போகிற போக்கில்: கற்றுத்தருவதே மகிழ்ச்சி

போகிற போக்கில்: கற்றுத்தருவதே மகிழ்ச்சி
Updated on
1 min read

கைவினைக் கலைஞர்களை உருவாக்கும் பணியில் பம்பரமாகச் சுற்றிச் சுழல்கிறார் கே.சொர்ணம். இவர் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே அலங்காரபேரி என்ற கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். ஃபேஷன் டிசைனிங், அழகுக்கலையில் பட்டயப் படிப்புகளையும் முடித்திருக்கிறார்.

திருநெல்வேலி டவுன் தொண்டர் சன்னதியிலுள்ள வீட்டில் பள்ளி மாணவியருக்குக் கட்டணம் இல்லாமல் கைவினைக் கலையைக் கற்றுத்தருகிறார். திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியிலும் நான்கு ஆண்டுகளாக மாணவியருக்குப் பயிற்சியளித்துவருகிறார்.

பொம்மைகள், பனையோலைப் பொருட்கள், சணல் பொருட்கள், குஷன், பட்டுத்துணிகளில் கைவேலைப்பாடுகள், ஆரி எம்ப்ராய்டரி, தையல், ஓவியம், காகிதத்தில் பலவிதமான பூக்கள் போன்றவற்றைச் செய்வதுடன் விதவிதமான சாக்லெட், பாரம்பரிய உணவுத் தயாரிப்பு என்று இவருடைய கைவண்ணத்தின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

கட்டணமில்லாப் பயிற்சி

“நான் கற்றுத் தேர்ந்ததை மற்ற பெண்களுக்கும் குறிப்பாக மாணவிகளுக்கும் சொல்லித்தர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். அதைச் செயல்படுத்தியும் வருகிறேன்” என்று சொல்கிறார் சொர்ணம்.

எந்தக் கலையாக இருந்தாலும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் அதில் சாதிக்கலாம் என்று சொல்லும் சொர்ணம், தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்லித்தருவதுதான் மிகப் பெரிய சந்தோஷம் என்கிறார். பாளையங்கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் கைவினைப் பொருட்கள் தயாரிப்புப் பயிற்சியைக் கட்டணமில்லாமல் பெண்களுக்குக் கற்றுத்தருகிறார் இவர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலும் கைவினைப் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார். இவரது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் விருது வழங்கிக் கவுரவித்திருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in