

த.அசோக்குமார்
தனக்குப் படிப்பறிவில்லை; கணவருக்கோ பார்வையில்லை. குழந்தைகள் இருவரின் பசியாற்ற வழியில்லை. வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் எனக் கணவர் சொல்ல, உறுதியான தன் முடிவால் தங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றியிருக்கிறார் பிரேமா.
தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (36). விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா (28). இருவருக்கும் 2011-ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் சக்தி பூதத்தார், சக்திவள்ளி இருவரின் வருகை இவர்களுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது.
மீட்டெடுத்த நம்பிக்கை
உறவினர் ஒருவரை நம்பி ரூபாய் இரண்டு லட்சம் முதலீட்டில் ஸ்டுடியோவையும் ஃபேன்ஸி ஸ்டோரையும் நடத்தத் திட்டமிட்டார் விக்னேஷ். அந்த உறவினர் ஏமாற்றிவிட அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தனியாக ஃபேன்ஸி கடையைத் தொடங்கினார். தன் சகோதரரிடம் உதவிபெற்று ஸ்டுடியோவையும் தொடங்கினார்.
2014-ல் திடீரென விக்னேஷுக்கு நிறங்களைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றினார்கள். 2017-ல் அவருக்குப் பார்வை முற்றிலும் பறிபோனது. “அப்போ ஒரு நண்பரை உதவிக்காக அழைத்து வந்தார்.
கடன் தொல்லையால் அவதிப்பட்ட அந்த நண்பருக்குத் தொழில் கற்றுக்கொடுத்துவிட்டு, கண் சிகிச்சைக்காக இவர் சென்றார். அந்த இடைவெளியில் ஸ்டுடியோவின் உரிமையாளராகத் தன்னை கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபடத் தொடங்கினார் அந்த நபர். என் கணவருக்குப் பார்வை இல்லை, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இதை அந்த நண்பர் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். இதனால் அவரை வெளியேற்றிவிட்டோம். கடையில் போட்டோ எடுக்க ஆள் இல்லை. வீட்டில் சொல்ல முடியாத வறுமை. யாரிடமும் கையேந்தவில்லை. குடும்பத்தோடு பல நாட்கள் பட்டினி கிடந்தோம். என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் அனைவரும் இறந்துவிடலாம் எனக் கணவர் சொன்னார். அப்போதுதான் நானே ஒளிப்படம் எடுத்துப் பழகட்டுமா என்று அவரிடம் கேட்டேன்.
ஒளிப்படத் தொழிலில் உள்ள கஷ்டங்களை எனக்குச் சொன்னார். இருப்பினும் என்னால் முடியும் என்று உறுதியாக நம்பினேன்” என்று சொல்லும் பிரேமா, அதன் பிறகு கேமரா நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். இருசக்கர வாகனத்தில் சென்று படம் எடுக்கத் தொடங்கினார்.
கேலியைக் கண்டுகொள்வதில்லை
“குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் நான் உழைத்தால் மட்டுமே முடியும். அதனால், போட்டோ எடுப்பது, எடிட் செய்வது, கேமராவைக் கையாள்வது என அனைத்தையும் என் கணவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியூர்களுக்குத் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்று படம் எடுக்கிறேன்.
திருமண நிகழ்வுகளில் மணப்பெண்ணின் உடைகளை நானே சரிசெய்து, இயல்பாகப் பேசி, போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்வேன். இதனால், திருமணம், மங்கல நீராட்டு விழாக்களில் போட்டோ எடுக்க எனக்குப் பலரும் ஆர்டர் கொடுக்கின்றனர். இப்போது ஆர்டர்கள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. சில நேரம் ஒரு இடத்தில் ஒளிப்படம் எடுத்துவிட்டு, அடுத்த இடத்துக்கு ஓடிச் சென்று படம் எடுக்க வேண்டியது இருக்கும். உயரமான இடத்தில் ஏறி நின்று படம் எடுக்க வேண்டியது இருக்கும். இதையெல்லாம் சிலர் கேலி செய்வார்கள்.
ஆனால், எதைப் பற்றியும் நான் கண்டுகொள்வதில்லை. படிக்காமல் இருந்ததுதான் வேதனையாக இருக்கிறது. பத்தாம் வகுப்பையாவது முடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்கிறார் பிரேமா.
“என் மனைவியால்தான் இன்று எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படிக் கிடைத்தால் என் மனைவியின் லட்சியத்துக்குத் துணை நிற்பதே என் லட்சியம்” என்கிறார் விக்னேஷ்.