

சுதந்திரம் என்பது என்ன? நள்ளிரவில் உடல் முழுவதும் நகைகள் பூட்டிக்கொண்டு தெருவில் தனியே நடந்து செல்வதா? படித்து நிறைய பட்டங்கள் வாங்குவதா? வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதா?
எழுத்தாளர் அம்பையின் ‘ஸஞ்சாரி’ என்ற சிறுகதையில் வரும் ருக்மணியைக் கேட்டால் பூரண சுதந்திரம் என்பது இதுவல்ல என்பாள். சுதந்திரம் என்பது பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்த கோட்டையைப் போல் பெண்ணை நடத்தாமல் இருப்பது என்பாள். ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளும் அந்தத் தியாகங்களுக்கு உரியதுதானா அந்தப் பாதுகாப்பு என்று கேள்வி எழுப்புவாள்.
வரையறைக்கு உட்படாதவள்
சாதாரணப் பெண்களைக் காட்டிலும் வித்தியாசமானவள் ருக்மணி. வாழ்வில் பூரண சுதந்திரம் தேடுபவள். சுதந்திரம் என்னும் வார்த்தையின் முழுப்பொருளை உணர்ந்தவள். திருமணமான பெண்கள் போடும் வாழ்க்கைத் திட்டங்களான சமையல், அன்பு செலுத்துதல், அம்மாவாதல், அவனையே காதலித்தல், அவனையே அடுத்த பிறப்பிலும் அடைய வேண்டிக்கொள்ளல், அப்படி இல்லையென்றால் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளல் என்ற வரையறைகளுக்கு உட்பட விரும்பாதவள் ருக்மணி.
ருக்மணி காதலிக்கும் ரங்காவோ, “நீ சுதந்திரமா எல்லா விலங்கையும் உடைச்சிட்டு…” என்று சுதந்திரத்தின் தத்துவத்தை ருக்மணிக்குப் போதித்தாலும் அந்த மூன்று நாட்கள் என்றால், நைச்சியமாக ஓரடி விலகி நடக்கும் பழமைவாதி. புரட்சி பேசினாலும் அடுத்தவரிடம் தன் காதலி பேசுவதையோ பழகுவதையோ சகியாதவன். அவளின் உடைகூட அவன் விருப்பப்படிதான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் சராசரி ஆணாதிக்க மனம் கொண்டவன். அவளது காதலின் சதையைத் தன் சொல் என்னும் வல்லூறின் அலகினால் கொத்திக் கொத்தித் தின்று தன் வெறியடக்கும் மமதைக் கொண்டவன். சதா தன் சந்தேகக் கண்களால் அலைபாய்ந்து கொண்டிருக்கும் கழுகு. அவன் எதிர்பார்க்கும் பெண் சற்றே நாணமுடையவளாக, வார்த்தைகளில் தன் தாகத்தைக் கொட்டாமல் அடக்குபவளாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன். ஆனால், பூரண சுதந்திரத்தைப் புரிந்துகொண்டதாகத் தன்னைக் குறித்துத் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் மந்தையின் ஓர் ஆடு அவன்.
அப்பாவுக்குப் பிடிக்காத அம்மா
ஆனால், ருக்மணியோ அவனின் உடைமைப்பொருளாகவோ அவன் கோலோச்சும் ராஜ்ஜியமாகவோ ஆக விரும்பாதவள். “நீ குமாரோடு பேசுவது எனக்குப் பிடிக்கல ருக்மா…” என ரங்கா சொல்லும் போது, “உன் அப்பாவுக்கும் உன் அம்மா வேறு ஒருவருடன் பேசுவது பிடித்திருக்காது. உன் அப்பாவின் அப்பாவுக்கும்… அவரின் அப்பாவுக்கும்…” என்பதே ருக்மணியின் அப்போதைய மன ஓட்டமாக இருக்கும். அவனுடைய வார்த்தை அவமதிப்புகளையும் பழமைவாதங்களையும் சுமந்து திரிய விருப்பமில்லாத ருக்மணி, அவன் விரும்பும் அறிவு ஜீவியான ஆனால், ஓர் எல்லைக்கு உட்பட்டவளான சுதந்திரமான, ஆனால், அவனுக்குக் கட்டுப்பட்ட மனைவியாகத் தான் இருக்க விரும்பாததால் அவனை விட்டு விலகுகிறாள். இறுதியில் சுதந்திரம் என்பதன் விளக்கம் என்ன என்பதல்ல அவள் கண்டுகொண்டது. அவள் நரம்புகளில் ஊடுருவிப் பாயும் ஓர் உணர்ச்சியை, வானில் கரும்புள்ளியாய்ப் பறக்கும் பறவையின் சிறகுகளை அவள் மாட்டிக்கொண்டு வேலிகளற்ற பெருவெளியில் ஸஞ்சாரம் செய்ய விரும்பும் வேகத்தைத்தான் அவள் இனம் கண்டுகொண்டாள் என்கிறார் அம்பை. கட்டுப்பாடுகள் விதிக்கும் காதலனையும் அவனுடைய காதலையும் தூக்கியெறியும் மனோதிடம் கொண்டவளாக இருக்கும் ருக்மணி, சிறுகதையில் பெண்ணியம் பேசிய கதாபாத்திரங்களுள் முக்கியமானவள்.