குழந்தைக்குத் தண்ணீர் எடுத்துவர மறந்துபோன கிராமத்துத் தாய் என வாழ்க்கையின் வெவ்வேறு தரப்பு மனிதர்களைப் பற்றிச் சொல்லும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘ஆதலினால்’ கட்டுரைகள், சக மனிதர்களை நேசிக்க வைத்தன. நான் தன்னம்பிக்கையும் மனத் தெளிவும் பெற புத்தகங்களே உதவுகின்றன.
- கருணாம்பிகா பாலகிருஷ்ணன், உடையாம்பாளையம்.